1 ஜூலை, 2014
.தி.மு.க.வினருக்கு இது ஆகாத காலம் போலும். மானாமதுரை எம்.எல்.ஏ. குண சேகரன், நாகர்கோயில் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், திருச்சி துணைமேமர் ஆசிக் மீரான் என பலரும் காமக்கறைகளால் பெயரைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இதோ இராமநாதபுரம் தேவிப்பட்டணம் ஜெ.பேரவைச் செயலாளர்  கணேசமூர்த்தியோ, தோஷம் கழிப்பதற்காக உற்றார் உறவினர்களுடன் வந்த ஒரு இளம் தாயைத் தனிமைப்படுத்தி, நிர்வாணப்படுத்தி, தோஷப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப் பட்டிருக்கிறார். 

""அந்த கணேசமூர்த்தி, அம்மா பேரவைச் செயலாளர் மட்டுமில்லீங்க. தேவிப்பட்டணம் பேரூராட்சி யின் முதலாம் வார்டு கவுன்சிலரும்கூட. அவரு இப்படியொரு சின்னத்தனத்தை செஞ்சிட்டு உள்ளே போனது தேவிப்பட்டணத்துக்கே ஒரு அசிங்கம், தோஷம்'' தேவிப்பட்டணம் வியாபாரி ஒருவர் காறித் துப்பாத குறையாகச் சொன்னார்.

தலைச்சன் மகன் பிறந்து சிலநாட்களே ஆகியிருந்தன. சந்தோஷத்தில் மிதக்க வேண்டிய அந்த இளம்தாயோ எதை எதையோ நினைத்து நினைத்து வேதனையில் வெம்பிக்கொண்டிருந்தார்.

""கொழந்தை கொடி சுத்திப் பொறந்ததால் தாய்மாமன் உசுருக்கும், தகப்பன் ஆயுளுக்கும் கெடுதின்னு சொல்றாகளே?''


""சொல்றதென்ன, அதுதாண்டி நெஜம். ஆனால் எல்லாத்துக்கும் பரிகாரம் இருக்குது. நம்ம கீழச்செவல் பட்டிக்கி பக்கத்துல கல்லங்குத்துனு ஒரு ஊர். அந்த ஊர்ல பழனியப்பன்னு குறிசொல்ற சாமியாடி  இருக் காரு. அவர்ட்ட போய்க் கேளு. பரிகாரத்தை பளிச்சினு சொல்லுவாரு'' பக்கத்து வீட்டு பாட்டி சொன்னார்.

துணைக்கு இரண்டு பேரை கூட்டிக்கொண்டு கல்லங்குத்து போனார் அந்த இளம்தாய்.

""தேவிப்பட்டணம் போ. நவபாஷாணம்னு சொல்ற கடல் நவக்கிரகங்களுக்கு பரிகார பூஜை பண்ணு. அங்கேயிருந்து இராமேஸ்வரம் போ. 22 தீர்த்தத்திலயும் நீராடு. பூஜை பண்ணு. இதையெல்லாம் நீயா செய்ய முடியாது. தேவிப்பட்டணம் தேங்காய்க்கடை செல்வத்துக்கும், இராமேஸ்வரம் தேங்காய்க்கடை மணிக்கும் லெட்டர் தர்றேன். கொண்டுபோய் அவங்ககிட்ட கொடு. பூஜைகளுக்கு அவங்க ஏற்பாடு செய்வாங்க'' குறியும் சொல்லி, கடிதமும் கொடுத்தார் கல்லங்குத்து பழனியப்பன்.

தன் பிறந்த வீட்டு உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு தேவிப்பட்டணம் சென்றார் இந்த இளம்தாய். அங்குதான் தனது ஆபாச சேட்டையை அரங்கேற்றி யிருக்கிறார்.

நடந்ததை அந்த இளம்தாயே நம்மிடம் விவரித்தார்.

""என் புருஷன் கொஞ்ச நாள் முந்திதான் வெளி நாட்டுக்குப் போயிருக்காக. அவுக உசுருக்கும் நான் பொறந்த வீட்டுக்கும் எந்த ஆபத்தும் வந்திறப்பிடாதுனுதான் கல்லங்குத்து பூசாரியைப் பார்க்கப் போனோம். அவன், தேவிப் பட்டணத்துலதான் தோஷம் போக்கணும், அதுவும் ராத்திரியில 7 மணிக்கு மேலதான் பூஜை பண்ணணும்னு எழுதிக் குடுத்துட்டான். அந்தக் கடுதாசிய எடுத்துக்கினு  தேவிப்பட்ட ணத்துல செல்வம்ங்கிற தேங்காய் கடைக்குப் போனோமா... செல்வம் மகன் கற்பூரசுந்தரம்தான் கடையில் இருந்தாரு. அவரு இந்த எச்சிப்பொறுக்கி நாயை (கணேசமூர்த்தி) பரிகார பூசை பண்றதுக்கு எங்ககூட அனுப்புனாரு.

நவக்கிரக நவபாசாண சிலைகள் இருக்கிற இடத்துக்குப் போகும்போது ராத்திரி எட்டுமணி இருக்கும். பூசையை ஆரம்பிச்ச இந்த நாய் திடுதிப்னு என்கூட இருந்த சொந்தக்காரங்களைப் பார்த்து "பூசை பண்ணும்போது நீங்க இங்குன இருக்கப்பிடாது. மேல மேடையில போய் அந்தப் பக்கம் பார்த்தபடி சிவாய நமஹ... சிவாய நமஹனு சொல்லிக்கிட்டே நில்லுங்க. பூஜை முடிஞ்சதும் கூப்பிடுறேன் வரலாம்'னு சொல்லி அனுப்புனான். அனுப்பிவிட்டு ஒரு கிளியஞ்சிட்டியை (மண் அகல்விளக்கு)  என்கிட்டக் குடுத்து புள்ளைப்பாலு கேட்டான். திரும்பிக்கினு எடுத்துக் குடுத்தேன். 

அப்புறம் நவக்கெரகத்தை சுத்த ஆரம்பிச்சோம்.  அப்ப இவன் சொன்னான், "உன் சீலையை உறிஞ்சு கீழே போட்டுட்டு, பொறந்த மேனியோடு சுத்து'னு சொன்னான்.  முடியாதுனு சொன்னேன். நவபாஷாணத்தோட மகிமை தெரியாதா....? உன் புருஷனும், அண்ணன்-தம்பியும், நீ பெத்த புள்ளையும் உசுரோட இருக்கணும்னா சீலையை அவுத்துப்போடு'னு சொல்லி கையில இருந்த செப்பு நாகத்தை என் கண்ணுக்கு நேரா காட்டிக் காட்டிப் பயமுறுத்துனான். சத்தியமா நான் பயந்துட்டேன். எப்படி நான் அவிழ்த்தேன்னே தெரியலை. அவன் தன்னோட கைல வச்சிருந்த செப்பு நாகத்தால என்  உடம்புல "தோஷம் கழியணும்'னு சொல்லிக்கிட்டே 108 தடவை மேலயும் கீழயுமா தடவி னான். என் குடும்பத்துக்காக, சாமியை நெனைச்சுக்கினு பொருமிக்கிட்டே இருந்தேன். அப்புறம் சேலையைக் கட்டிக்கினு வெளியே வந்து வேன்ல உக்கார்ந்தேன். அது வரைக்கும் எனக்கு நடந்த அசிங்கத்தை யார்ட்டயும் நான் சொல்லல. "சீக்கிரம்... சீக்கிரம் கிளம்புங்க. இராமேஸ்வரம் போயி அங்கேயும் பூஜை பண்ணணும்'னு சொந்தக்காரவுக சொல்லும்போதுதான் "இங்கே நடந்த ஆக்கினை அசிங்கம் பத்தாதா? அங்கேயும் போய் என்னை சீரழிக்கப் போறீங்களா'னு கேட்டபடியே அழுதேன். நடந்ததை, அந்தப் பாவியோட கெட்ட எண்ணத்தையும் சொன் னேன். இராமேஸ்வரம் போகாம ஊருக்கு வந்துவிட்டோம்'' திக்கித் திணறி சுமார் 2 மணிநேரத்தில் இந்தத் தகவல்களைச் சொன்னார் அந்த இளம்தாய்.

ஊர் வந்த மறுநாள், தேவிப் பட்டணம் காவல் நிலையத்திற்கும், தேங்காய்கடை கற் பூரசுந்தரத்திற்கும் போன் செய்து தகவலைச் சொன்னார் அந்த இளம்தாயின் உறவினர் ஒருவர். அதற்கு மறுநாள்தான் அ.தி.மு.க. கணேச மூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கிறான்.

கணேசமூர்த்தியை பரிகார பூசை செய்ய அனுப்பிய தேங்காய்கடை, கற்பூரசுந்தரத்தை தொடர்பு கொண்டோம்.

""அந்த அயோக்கியன் கணேசமூர்த்தி செய்ததை கேள்விப்பட்டதும் என் உடம்பே தீப்பத்தி எரிஞ்சமாதிரி எரிஞ்சது. புகார் குடுக்கிறதுக்காக போலீசுக்கு ஓடுனேன். அதுக்குள்ள ஊர்ல இருந்து போன் வந்திருக்கு. உடனே அவனை போலீஸ் புடுச்சிருச்சு'' சொன்னார் கற்பூரசுந்தரம்.

தேவிப்பட்டணம் மற்றும் இராமேஸ்வரத்தில் பரிகார பூசை செய்யும் அத்தனை பூசாரிகளையும் காவல்துறை தன் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். இல்லை யேல் பாவம் போக்கும் இப் புண்ணியத்தலங்களே பாபத் தலங்களாகிவிடும்.