ரூ.80 லட்சம் செலவில் ஐஸ் தொழிற்சாலை; யூ.என்.எச்.சி.ஆர் நிதி ;உதவியுடன் கண்டாவளை, புன்னைநீராவியில்
கிளிநொச்சி மாவட்டத்.தில் மீனவர்களின் நலன்கருதி முதன் முதலாக யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் நிதியுதவியுடன் சுமார் 80 லட்சம் ரூபா செலவில் ஐஸ் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது
கண்டாவளைப் பிரதேசத்தில் புன்னைநீராவி என்னும் இடத்தில் ஆரம்பிக்கப்பட விருக்கும் இந்தத் தொழிற்சாலையினால் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான மீனவர்கள் நன்மையடைவார்கள்.
கண்டாவளைப் பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்த மீனவர்கள் ஐஸ்கட்டி பெற்றுக்கொள்ள வசதியில்லாததனால் பிடிக்கும் கடலுணவுகளைப் பாதுகாக்க முடியாமையாலும் அவற்றை அதிக விலைக்குச் சந்தைப்படுத்த முடியாமையாலும் பொருளாதாரரீதியில் நட்டமடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்களின் நிலைப்பாடு குறித்துக் கண்டாவளை கடற் தொழிலாளர்களின் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசம் யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்ததை அடுத்து நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து ஐஸ் தொழிற்சாலையை அமைக்க முன்வந்துள்ள மேற்படி நிறுவனம் அதற்கென 80 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்து.