புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014



நாளை வெளிவரும் கோச்சடையான் 100 வருட இந்திய சினிமாவில் சாதனை படம்: சவுந்தர்யா!
கோச்சடையான் திரைப்படம் நாளை வெளிவரவுள்ள நிலையில், கோச்சடையான்’ 100 வருட இந்திய சினிமாவின் சாதனை படம் என்று ரஜினி மகளும் அப்படத்தின் டைரக்டருமான சவுந்தர்யா கூறினார். 
அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு,

இந்தியாவிலேயே முழுமையாக நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பத்தைப் (மோஷன் கேப்சர் டெக்னாலஜி) பயன்படுத்தி முதன்முதலாக வெளிவரும் “கோச்சடையான்” திரைப்படத்திற்காக, கடந்த 6 வருடமாக மோஷன் கேப்சர் மற்றும் அனிமெஷன் டெக்னாலஜியைக் கற்றுக் கொண்டு, இத்திரைப்படத்தினை உருவாக்கியிருக்கிறேன்.
இதுவரை இந்தியத் திரையுலகம் காணாத ஒரு புதுமையாக இத்திரைப்படம் இருக்கும். ஹாலிவுட் திரைப்படங்களான 2009–ல் வெளியான ‘அவதார்’ மற்றும் 2011–ல் வெளியான ‘டின்டின்’ போல இத்திரைப்படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. 
‘கோச்சடையான்’ என்பது தமிழ்ப்பெயர். இது கதாபாத்திரத்தின் (ரஜினிகாந்த்) பெயர் என்பதால் ஹிந்தி மற்றும் இதர மொழிகளிலும் இதே பெயரிலேயே வெளிவருகிறது. கோ – என்றால் சிவபக்தன் என்றும், சடையான் என்றால் நீளமான முடியுடையவன் என்றும் பொருள் தரும். 
தந்தை ரஜினிகாந்த் தவிர, ஜாக்கி ஷெராப், தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா என்று நட்சத்திரப் பட்டாளத்தையே என்னுடைய முதல் படத்தில் இயக்குவது மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்தது. 
‘கோச்சடையான்’ பாத்திரம் ஒரு டான்சர். ‘தளபதி’யில் அப்பா ரஜினிகாந்துடன் ஷோபனா நடித்த காட்சிகள் என்னுள்ளேயே இருக்கிறது. இப்போது என் அப்பாவுடன் ஷோபனாவை இயக்குவது மிகவும் திரில்லிங்காக இருந்தது. 
என்னைப் போலவே இந்தப் படத்தில் நடித்துள்ள மற்ற கலைஞர்களுக்கும் இந்த நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பம் புதியதுதான். எனவே, ஒவ்வொரு காட்சி ஒளிப்பதிவு செய்வதற்கு முன்னும், அதுபற்றி விளக்கமாக விவரித்துவிட்டே ஆரம்பித்தோம். 
அப்பா ரஜினிகாந்த் எங்களை மிகவும் நேசிப்பவர், பாதுகாப்பவர். ஆனால் அதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் மிகவும் திறமை, தொழில்பக்தி மிக்கவர். ரசிகர்களைப் பொறுத்தவரை தங்கள் தலைவருடைய ஒவ்வொரு ஆக்ஷனையும் மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். 
பொழுதுபோக்குத் திரைப்படத்தில் இத்தகைய புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருப்பதை யாரும் குறைத்து மதிப்பிடவேண்டாம். இதன் சக்தியை திரைப்படத்தைப் பார்த்தபின் புரிந்து கொள்வார்கள். 
என்னுடைய தந்தை ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சரியான பின்னர் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி விவரித்தேன். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அப்பாவையும் அதிகம் சிரமப்படுத்தாமல் இந்தத் திரைப்படத்தை எடுக்கலாம் என்று கூறி அதன்பிறகு இப்படத்தில் நடிக்க அப்பா சம்மதத்தைப் பெற்றேன். 
என்னுடைய தந்தை ரஜினிகாந்தின் திரைப்படத்தை அனைவரும் ரசித்துப் பார்ப்பார்கள். இது புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரஜினிகாந்த் படம். கண்டிப்பாக அனைவரையும் ரசிக்கவைக்கும். இந்த புதிய தொழில்நுட்பத்தை தன்னுடைய தோளில் சுமந்து இந்தியத் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தவைத்த என்னுடைய தந்தைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
‘கோச்சடையான்’ திரைப்படக் காட்சிகளில் வரும் ஒவ்வொன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறது, செதுக்கப்பட்டிருக்கிறது. கறுப்பு, வெள்ளையிலிருந்து கலர் திரைப்படத்திற்கும் அதன் பின்னர் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் கூடிய திரைப்படங்களும் வந்திருக்கின்றன. ‘கோச்சடையான்’ 100 வருட இந்திய சினிமாவின் வளர்ச்சியைக் குறிக்கும் சாதனைத் திரைப்படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ad

ad