1 ஜூலை, 2014ட்சிக்கு மோடி, கட்சிக்கு அவரது வலதுகரமான அமித்ஷா என்பது பா.ஜ.க.வில் உறுதியாகி விட்டது என்கிறார்கள் தலைநகரில் உள்ள பொறுப்பாளர்கள். அதற்கு வசதியாகத்தான் அவர் மீதான போலி என்கவுன்ட்டர் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. நீதிபதி ஜே.டி.உட்பட் மாற்றப் பட்டிருக்கிறார் என்றும் தெரிவிக்கி றார்கள். குஜராத் மாநிலத்தில் மோடியின் அமைச்சரவையில் உள்துறை இணையமைச்சராக இருந்தவர் அமித்ஷா. அம்மாநிலத்தில் ஷெராபுதீன் ஷேக் மற்றும் துள்சி ப்ரஜாப்டாய் ஆகியோர் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதில் அமித்ஷாவுக்குத் தொடர்பு உண்டு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆட்சியதிகாரம் உள்ள சொந்த மாநிலத்தில் வழக்கு நடந்தால் விசாரணையும் தீர்ப்பும் சரியாக அமையாது என்பதால் இந்த வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. அங்கு அதை விசாரித்து வந்தவர்தான் நீதிபதி உட்பட்.

நாடாளுமன்றத் தேர்தல் பல கட்டங்களாக நடந்து கொண்டிருந்த நிலையில், மே 9-ந் தேதியன்று அமித்ஷாவுக் கும் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மற்றவர்களுக்கும் சம்மன் அனுப்பியிருந்தார் நீதிபதி. ஆனால், அமித்ஷா ஆஜராகாத துடன், அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டும் என்றும் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அமித்ஷாவுக்காக அவரது வக்கீல் வாய்தா கேட்பது வழக்க மான ஒன்றாகிவிட்டது. கடந்த வாரம் நடந்த விசாரணையின் போது, அமித்ஷாவின் வக்கீலிடம் கோபத்தை வெளிப்படுத்திய நீதிபதி உட்பட், ""ஒவ்வொரு முறையும் உங்கள் கட்சிக்காரர் (அமித்ஷா) ஆஜ ராவதிலிருந்து விலக்கு கேட்டு மனு செய்கிறீர்கள். ஆனால், அவர் ஏன் வரமுடிய வில்லை என்ற காரணத்தைச் சொல்வதில்லை'' என சற்று கடுமையாகவே சொல்லியிருந்தார். கடந்த புதனன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோதும் அமித்ஷா ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜூலை 2-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி. இந்நிலையில்தான், நீதிபதி உட்பட் மும்பை சி.பி.ஐ நீதிமன்றத்திலிருந்து திடீரென புனே சி.பி.ஐ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். 

நாட்டை ஆளுகின்ற கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்கவிருப்பவர் மீது கொலைக் குற்றச் சாட்டுக்குரிய போலி என்கவுன்ட்டர் வழக்கு இருந்தால் அது நரேந்திரமோடியின் இமேஜுக்கு பெரும் சவாலாகிவிடும். எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்யும். அதனால்தான் வழக்கை விசாரித்த நீதிபதி மாற்றப்பட்டிருக்கிறார். புது நீதிபதி நியமனம், அதனைத் தொடர்ந்து வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரும் அமித்ஷா மீதான விசாரணை உள்பட அனைத்தும் விரைந்து நடைபெறும் என சாதகமான குரலில் பேசுகிறார்கள் மும்பையிலும் டெல்லியிலும் உள்ள பா.ஜ.க நிர்வாகிககள். 

சி.பி.ஐ.யின் நீதிபதி மட்டுமல்ல, இந்த வழக்கு சி.பி.ஐ.யின் விசாரணைக்குள் வருவதற்கு காரணமாக இருந்தவருக்கும் நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது மோடி அரசு. குஜராத் போலீசாரின் பிடியில் இருந்த ஷெராபுதீன் 2005ஆம் ஆண்டு நவம்பர் 22 அன்று என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதைப் பற்றிய வழக்கை குஜராத் போலீசாரே விசாரித்தனர். குற்றச்சாட்டுக்குரியவர்களின் துறையே விசாரிப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில் அப்போதைய மத்திய அரசில் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த கோபால்சுப்ரமணியத்தை அமிக்ஸாக நியமித்து குஜராத்திற்கு அனுப்பியது. ஷெராபுதீன் என்கவுன்ட்டர் திட்டமிட்டு நடத்தப் பட்டிருப்பதையும், இதில் அரசுக்கு நெருக்கமான ஒருவருக்கும் போலீசுக்கும் சம்பந்தமிருப்பதையும், அரசுடன் நெருக்கமானவரை (அமித் ஷா) காப்பாற்றும் முயற்சியில் குஜராத் போலீசார் செயல்படுவதாகவும் ஆதாரங்களுடன் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய கோபால் சுப்ரமணியம் இந்த வழக்கை குஜராத் போலீஸ் விசாரிக்காமல் வேறு அமைப்புகள் விசாரிக்கவேண்டும் என்றார். வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தருண்சாட்டர்ஜி, அப்துல் ஆலம் ஆகியோர் கோபால் சுப்ரமணியத்தின் வாதத்தை ஏற்றனர். குஜராத் போலீசிடமிருந்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாறியது.

இதனால் மோடிக்கும் அவரது சகாக்களுக்கும் கோபால் சுப்ரமணியம் மீது தணியாத கோபம் இருந்து வந்தநிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான நீதிபதிகள் நியமனக்குழு, 4 பேர் கொண்ட நீதிபதிகளின் பரிந்துரை பட்டியலை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியது. அதில், கோபால்சுப்ரமணியம் தவிர மற்ற மூவருக்கும் ஏற்பளித்த மத்திய சட்ட அமைச்சகம், 2ஜி வழக்கில் ஆ.ராசாவின் வழக்கறிஞரை சி.பி.ஐ அதிகாரிகளோடு கோபால்சுப்ரமணியம் தனது வீட்டில் சந்திக்க ஏற்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது நியமனத்திற்கு மட்டும் ஏற்பளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் கோபால்சுப்ரமணியத்திற்குத் தொடர்பில்லை என உளவுத்துறை கடந்த மே மாதமே ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. அப்படியிருந்தும் அமித்ஷா மீதான குற்றச்சாட்டின் பிடியை இறுகச் செய்தவர் கோபால்சுப்ரமணியம் என்பதால் அவரைப் பழி வாங்கியிருக்கிறது மோடி அரசு என்கிறார்கள் தலைநகர சட்ட வல்லுநர்கள்.

பிரான்ஸ் நாட்டில் தற்போது இருக்கும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் பிரபல வழக்கறிஞருமான அபிஷேக்சிங்வியை நக்கீரன் தொடர்புகொண்டபோது, ""பரிந்துரைத்த பெயரைத் திருப்பி அனுப்ப ஒரு முறை மட்டுமே சட்ட அமைச்சகத்துக்கு உரிமை உண்டு. குற்றச்சாட்டு உண்மை யில்லை எனத் தெரிந்தால் நீதிபதிகள் நியமனக்குழு மீண்டும் பரிந்துரைக்கலாம். அப்போது கோபால் சுப்ரமணியம் நீதிபதியாவார்'' என்றார். கோபால்சுப்ர மணியமோ, ""அரசுப்பதவி எனக்கு ஒத்து வராது. வழக்கறிஞராக, சுதந்திரமாக இருக்கும் என்னால் கட்டுப்பாடுகள் நிறைந்த பதவியை ஏற்பது மிகக் கடினம். எனது பெயரை மீண்டும் பரிந்துரைக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டாம்'' என விரக்தியுடன் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அமித்ஷாவைக் காப்பாற்றுவதற்காக நீதிபதியை இடமாற்றம் செய்து, வழக்கறிஞரின் அடுத்தகட்ட உயர்வுக்குத் தடைபோட்டு தீவிரமாக செயல்படுகிறது மோடி அரசு. 

குஜராத்திலிருந்து மும்பைக்கு மாற்றப் பட்ட அமித்ஷா மீதான வழக்கைப் போலவே, தமிழகத்திலிருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டதுதான் ஜெ. உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. இந்த வழக்கு விசாரணையின்போது இறுக்கமாகக் காணப்பட்ட ஜெ. தரப்பு வழக்கறிஞர்கள், கடந்த சில நாட்களாக ரொம்பவும் ரிலாக்ஸாக இருக்கிறார்கள். வழக்கில் ஒரு மனுதாரரான பேராசிரியர் அன்பழகன் சார்பில் ஆஜராகும் தி.மு.க வழக்கறிஞர் களை ஏறிட்டுப் பார்த்து அலட்சியமாக சிரிக்கிறார்களாம் அ.தி.மு.க வழக்கறிஞர்கள். 

இது பற்றி நம்மிடம் பேசிய தி.மு.க வக்கீல்கள், ""கோர்ட்டில் வக்கீல்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதிலிருந்தே அவர்களின் மனநிலையைத் தெரிந்துகொள்ள முடியும். ஆரம்பத்தில் தயங்கித் தயங்கிப் பேசிய ஜெ.வின் வக்கீல், கடந்த புதன் கிழமையன்று தன்னுடைய வாதம் முடிந்ததும் எங்களைப் பார்த்து, "பெங்களூரில் நீங்கள் இருப்பதால் எதுவும் பெருசா நடக்கப் போவதில்லை. சென்னைக்குக் கிளம்புங்க'ன்னு சொன்னார். இத்தனை நம்பிக்கையாக அவர் சொன்னதிலிருந்து ஏதோ சில மூவ்கள் நடந்திருக்கிறது என்பதை மட்டும் எங்களால் யூகிக்க முடிந்தது'' என்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்துவரும் நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவின் கறாரான நடவடிக்கைகள் ஜெ. தரப்பை ரொம்பவே அச்சுறுத்தி வந்தது. வழக்கில் சம்பந்தப் பட்டுள்ள நிறுவனங்கள் சார்பில் தங்களை விலக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவைக் காரணம் காட்டி, மெயின் வழக்கின் விசாரணையைத் தடுக்க சுப்ரீம் கோர்ட் வரை சென்ற ஜெ. தரப்பின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதிவாதத்தைத் தொடங்கி நடத்தவேண்டிய நிலைதான் ஏற்பட்டது. இந்தச் சூழலில் தான், மும்பை சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி உட்பட் போல பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவும் மாற்றப்படலாம் என்றும் அதனை எதிர்பார்த்தே அ.தி.மு.க வக்கீல்கள் தரப்பு தெம்பாக இருக்கிறது என்றும் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

கர்நாடக மாநில சட்டத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ""பிரதமரின் அலுவலகத்தில் பலவித ஆலோசனைகள் நடைபெறுகின்றன. அதன் தொடர்ச்சியாக மற்ற முக்கிய அலுவலகங்களிலும் ஆலோசனைகள் நடக்கின்றன. கடந்த வாரத்தில் மத்திய நிதித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்களுடன் கர்நாடக நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் சந்திப்பு நடத்தியிருக்கிறார்கள். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர், உங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த புள்ளி'' என்றவர்கள் மேலும் சில தகவல்களையும் நம்மிடம் தெரிவித்தனர்.

சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்புக் கோர்ட்டின் நீதிபதியாக ஜான் மைக்கேல் டி குன்ஹாவை நியமித்தது கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி மஞ்சுநாதா கமிட்டி. சிறப்பு கோர்ட் நீதிபதியை மாற்றும் அதிகாரமும் இந்த கமிட்டிக்கு உண்டு. நீதிபதி மஞ்சுநாதா பதவி உயர்வில் பஞ்சாப் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விருக்கிறார். அந்த நீதிமன்றத்தில் உள்ள நீதிபதி கவுல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜூலையில் பதவியேற்கவுள்ளார். பஞ்சாபிலிருந்து சென்னைக்கு கவுல் வருவது உறுதியாகிவிட்டது. ஆனால், மஞ்சுநாதா கர்நாடகத்திலிருந்து பஞ்சாபுக்கு செல்வது இன்னும் உறுதியாகவில்லை. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான பிறகு, உச்சநீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பும் மஞ்சுநாதாவுக்கு இருக்கிறது. இது தொடர்பான மூவ்களை மத்திய சட்டத்துறை அமைச்சகமும் பிரதமர் அலுவலகமும்தான் கவனிக்கும் என்று பொதுவான நடைமுறைகளையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். 

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர், ஜெ.வின் சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பான மனுக்களுக்காக அவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானவர். ராஜ்யசபையில் மோடி அரசின் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றித் தருவதற்கு அ.தி.மு.க.வின் 10 எம்.பி.க்களின் ஆதரவு அவசியமானதாக இருக்கிறது. இதையெல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள் தலைநகரில் உள்ள சட்டம் அறிந்தவர்கள். 

குஜராத் முதல்வராக இருந்தபோதே லோக் ஆயுக்தா நீதிமன்றத்திற்கான நீதிபதிகளை நியமிப்பதில் அம்மாநில கவர்னர் கமலா பெனிவாலுடனும், குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகோ பாத்யாவுடனும் வெளிப்படையாக மோதியவர்தான் நரேந்திரமோடி.  அவருடனான ஜெ.வின் அரசியல் நட்பு காரணமாக, அமித்ஷா வழக்கில் நீதிபதி உட்பட் மாற்றப்பட்டது போல, சொத்துகுவிப்பு வழக்கின் நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹாவும் மாற்றப்படுவார் என்பதே அ.தி.மு.க தரப்பின் புதிய மகிழ்ச்சிக்குக் காரணம். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்பபை குன்ஹாவுக்குப் பதில் வேறொரு நீதிபதிதான் வழங்குவார் என்று தெம்பாகவே சொல்கிறது அ.தி.மு.க வக்கீல்கள் தரப்பு.