புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2014



மோடியை ஜெ., தனியாக சந்தித்து பேசியது என்ன? :
கலைஞர் பதில்
 திமுக தலைவர் கலைஞர் கேள்வி - பதில்கள் :
கேள்வி :- தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி கட்டாயமாகி வருவதாக “தி இந்து” தமிழ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட் டுள்ளதே? 


கலைஞர் :- 17-6-2014 அன்று “தி எகானமிக் டைம்ஸ்” ஆங்கில நாளிதழ் ஒன்று “பிரதமர்  நரேந்திர மோடி அவர்களின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை - சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வெளியானதும் நான் உடனடியாக அதுபற்றி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு, பிரதமர் அவர்கள் உடனடியாக அதுபற்றி கவனம் செலுத்த வேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும் என்று தெரிவித்திருந்தேன். 
இந்த அறிக்கைக்குப் பிறகு பிரதமர் அலுவலகம் “சமூக வலைத் தளங்களில் இந்தி மொழி தொடர்பு மொழியாக, இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும்” என்றும், “இந்தி பேசாத மாநிலங்களில் எந்த மாற்றமும் இருக்காது” என்றும் தெரிவித்திருந்தது. மேலும் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு அவர்களும் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எந்த மக்கள் மீதும் மொழியைத் திணிக்க முடியாது, பா.ஜ.க.வைப் பொறுத்தவரை சமூக வலைத் தளங்களில் அலுவலக மொழியாக இந்தியைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் தாய்மொழிக்கான உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே பா.ஜ.க. வின் நிலைப்பாடு!” என்று தெரிவித்தார். 
இந்தச் செய்திக்குப் பிறகுதான் தற்போது தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மத்திய அரசு  அலுவலகங் களில் இந்தி மொழி கட்டாயமாகி வருகிறது என்றும், இந்தி பயிற்சிக்குச் செல்லாத மற்றும் தேர்வு எழுதாத 11 ஊழியர்களுக்கு “மெமோ” கொடுக்கப்பட்டுள்ளது என்றும், வருகைப் பதிவேடு, அரசு ஆணைகளிலும் இந்தி புகுந்திருப்பது மத்திய அரசு அலுவலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இன்று (30.6.2014) செய்தி வந்துள்ளது. 
மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம். துரைபாண்டியன் இது பற்றிக் கூறும்போது, “மத்தியில் புதிதாக அமைந்துள்ள அரசு, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று வருகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்கனவே செயல்படாமல் இருந்த இந்தி மொழி மையத்தை மீண்டும் செயல்படுத்த உத்தர விட்டுள்ளது. இந்த விவகாரத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கான தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவிடம் முன்வைக்க உள்ளோம்” என்று  தெரிவித்திருக்கிறார். எனவே மத்திய அரசும், பிரதமர் அவர்களும் இந்தப் பிரச்சினையில் மீண்டும் கவனம் செலுத்தி, இந்தி பேசாத மக்களிடம் எழுந்துள்ள கலக்கத்தைப் போக்க முன் வரவேண்டு மென்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி :- முல்லைப் பெரியாறு, பரம்பிக் குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு ஆகிய நான்கு அணைகளும் கேரளாவுக்கே சொந்தம் என்று மீண்டும் கேரள முதலமைச்சர் தெரிவித் திருக்கிறாரே? 
கலைஞர் :- இதைத்தான் நான் 27-6-2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந் தேன். கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் உம்மன் சாண்டி, “முல்லைப்பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான்உள்ளது. அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை. 2009ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும், தமிழ்நாட் டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

இதைத்தான் நான் குறிப்பிட்டு, கேரள முதலமைச்சர் இவ்வாறு கேரள சட்டசபையில் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கேரள முதலமைச் சருக்குப் பதில் சொல்லாமல், அவர் இப்படி சொல்லியிருக்கிறாரே என்று கேட்ட என்னை எந்த அளவுக்கு நாகரிகமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சித்து, “பின் குறிப்பில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டால் இயக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன” என்ற வார்த்தைகள் உள்ளன என்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றார். 
ஆனால் நேற்றையதினம் (29-6-2014) கேரள முதலமைச்சர் திரு. உம்மன் சாண்டி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “4 அணைகளும் தங்களுக்கே சொந்தமானவை என்று தமிழ்நாடு உரிமை கொண்டாடுவது தவறானது. அந்த அணைகள் தமிழ்நாட்டால் இயக்கி, பராமரிக்கப்பட்டு வந்தாலும், அவற்றுக்கு தமிழ்நாடு சொந்தம் கொண்டாட முடியாது. இரு மாநிலங்களுக்கு இடையே செய்து கொண்ட உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள விதிமுறைப்படி, முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், துணக்கடவு அணைகளை தமிழ்நாடு பராமரித்தும், பரிபாலனை செய்தும் வருகிறது. அண்டை மாநிலமான தமிழ்நாட் டுடன் கேரளா நல்லுறவைப் பராமரிக்க விரும்புகிறது. இந்த விவகாரத்தில் கேரளா தேவையற்ற சர்ச்சையில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டவில்லை. 
இந்தப் பிரச்சினையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தேசிய பேரணைகள் பதிவேட்டில் நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தமானவை என்றே பதிவாகி உள்ளது” என்று பதில் கூறியதாக “தினத்தந்தி”, “தினமணி” போன்ற நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனவே ஜெயலலிதா பதில் கூற வேண்டியது கேரள முதல் அமைச்சருக்கு தானே தவிர, என்னிடம் கோபப்பட்டு ஆத்தி ரத்தைக் காட்டவேண்டிய அவசியமில்லை. கேரள முதல்வரின் இன்றைய பதிலுக்குப் பிறகாவது தமிழக முதல மைச்சர் “அரைவேக்காடு அவர்தான்” என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். 
கேள்வி :- தமிழ்நாட்டில் ஒரு திருநங்கை முதன் முதலாக பொறியியல் கல்லூரியில் இடம்
பெற்றிருக்கிறாரே?  
கலைஞர் :- கிரேஸ் பானு என்ற திருநங்கை; ப்ளஸ் 2 படித்த நேரத்தில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட போதிலும், பல சிரமங்களைக் கடந்து, அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் பொறியியல் கல்லூரியில் படிக்க தேர்வு பெற்றிருக்கிறார். பாராட்டுதற்குரிய செய்தி - கிரேஸ் பானுவுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்!

கேள்வி :- அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கடி புதிய பேருந்துகளை முதல்வர் இயக்கி வைத்தார்  என்ற செய்திகள் புகைப்படத்தோடு வருகிறதே? 
கலைஞர் :- இந்த முறை 463 புதிய பேருந்து களை முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார்;
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பேருந்தினைத் துவக்கி வைத்தால், மேலும் பல முறை இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாகச் சொல்லிக் கொள்ளலாம். பத்தி ரிகைகளுக்கும் புகைப்படத்தோடு கூடிய செய்தி யினை அளிக்கலாம். 
கேள்வி :- குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை விலைக்கு வாங்காமல், “கமிஷன்” கருதி அதிக விலை கொடுத்து தமிழக அரசு மின்சாரத்தை வாங்குவதாகச் சொல்லப் படுகிறதே?

கலைஞர் :- தமிழகத்தில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ. 3.10க்கு வழங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் தமிழக மின்சார வாரியம், காற்றாலை மின்சாரத்தை வாங்க மறுத்து, எரிவாயு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ. 14 என்ற விலைக்கு வாங்குவதாக புகார் கூறப்படுகிறது. கடந்த 23 நாட்களில் மட்டும் இவ்வாறு எரிவாயு மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதால் 126 கோடி ரூபாய் மின் வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. ஆனால் மின்வாரியத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம் சரியாக இல்லை. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

கேள்வி :- அ.தி.மு.க. அரசு சார்பில் பத்து இடங்களில் “அம்மா” மருந்தகங்களை முதல மைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்திருக் கிறாரே?  
கலைஞர் :- அடுத்த அறிவிப்பினை நீங்கள் பார்க்கவில்லையா? தமிழகத்தில் 100 இடங்களில் “அம்மா வெற்றிலை-பாக்கு கடை”களைத் திறந்து வைத்து, அந்த வியாபாரத்தை அமைச்சர்களே முன் நின்று நடத்தப் போகிறார்களாம்! 
கேள்வி :- ஸ்ரீஹரிகோட்டாவிற்குச் செல்வதற்காக சென்னை வந்த பிரதமரை, தமிழக  முதலமைச்சர் வரவேற்றது பற்றி? 
கலைஞர் :- ஒரு மாநிலத்திற்கு குடியரசுத் தலைவரோ, பிரதமரோ வருகை தந்தால் அந்த மாநில முதலமைச்சர் சென்று வரவேற்பதும், வழியனுப்பு வதும் மரபு. ஆனால் உங்கள் கேள்வியில் ஒரு அர்த்தம் உள்ளது. அதை “இந்து” நாளிதழ் கூட வெளியிட்டுள்ளது. 

அதாவது அண்மைக் காலங்களில் பிரதமர் மன்மோகன் சிங் வருகை தந்த நேரத்திலோ, அல்லது அவரை வழியனுப்புகின்ற நேரத்திலோ ஜெயலலிதா மூத்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அனுப்பு வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் அப்போது மத்திய, மாநில உறவுகள் அவ்வளவு சரியாக இல்லை என்றும் “இந்து” எழுதியிருக்கின்றது. எப்படியோ பிரதமர் மோடி அவர்களை, தமிழக முதல் அமைச்சர் விமான நிலையம் சென்று வரவேற் றதோடு, 15 நிமிட நேரம் இருவரும் தனியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள் என்றும் செய்தி வந்துள்ளது. ஆனால் தமிழக முதலமைச்சர் பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி பிரதமரிடம் கோரிக்கை வைக்கத்தான் தனியாகச் சந்தித்தார் என்று நீங்கள் நிச்சயமாக நம்ப வேண்டாம்.

ad

ad