புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014

ஐ.நா. சபையில் ராஜபக்சே பேசுவதைக் கண்டித்து செப்டெம்பர் 9 ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : வைகோ

ம.தி.மு.க. தலைவர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில் :
மனித குல வரலாற்றில் மன்னிக்க முடியாத இனப்படுகொலையை

ஈழத்தமிழர்கள் மீது ஏவிய சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே, அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி ஆவான். நெஞ்சை நடுநடுங்கச் செய்யும் கோரப் படுகொலைகளை பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், வயது முதிர்ந்தோர், தாய்மார்கள், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் அனைவர் மீதும் கட்டவிழ்த்து விட்டு, கணக்கிட முடியாத வகையில் எண்ணற்ற தமிழ்ப் பெண்களை நாசமாக்கிப் பேரழிவு நடத்தியது சிங்கள அரசு என்பதை, ஐ.நா. மன்றத்தின் மூவர் குழு அறிக்கை, 2010 ஆம் ஆண்டிலேயே ஆதாரங்களோடு வெளியிட்டது.

இலண்டன் சேனல் 4 தொலைக்காட்சி ஊடகம் வெளியிட்ட இசைப்பிரியா படுகொலைக் காட்சியும், எட்டு இளம் தமிழ் இளைஞர்கள் அம்மணமாகக் கட்டி இழுத்து வரப்பட்டு உச்சந்தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியும், பச்சிளம் குழந்தை பாலச்சந்திரன் படுகொலையும், மனசாட்சி உள்ள இதயங்களை உலுக்கி விட்டன.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்ற படுகொலைச் சம்பவங்களை, மனித உரிமை மீறல்களை விசாரிக்க சுதந்திரமான அனைத்துலக விசாரணை நடைபெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. அந்த அடிப்படையில் ஐ.நா. வின் மனித உரிமை ஆணையம், மார்ட்டி அட்டிசோரி உள்ளிட்ட மூவர் விசாரணைக் குழுவை அறிவித்தது. ஆனால், ஐ.நா. விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டேன் என்று ஆணவத்தோடு ராஜபக்சே கொக்கரிக்கிறான்.

2009 இல் ஈழத்தமிழரைப் படுகொலை செய்த இலங்கை அதிபர் இராஜபக்சேவை, முன்னைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழர்கள் சிந்திய இரத்தம் உலர்வதற்கு உள்ளாகவே, இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கும், உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கும் சிறப்பு விருந்தினராக வரவேற்றபோது அதை எதிர்த்துப் போராடினோம்.

மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு ராஜபக்சே வந்தபோது, சாஞ்சிக்கே அணிவகுத்துச் சென்று அறப்போர் நடத்தினோம். மீண்டும் டெல்லியில் அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களைச் சந்திக்க வருவதை அறிந்து, பிரதமர் இல்ல முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். ராஜபக்சே திருப்பதிக்கு வந்தபோது, ஆயிரக்கணக்கான தோழர்கள் அங்கும் சென்று கருப்புக் கொடிப் போராட்டம் நடத்தினோம்.

அண்மையில் மே மாதம், நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்பு விழாவின்போது, ராஜபக்சே பங்கேற்றதை எதிர்த்துத் தலைநகர் டெல்லியில் கருப்புக்கொடிப் போராட்டம் நடத்தினோம்.

ஐ.நா. மன்றத்தில் ராஜபக்சே பேச அனுமதிக்கக் கூடாது; ஐ.நா. மன்றம் அமைத்த விசாரணைக் குழுவை இந்தியாவில் தமிழ்நாட்டில் விசாரணை மேற்கொள்ள இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு ஈழத்தமிழர்களின் பூர்வீகத் தாயகத்திலும், புலம் பெயர்ந்தோர் வாழும் நாடுகளிலும் நடத்தப்பட வேண்டும்.

சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும். சிறையில் வதைபடும் ஈழத்தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழக மீனவர்களுக்கு நாளும் கேடு செய்யும் சிங்கள அரசின் கொட்டத்தை ஒடுக்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டெம்பர் 9 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, காலை 11.00 மணி அளவில், தலைநகர் சென்னையில், வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கழகக் கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன் என அவர் கூறியுள்ளார்.

ad

ad