புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014



மணலாறு தமிழ் மக்களின் காணி மீட்பு பிரேரணை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- ரவிகரன் கேள்வி

வடக்கு மாகாணசபையின் பத்தாவது அமர்வில் தமிழரின் பூர்வீக நிலப்பகுதியான மணலாறு பிரதேசத்தில் தமிழர்களின் காணி மீட்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்ற கேள்வி வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் தொடுக்கப்பட்டது.
மேலும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நடக்கும் சட்டத்திற்கு புறம்பான கருங்கல் அகழ்வை தடுக்கும் பிரேரணை ஒன்றும் ரவிகரனால் முன்மொழியப்பட்டு சபையில் ஏகமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பான மணலாறு பிரதேசத்தில் மகாவலி அபிவிருத்தி L வலய திட்டம் மூலமும் வெலி ஓயா பிரதேச செயலாளர் பிரிவை உருவாக்கும் திட்டம் மூலமும் தமிழரின் காணிகள் பெரும்பாலான அளவு பெரும்பான்மை இனத்தவருக்கென கையளிக்கப்பட்டு வருகிறது.
1984ம் ஆண்டு இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீளக்குடியமர்வின் பின்னர் தாங்கள் முன்னர் வாழ்ந்த , பயன்படுத்தி வந்த காணிகள் வெவ்வேறு திட்டங்களுக்காகவும் பெரும்பான்மையினத்தவருக்கு கையளிக்கப்படுவதை தடுக்கமுடியாத நிலையில் பல்வேறு தரப்பினரிடமும் முறையிடத் தொடங்கினர்.
இந்நிலையில் தமிழ் மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் அவர்கள் வாழ்விடங்கள் ஆதலால் அவை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை சென்ற தை மாதம் வடமாகாணசபையில் ரவிகரனால் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அதன்பின்னரும் தமிழர் வாழும் பகுதிகள் பெரும்பான்மையினத்தவருக்கு வெவ்வேறு திட்டங்கள் மூலம் கையளிக்கப்படும் செயன்முறை நடந்த வண்ணமே உள்ளது.
இதில் பெரும்பாலானவை விவசாய நிலங்களாக உள்ள நிலையில் முன்பு தமிழர்களால் பயன்படுத்தப்பட்டது தற்பொழுது பெரும்பான்மையினத்தவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தன்னால் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட மணலாறு பிரதேச மக்களின் காணி மீட்பு பிரேரணை தொடர்பில் வடமாகாணசபையால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற வினா இன்று எழுத்துமூலமாக ரவிகரனால் தொடுக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த விவசாய அமைச்சர் மேற்படி பிரேரணை மீதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்ற வகையில் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
மேலும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வாவெட்டிமலை தட்டயமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சட்டத்திற்கு முரணான வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கருங்கல் அகழ்வு தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று ரவிகரனால் முன்வைக்கப்பட்ட பிரேரணையும் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதில்,
1.விதிக்கப்பட்ட ஆழத்தை மீறியதான அகழ்வு
2.விதிக்கப்பட்ட அகலத்தை தாண்டியதான அகழ்வு
3.அகழ்வால் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் பாதிப்புகள்
4.அகழ்விற்கு பின்னர் அப்பள்ளங்கள் நிரப்பப்படுகிறதா?
போன்ற விடயங்களை சபையினரின் கவனத்திற்கு கொண்டுவந்த ரவிகரன் முறையற்ற கருங்கல் அகழ்வுகள் தொடர்பில் பின்வரும் கருத்துக்களை சபையினருக்கு முன்வைத்திருந்தார்.
1.வாவெட்டிமலை தட்டயமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நிகழ்த்தப்படும் முறையற்ற கருங்கல் அகழ்வு தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்,
2.முறையற்ற அனுமதி வழங்கல்கள் கண்காணிக்கப்பட்டு அவற்றுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
3.அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு அப்பால் ஆழப்படுத்தியிருப்பதும் அகலப்படுத்தியிருப்பதும் கண்காணிக்கப்படுகிறதா?
4.சட்டவிரோத அகழ்வினூடாக இயற்கை ஒழுங்கமைப்புகளையும் மக்கள் குடியிருப்புகளையும் கேள்விக்குறியாக்கும் கருங்கல் அகழும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
5.முறையற்ற கருங்கல் அகழ்வையும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் கவனிக்கத்தவறும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
6.கருங்கல் அகழ்வு நிறைவு செய்யப்பட்ட இடங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அவை முறையற்ற விதத்தில் கையாண்டிருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவ்விடங்களில் கருங்கல் அகழ்வில் ஈடுபட்ட நிறுவனங்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுதலே ஒட்டுசுட்டான் பகுதியில் நடைபெறும் முறைகேடான கருங்கள் அகழ்வுகளுக்கும் தேசத்து வளங்கள் சூறையாடப்படுதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் எனவும் தனது பிரேரணை விளக்கத்தில் ரவிகரன் குறிப்பிட்டிருந்தார்.

ad

ad