புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2014

ஐ.நா. குழுவின் ஆலோசகர்கள் தொண்டு நோக்கிலேயே பணி 
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளர் அலுவலகத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் விசாரணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்கவென நியமிக்கப்பட்டிருக்கும் மூவரும், தொண்டு அடிப்படையிலேயே அந்தப்
பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
 
கடந்த மார்ச் மாதம் நடை பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு அமைவாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கையில் நடை பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசாரணைக் குழுவொன்றை அமைத்துள்ளது.
 
அந்த விசாரணைக் குழுவுக்கு ஆலோசனைகளை வழங்கும் பொருட்டு, ஐ.நா. மனித உரி மைகள் ஆணையாளர் நவ நீதம்பிள்ளை இவ்வாறான செயற்பாடுகளில் அனுபவம் மிக்க, வல்லுநர்கள் மூவர் அடங்கிய குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளார். அந்தக் குழு, விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ.நா. விசாரணைக்குழுவுக்கு நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கும்.
 
சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளவரும், பின் லாந்து அரசின் முன்னாள் 
ஜனாதிபதியுமான மார்ட்டி அத்திசாரி, நியூஸிலாந்தின் முன்னாள் ஆளுநர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜெஹாங்கீர் ஆகியோரே அந்தக் குழுவில் அடங்கியுள்ளனர்.
 
இந்த மூன்று வல்லுநர்களும் இந்தப் பணிகளைத் தொண்டு அடிப்படையிலேயே மேற்கொள்ளவுள்ளனர். இந்தப் பணிகளுக்காக எதுவித வேதனம் அவர்கள் பெற்றுக்கொள்ளப் போவதில்லை. இவர்கள் விசாரணைக் குழுவின் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவர்கள்.
 
அதேவேளை, இவ்வாறான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில், அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மான வரைவில், ஆலோசனைக் குழு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. 
 
ஆயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐ.நா.விசாரணைக் குழுவுக்கு மேலதிகமாக, ஆலோசகர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
ஐ.நா. விசாரணைக் குழு மட்டும் அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும்பட்சத்தில், அதனைச் சர்வதேச விசாரணை என்று குறிப்பிட முடியாதிருக்கும் என்பதுடன் அதன் நம்பகத் தன்மை குறித்தும் கேள்வி எழுப்பப்படும். 
 
ஐ.நா.விசாரணைக் குழுவுக்கு மேலதிகமாக நிபுணத்துவம் கொண்டவர்களைக் கொண்டு ஆலோசனைக் குழு அமைக்கப்படும் பட்சத்தில், விசாரணைகள் தொடர்பிலான தரம் உயர்வதுடன், அதன் நம்பகத் தன்மையும் பாதுகாக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்போது சுட்டிக்காட்டியது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துகளை கவனத்தில் எடுத்த அமெரிக்கா தனது இறுதி வரைபில் குறித்த விடயத்தையும் உள்ளடக்கி, தீர்மானத்தைச் சமர்ப்பித்திருந்தது. 
 
அந்தத் தீர்மானத்துக்கு அமைவாகவே மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் தற்போது மூவர் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது. அதன்மூலம் காத்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ad

ad