புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

8 ஜூன், 2014


Varapli
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலயத்தின், வருடாந்த வைகாசிப்பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து, அதில் ஒரு வார காலத்துக்கு விளக்கெரிக்கும் நிகழ்வு கடந்த 02.06.2014 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகியது.
முள்ளியவளை காட்டா விநாயகர் கோயிலிலிருந்து அன்று பிற்பகல் 3.00 மணிக்கு பக்தர்கள்
புடைசூழ தீர்த்தம் எடுப்பதற்காக புறப்பட்டு, சிலாவத்தைக்கடலிலேயே தீர்த்தம் எடுக்கப்பட்டது. இது காலாதிகாலமாக பின்பற்றப்பட்டு வரும் சம்பிரதாயமாகும்.
பொங்கல் நடைபெறப்போகின்றதென்பதை உபகரிப்புக்காரருக்கும் பொதுமக்களுக்கும் புலப்படுத்தும் பாக்குத்தெண்டல் நிகழ்வு இடம்பெற்ற பின்னர், பாக்குத்தெண்டியவரே தீர்த்தமெடுக்கும் வெங்கலப்பாத்திரத்தைச்சுமந்து செல்வார். தீர்த்தமெடுப்பவர் தன் வாயை வெள்ளைத்துணியால் கட்டியிருப்பார். தீர்த்தமெடுப்பவருக்கு உதவியாக இருவர் பணியாற்றுவர்.
கடலில் இறங்கி வாயூறு நீர் வரைக்கும் சென்று நிற்பர். பாத்திரத்தைத்தோளில் தாங்கி வைத்திருக்கும் போதே, கடல் அலை வந்து மூடும் போது பாத்திரம் தண்ணீரால் நிறைந்து விடும். தண்ணீர் நிறைந்த பாத்திரத்தை அங்குள்ள மடையில் வைத்துப்பூசை செய்வர்.
அதன் பின்னர் பிற்பகல் சுமார் 6.30 மணியளவில் அங்கிருந்து காட்டா விநாயகர் கோயிலை நோக்கிப்புறப்படுவர். அப்பொழுது கடற்கரை மண்ணை சிறிதளவு எடுத்துத்துணியில் முடிந்து கொண்டு இன்னொருவர் செல்ல, தீர்த்தக்குடம் வரும் வழி நெடுகிலும் மக்கள் பந்தலிட்டு மாவிலைத்தோரணம் கட்டி, நிறைகுடம் வைத்து வரவேற்பர். நிறைகுடப்பந்தல்களில் தரித்து நின்று இறுதியில் இரவு 9.00 மணியளவில் காட்டா விநாயகர் கோயிலை சென்றடைந்து விடுவர்.
அங்கு விசேட பூசை இடம்பெறும். அந்தத்தருணம் அடிக்கப்படும் ஆலய மணியின் ஓசையும் பறை ஒலியும் சேர்ந்து பரவி அப்பகுதி மக்களை மெய் சிலிர்க்க வைக்கும். தீர்த்தக்குடத்தை விநாயகர் ஆலயத்திலுள்ள அம்மன் மண்டபத்தில் இறக்கி வைப்பர். இரவு 10.00 மணியளவில் அம்மன் மண்டபத்தில் கும்பம் வைத்து (அம்மன் கும்பம்), மடை பரவி, ஒரு மட்பாத்திரத்தில் கொண்டு வரப்பட்ட உப்பு நீரை நிரப்பி, அதனைக்கடல் கரையிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட மண் மீது வைத்துத்திரியிட்டு விளக்கேற்றுவர். தொடர்ந்து ஏழு நாள்களும் கடல் நீரில் விளக்கெரியும்.
ஏழாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு விநாயகர் ஆலயத்தில் பொங்கல் நடைபெறும். மறுநாள் திங்கள் கிழமை அதிகாலை 4.00 மணிக்கு பொங்கல் பொருள்களுடன், கடல் நீரில் எரியும் விளக்கு என்பன மேள தாள வாத்தியங்களுடன் வற்றாப்பளைக்கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு எடுத்துச்செல்லப்படும். அன்று பகல் தொடக்கம் பூஜை வழிபாடுகள் இடம்பெறும். இரவு சிறப்பு பொங்கல் இடம்பெறும்.