புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2014

 காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தேர்தலில் புறக்கணிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வரலாறு காணாத மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். 



எனது அன்பார்ந்த தமிழக மக்கள் 37 தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ததன் மூலம், தங்களுடைய முழுமையான நம்பிக்கையை என் மீது வைத்திருக்கிறார்கள் என்பதனை உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளனர். அந்த நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் நான் என்றும் தமிழக மக்களின் மேன்மைக்காகப் பாடுபடுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.

''பிரசாரம் என்பதன் உட்பொருளே, தான் விரும்புகின்ற கருத்தை மற்றவர்கள் விரும்புகின்ற முறையிலும், நம்புகிற முறையிலும், பல்வேறு வகைகளில் எடுத்துச் சொல்வது தானே? இதுவே பிரசாரம் என்கின்ற பொருளுக்கு இலக்கணமாகும்'' என்றார் பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப, 24.4.2014 அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 3.3.2014 முதல் 21.4.2014 வரை நான் சூறாவளித் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன். நான் உரையாற்றிய அனைத்துத் தேர்தல் பிரசார கூட்டங்களிலும், ஊழல் புரையோடிய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும்; ஊழலில் புதிய உச்சத்தை ஏற்படுத்தியதோடு, தமிழக மக்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் துரோகச் செயல்களுக்கு துணை போன தி.மு.க.வை விரட்டி அடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். மேலும், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட; தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய; தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற்றுத் தர மத்தியில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும்; எனது கரங்களை வலுப்படுத்திட வேண்டும் என்றும், நான் தமிழக மக்களிடம் கோரிக்கை விடுத்தேன். அதாவது, பதவியை அடைய வேண்டும் என்ற தன்னலத்திற்காக அல்லாமல், தமிழக மக்கள் பயன் அடைய வேண்டும் என்ற பொது நோக்கத்திற்காக, ஒரே நிலைபாட்டினை மேற்கொண்டு நான் சூறாவளி பிரச்சாரம் செய்தேன்.

மக்கள் நலன்கள் குறித்து பேசாமல்; தங்களது கட்சி வெற்றி பெற்றால் என்னென்ன நன்மைகள் இந்திய மக்களுக்கு, குறிப்பாக தமிழக மக்களுக்கு கிடைக்கும் என்பதைப் பற்றி விளக்காமல்; மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் என் மீதும், எனது தலைமையிலான அரசின் மீதும் புழுதிவாரி இறைப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சிகளின்அர்த்தமற்ற விமர்சனங்களையும், கருத்துகளையும், பொய்ப் பிரச்சாரங்களையும் முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டும் போதாது; தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்'' என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் அமுத மொழிக்கு ஏற்ப, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நல்லாட்சி நடத்தி வரும் என் மீதும், எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீதும் நம்பிக்கை வைத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை 37 தொகுதிகளில் தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்து, எதிர்க்கட்சிகளுக்கு தக்கப் பாடம் புகட்டியுள்ளனர்.

ஆலந்தூர் இடைத் தேர்தலிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை வாக்காளப் பெருமக்கள் அமோக வெற்றி பெற வைத்துள்ளனர். மக்களுக்காகவே எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது என்பதை தமிழக மக்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை எந்த ஒரு தனிக் கட்சியும் பெறாத அளவுக்கு, 37 தொகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்தத் தேர்தல் மூலம், தமிழ் நாட்டில் மக்கள் ஆதரவு பெற்ற தனிப் பெரும் முதன்மைக் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

பெருவாரியாக திரண்டு வந்து வாக்களித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பிரம்மாண்டமான வெற்றியை நல்கிய எனது அன்பிற்கினிய தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ், ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் சுயநலவாத தி.மு.க., மற்றும் இதர சுயநல உதிரிக் கட்சிகள் இந்தத் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டு இருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. சுயநலவாதிகளை புறந்தள்ளிவிட்டு பொதுநலத்திற்கு மக்கள் வாக்களித்துள்ளதை இந்தத் தேர்தல் எடுத்துக் காட்டுகிறது. வெற்று ஆரவாரத்தால், பொய்ப் பிரசாரங்களால், தனிப்பட்ட தாக்குதல்களால் உண்மையை மறைக்க முடியாது, நியாயத்தை புதைக்க முடியாது என்பது இந்தத் தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள், கலைக் குழுவினர் மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், ஊராட்சிக் கழகச் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய முன்னாள் நிர்வாகிகள், இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுதல்களையும், இதயங்கனிந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக பாடுபட்ட தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அமைப்புகள், சங்கங்கள், மன்றங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் புதிதாக அமையவுள்ள மத்திய அரசு மூலம் நிறைவேற்றிட அயராது பாடுபடுவேன், ஓயாது உழைப்பேன் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

ad

ad