புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மனிதநேயம் மிக்க, வரலாறு படைக்கும் தீர்ப்பு: கி.வீரமணி அறிக்கை
தண்டனை காலத்தில் பாதிக்குமேல் அனுபவித்த விசாரணை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு மனிதநேயம் மிக்க வரலாறு படைக்கும் தீர்ப்பாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.





இதுதொடர்பாக 06.09.2014 சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெள்ளிக்கிழமை 5.9.2014 உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பு மனிதநேயம் மிக்க, வரலாறு படைக்கும் ஒரு தீர்ப்பாகும். இதற்காக உச்சநீதிமன்றத்தைப் பாராட்டுகிறோம்.

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ள முழு விசாரணை - அல்லது விசாரணையே நடைபெறாது “ரிமாண்டை” - தற்காலிகக் காவலை - நீட்டித்துக் கொண்டே பல ஆண்டுகள் சிறையில் கழிக்கும் இள  வயதுடையவர்கள் (பெரிதும்) எண்ணிக்கை  2 லட்சத்திற்கும் அதிகமாகும் என்பது நம் நாட்டு ஆட்சியாளர்களுக்கோ, நீதிபரிபாலனம் நடத்தும் அமைப்புகளுக்கோ பெருமை தரும் ஒன்றாக ஆகாது.

‘அக்கைதிகள்’  - விசாரணைக் கைதிகள்’ என்று அழைக்கப்படும் (Undertrial Prisoners)  பலரும், குற்றங்கள் ஏதும் செய்யாமல் சிக்கிக் கொண்டவர்கள் அல்லது சிக்க வைக்கப்பட்ட பகடைக் காய்களே ஆவர்.

சிறைச்சாலைகளுக்குச் சென்று நிலவரத்தை அறிந்தவர்களும் அதனை ஆய்வு செய்தவர்களும்தான் இது ஒரு முக்கிய சமூகப் பிரச்சினை என்பதைப் புரிந்து கொண்டு, இதற்கு ஒரு நல்ல தீர்வு காணுவது அவசியம் என்று கருத முடியும்.

விசாரணையின்றி இருக்கக் கூடியவர்கள் பலரையும் ‘சந்தேகக்கேஸ்’ என்ற பெயரிலும், வீட்டை விட்டு ஓடி வருபவர்கள், புதிதாகத் திருட்டு போன்ற குற்றங்களிலும் அனுபவபட்டவர்களின் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்ட அப்பாவிகள், இவர்கள் திருந்தி வாழ உதவிட முடியாத அளவுக்கு சிறைக்குள்ளே நடக்கும் பல்வேறு நடத்தைகளும், ஒழுங்கீனங்களும் அவர்களை ஆக்கி விடுகின்றன.

ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்கள்தான் சிறைக்குள் மூத்த முன்னோடிகளும், செல்வாக்கு உள்ளவர்களும் ஆவார்கள். அவர்கள் இந்த சிறு இளைஞர்களை உள்ளே வந்தவுடன் மிரட்டி, தங்கள் எடுபிடிகளாக்கிக் கொள்வதோடு அவர்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒழுக்கத் தவறுகளும்  (Sodamise)  சர்வ சாதாரணமாக்கும் வெட்ககரமான நிலைதான்! சிறைக்குள்ளே பணப் புழக்கம், போதை (கஞ்சா) போன்றவை உள்ளதால், இந்த இளவயது விசாரணைக் கைதிகளை அத்தீய வழக்கத்திற்கு அடிமையாகும் சூழ்நிலை திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது.

விடுதலை ஆகிச் செல்லவிருக்கும் இளைஞர்கள் பலர், நான் திரும்பி வந்து விடுவேனுங்க, இங்கே கிடைக்கிற வாழ்வும், வாய்ப்பும் எங்களுக்கு வெளியே கிட்டுமா என்பது சந்தேகம் என்றுகூட, வெளிப்படையாக (‘மிசா’ காலத்தில் எங்களுக்கு பணி செய்த இந்த விசாரணைக் கைதிகள், அல்லது குறைந்த தண்டனை பெற்றவர்கள், கூறியதை நேரில் கேட்டு அதிர்ந்து போனோம்). இவர்களை விடுதலை செய்தால் சிறையில் கூட்டமும், குறையும்; சிறை நிர்வாகமும் செம்மையான அளவில் நடக்க வாய்ப்பு ஏற்படும். இவர்களை வெளியே அனுப்பினால் மட்டும் போதாது. 

இது ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையானபடியால், அத்தகையவர்களுக்குரிய தொழில் கற்றுத் தருதல், அல்லது வேலை வாய்ப்புத் தந்து, வெளியே வந்த அவர்கள் கண்ணியமான முறையில் வாழுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் திட்டங்களைப் பற்றியும் ஆராய்ந்து செயல்படுத்த முன் வர வேண்டும்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. பிரதமர் மோடி அவர்கள்  ‘Corporate Social Responsibility’ பெரிய கம்பெனிகள் சமூகப் பொறுப்பாளர்களாக மாறிடும் திட்டம் என்று கூறுகிறாரே, அதில்கூட இதனையும் இணைத்து அத்தகைய இளைஞர்களை ‘மனிதம்’ பூத்துக் குலுங்கும் நல்ல மனிதர்களாகவும் மாற்றிட யோசிக்க வேண்டும்.

ad

ad