16 மே, 2014

இந்தியப் பேராச்சியத்தின் முதல்வன் மோடிக்கும் உலகத் தமிழர்களின் நம்பிக்கை ஜெயலலிதா அம்மையாருக்கும் வாழ்த்துக்கள்: சிறீதரன் எம்.பி
இந்தியப் பேராச்சியத்தின் முதல்வன் நரேந்திர மோடிக்கும் உலகத்தமிழர்கள் நம்பிக்கையாம் ஜெயலலிதா அம்மையாருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் வெற்றி தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் அவரின் உத்தியோகபூர்வ இல்லமான கிளிநொச்சி அறிவகத்தில் இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உலகத் தமிழர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் பெரும் ஜனநாயகத்தின் முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி இந்தியாவின் அடுத்த பிரதமராக சவால்களையே சாதனைகளாய் மாற்றி இந்திய மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற குஜராத்தின் பூகம்ப மலர் நரேந்திரமோடி அவர்கள் அரியணை ஏறுவது கண்டும் அவர் தலைமையின் கீழ் அமையும் இந்திய பெரும் முதற்சபையில்,
தமிழர்களின் உணர்வு பூமியாம் தமிழ்நாட்டில் இருந்து தனித்தொரு பெண்ணாய் வரலாற்றுப் பக்கங்களில் சாதனைகளுக்குச் சொந்தக்காரியாய் திகழும் தமிழக முதவர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரின் வழிகாட்டலின் கீழ் நிகரற்ற பெரு வெற்றிபெற்று தமிழர்குரலாய் செல்ல இருக்கும் பெரு மாண்புக்கும் போர்நடந்த ஈழத்தமிழ் மண்ணில் இருந்து தமிழ் மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அடிமை இருளில் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் முன் ஒரு நம்பிக்கை ஒளி கீற்றாய் இந்திய பெரும் கண்டத்தில் நடந்த தேர்தலில் மக்கள் கொடுத்திருக்கும் மாற்றம் தெரிகின்றது.
காலப்பெருவெளியில் இந்திய பெருநிலமும் ஈழமும் பிணைந்திருந்த வரலாற்றின் எச்சமும் மிச்சமும்தான் ஈழத்தமிழர்களுக்கு ஒரு இன்னல் நேர்கிறபோது இதயம் வெடிக்கும் தென்னகமாம் தமிழகம் கொந்தளிக்கும் கொடுமைகண்டு உயிரும் கொடுக்கும் உன்னதம்.
இன்றுவரை தொடரும் இந்த இரத்த பிணைப்பின் முன் எவரும் எதிர்நின்று சவால் விட்டால் அதன் முடிவு என்ன ஆகும் என்பதற்கு தமிழ்நாட்டில் இத்தேர்தலின் முடிவுகள் சொல்லும் சேதி.
மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரின் அ.இ.அ.திமுகவின் இந்த பெரு வெற்றியில் முதலில் அதிகம் மனம் மகிழ்வது. தமிழர்களை தர்மத்தை ஏழைகளை நேசித்து பொன்மனச் செம்மலான அமரர் தமிழகத்தின் மாண்பு மிகு முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள்தான். அவரின்பின் அவர் தம்பிகளும் தாய்க்குலமும் மிகுந்த மகிழ்வு கொள்கின்றது.
இந்திய பிரதமராகும் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களின் கீழ் அமையப்போகும் பா.ஜ.க அரசாங்கத்தை உலகத்தமிழர்கள் ஜெயலலிதா எனும் தமிழர்களின் இதயக்கனி ஊடாக பேசும் உன்னத காலம் மலர்கிறது.
தமிழர்களுக்கு இனி ஏமாற்றம் பரிசாக ஒருபோதும் கிடைக்காது என தமிழர்கள் நம்புகின்றார்கள். நரேந்திரமோடி என்ற ஒரு மனிதனின் வாழ்வையும் அவர் தன்தாயிலும் தாய் நாட்டிலும் தனது குஜராத்திலும் வைத்திருக்கும் பற்றை தமிழர்கள் நன்கறிவார்கள்.
தமிழர்களைபோல ஒரு பீனிக்ஸ் பறவைபோல சவால்களை கண்டு சளைக்காமல் இலக்கு நோக்கி நகரும் மோடியின் அலாதியான பறப்பை தமிழர்கள் விரும்புகிறார்கள். அவரின் தன்னை சூழவுள்ளவர்கள் பற்றிய எண்ணப்பாடுகளில் ஈழத்தமிழர்களின் வரலாறு போராட்டம் இரத்தம் உயிர் இலட்சியம் பற்றிய கருவும் இருக்கும் என எண்ணுகின்றோம்.
இந்திய பெரும் கண்டத்தை நேர்த்தியாக ஆளுவதற்கு ஒரு கோடியில் இருக்கும் சிறிய இலங்கைத் தீவின் முக்கியத்துவத்தையும் அதில் இந்திய பெரும் இராச்சியத்தின் தாய் தமிழகத்தின் தொப்பூள் கொடி உறவாக இருக்கக் கூடிய ஈழத்தமிழர்களின் உணர்வுகளையும் மாண்புமிகு மோடி அவர்கள் வரலாற்று ரீதியாக உணர்ந்தவர் என்றே எண்ணுகின்றோம்.
இது ஒரு நல்ல தருணம் இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக்குமென வாய் நிறைய சொல்லி வைப்போம்.
மறைந்த மாண்புமிகு முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரை தமிழினம் அளவு கடந்து நேசித்தது. ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தால் ஒரு தீர்வுவந்திருக்கும் என்ற வார்த்தைகளை இன்றைக்கும் தமிழ் மக்கள் பேசிக்கொள்வார்கள்.
அது போலவே தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் பெருவள்ளல் எம்.ஜி ஆர் அவர்களும் தமிழர்களை தவிக்க விட்டு போய்விட்டார் கவலைகளை இப்போதும் தமிழர்கள் வெளியிடுகின்றார்கள்.
இந்த பெரும் தலைவர்களும் இந்திய ராஜ்ஜியத்தின் பலத்தின் உறவில் ஈழத்தமிழர்களின் வகிபாகத்தை நன்குணர்ந்த வல்லாளர்களாக இளகிய மனம் படைத்தவர்களாக இருந்தார்கள்.
ஆனால் இவர்களின் பின் இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக்குமான உறவில் துரதிஸ்டான விரிசல்கள் உண்டானதை இப்போது நினைப்பது பொருத்தமானது. அந்த உறவு உடைவின் தொடர்ச்சியின் விளைவு இந்திய மற்றும் தமிழக தேர்தல்களில் மக்களால் தூக்கியெறியப்பட்டவர்களின் தோல்வியாக மாறியிருக்கின்றது.
அதர்மத்திற்கு துணைநின்ற தமிழினத்தின் துரோகிகளுக்கு தர்மம் தகுந்த பாடத்தை இந்திய தேர்தலில் கொடுத்திருக்கின்றது. ஈழத்தமிழர்களின் இதயத்தில் என்றைக்கும் மாறாத வலியாக இருக்கக்கூடிய முள்ளிவாய்க்கால் பெரும் மானுட துயர் நிகழ துணைபோனவர்களை முள்ளிவாய்க்கால் நினைவு மீளும் இந்த நாட்களில் தர்மம் தூக்கியெறிந்து.
இந்திய அரியணையில் இருந்து இறக்கி இருக்கின்றது.தமிழகத்தில் தமிழர் உரிமைக்காய் உணர்வுக்காய் தமிழக சட்ட சபையில் பிரேரரணைகளை நிறைவேற்றிய மாபெரும் தலைவி ஜெயலலிதா அம்மையாரின் கட்சிக்கு மாபெரும் வெற்றியை தர்மம் கொடுத்திருக்கின்றது.
இது ஒரு நல்ல தருணம். இந்தியாவின் மீது தமிழ்மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தமிழக மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஊடாக மத்தியில் ஆட்சிபீடம் ஏறும் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களின் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கத்திற்கு மீண்டும் வாழ்த்துக்களுடன் தெரியப்படுத்துகின்றோம்.
முன்பு மாண்புமிகு அடல்பிகாரி வாஜ்பாயி அவர்கள் இந்திய முதல்வராக இருந்த காலத்தில் ஈழத்தமிழர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்ததுபோல மிகுந்த கொடுமைகள் அரங்கேறவில்லை என்பதை இங்கே நினைவு கொள்கிறோம்.
மீண்டும் பா.ஜ.கவின் ஆட்சி இந்தியாவில் மலர்கிறது. ஈழத்தமிழ் மக்களின் மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி இருக்கிறது. இனிவரும் காலத்தில் இந்திய பெரும் தேசத்தின் மனதில் புதிய மாற்றங்கள் நிகழுமென நம்புகின்றோம்.
அது நெடுந்துயர் சுமக்கும் ஈழத்தமிழர்களை அடிமை இருளில் இருந்து விடுவிப்பதாக அமையட்டும். உலகத்தமிழர்கள் என்றுமில்லாதவாறு மோடி என்ற நாமத்தையும் ஜெயலலிதா என்ற நாமத்தையும் தங்கள் பூஜை அறையில் உச்சரிக்கின்றார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.