1 ஜூலை, 2014


அமெரிக்க போர்க்குற்ற சட்டத்தின் அடிப்படையில் பாதுகாப்பு செயலாளர் தண்டிக்கப்படலாம்!- த ரைம்ஸ் - கோத்தாவுக்கு எதிராக சரத் பொன்சேகாவை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி?
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச,  அமெரிக்காவின் யுத்தக்குற்ற சட்டவிதியின் கீழ் தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்று அமெரிக்காவின் த ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவின் குடியுரிமை கொண்டவர்.
அவர் இலங்கையில் இராணுவத்தில் பணியாற்றிய பின்னர் 1990ம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வந்திருந்தார்.
2005ம் ஆண்டு மூத்த சகோதரரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உதவுதற்காக அவர் மீண்டும் இலங்கை திரும்பிய போதும், அவர் அமெரிக்காவின் குடியுரிமையை கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த போர்க்குற்ற விசாரணைகளில் இலங்கை அரசாங்கத்தின் வகிபாகம் உறுதி செய்யப்பட்டால், கோத்தபாய ராஜபக்சவுக்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமை கொண்ட ஒருவர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,  1996ம் ஆண்டு அமுலாக்கப்பட்ட போர்க்குற்ற சட்டத்தின் கீழ் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் இதுவரையில் அமெரிக்காவினால் யாருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோத்தாவுக்கு எதிராக சரத் பொன்சேகாவை பயன்படுத்த அமெரிக்கா முயற்சி?
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் சாட்சியாளராக, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்கா பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான இரகசிய நடவடிக்கைகளை அமெரிக்கா, கொழும்பில் உள்ள தமது தூதரகத்தின் ஊடாக மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே பொன்சேகா அரசாங்கத்துடன் இணைந்திருந்த வேளையில், அமெரிக்காவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது ஒல்கோஹோமா நகர பாதுகாப்பு திணைக்களம், சரத் பொன்சேகாவை விசாரணைக்கு அழைத்திருந்தது.
எனினும் இந்த விசாரணைக்கு ஒதுக்கப்பட்டிருந்த தினத்துக்கு முன்னதாகவே அமெரிக்காவில் இருந்து வெளியேறி விட்டதாகவும், கோத்தபாயவின் உத்தரவின் பேரிலேயே அவர் அங்கிருந்து வெளியேறியதாகவும், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது கோத்தபாய ராஜபக்ச மீதான குற்றச்சாட்டுகளுக்கு சரத் பொன்சேகாவை சாட்சியாக பயன்படுத்திக் கொள்ள அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.
எனினும் அரசாங்கத்துடன் நட்புறவை பேணியதால், சரத் பொன்சேகா இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.
ஆனால் தற்போது இரண்டு தரப்புக்கும் இடையில் விரோதம் ஏற்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகாவை சாட்சியாக பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியை அமெரிக்கா மீண்டும் கையில் எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.