புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2014


வெள்ளி நகைகள் எங்கே?

‘‘இந்த வழக்கின் எதிர் மனுதாரரான ஜெயலலிதாவின் அசையும் சொத்துகள் அனைத்தும் இந்தநீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதைப் பார்த்து தீர்ப்பு வழங்குவதுதான் முறையாக இருக்கும்’’ என்று டிசம்பர் 12 ஆம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொன்னார். அதனை அடுத்து மீண்டும் வழக்கு டிசம்பர் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, ‘‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் சென்னையில் இருந்து பெங்களூரு கொண்டுவந்துவிட்டோம். அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இனி வழக்கின் இறுதிக்கட்ட வாதத்தைத் தொடரலாமா?’’ என அரசு வழக்கறிஞர் பவானிசிங்கைப் பார்த்துக் கேட்டார்.


அதற்கு அரசு வழக்கறிஞர் பவானிசிங் அமைதியாக இருந்தார். இதைத் தொடர்ந்து ஜெ. தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர், ‘‘கொண்டுவரப்பட்ட சொத்துகள் பற்றிய விவரப் பட்டியல் வேண்டும்’’ என்றார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி குன்ஹா, ‘‘கோர்ட் ஆவணங்களில் உள்ள சொத்துக்கள்தான் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அந்த விவரப்பட்டியல் அனைவரிடமும் இருக்கிறது. அதனால் அந்த பட்டியலை கொடுக்க வேண்டியது இல்லை’’ என்றார்.

அதையடுத்து, ‘‘எங்களுக்கு சில சொந்த வேலைகள் இருப்பதால், வழக்கை ஒரு வார காலம் தள்ளிப்போட வேண்டும்’’ என்றார் மணிசங்கர். அதற்கு சம்மதம் தெரிவித்து நீதிபதி குன்ஹா, ‘‘வழக்கை ஒத்திவைக்கிறேன்’’ என்றார். வழக்கு விசாரணையின்போது ஜெ. தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

3.2.2014 அன்று கோர்ட் கூடியது.

நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வந்ததும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நான்கு பேரும் ஆஜராகாததற்கு விலக்குக் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்காததால் நீதிபதி அந்த மனுவை ஏற்றுக்கொண்டார்.

அரசு வழக்கறிஞர் பவானிசிங் நீதிபதியிடம் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.55 லட்சத்து 80,000 மதிப்புள்ள 1,116 கிலோ வெள்ளி பொருட்களை, ஜெயலலிதாவின் ஆலோசகரான சென்னை கொட்டிவாக்கம் கற்பகம்பாள் நகரைச் சேர்ந்த பாஸ்கரன், சென்னை நீதிமன்றத்தில் இருந்து பெற்றுச் சென்றார். நீதிமன்றம் கேட்கும்போது அந்தப் பொருட்களை ஒப்படைப்பதாகக் கூறியிருந்தார். இந்தப் பொருட்களை பெங்களூரு கோர்ட்டில் ஒப்படைக்க அவருக்கு உத்தரவிட வேண்டும். அந்த நகைகளை, அரசு தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்ட வாசுதேவன் என்ற நகை மதிப்பீட்டாளரைக் கொண்டு நீதிமன்றத்தில் குறியீடு செய்ய வேண்டும்’’ என்றார்.

ஜெ தரப்பு வழக்கறிஞர் குமார் கடும் ஆட்சேபணைத் தெரிவித்து, ‘‘இந்த மனு மீது பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் வேண்டும்’’ என்றார்.

நீதிபதி குன்ஹா, ‘‘இந்த வழக்கை விசாரிக்க நான் சம்பளம் வாங்குகிறேன். இது மக்களின் பணம். வழக்கை இழுத்தடித்து காலதாமதம் செய்ய என் மனசாட்சி இடம் அளிக்கவில்லை. இந்த வழக்கு 17 ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தினமும் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்’’ என்றார்.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், ‘கோர்ட்டில் மார்க் செய்யாத 149 நினைவு பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அதைத் திருப்பித்தர வேண்டும்’ என்று ஒரு மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் இயக்குநர் சண்முகம் சார்பில், அவரின் வழக்கறிஞர் தியாகராஜன், இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுகள் மீதான விசாரணையை 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

பிப்ரவரி 5 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தி.மு.க-வின் பேராசிரியர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞரும் தர்மபுரி தொகுதி எம்.பி-யுமான தாமரைசெல்வன், ஒரு புதிய மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘அரசு வழக்கறிஞர் பவானி சிங் பிப்ரவரி 3 ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில் 1,116 கிலோவெள்ளி பொருட்கள் ஜெயலலிதாவின் ஆலோசகர் பாஸ்கரன் என்பவரிடம் உள்ளதாகவும், அதை நீதிமன்றத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று கூறியிருந்தார். மனுவில் குறிப்பிட்டுள்ள பாஸ்கரன் என்பவர் கடந்த 2013 டிசம்பர் 3 ஆம் தேதி இறந்துவிட்டார். அந்த செய்தி தினசரி நாளேடுகளில் வந்திருக்கிறது (அதற்கான ஆதாரத்தையும் இணைத்திருந்தார்). இந்த விவரம் தெரிந்தும் வேண்டும் என்றே உண்மையை மறைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, இந்த வழக்கை இதற்கு முன் விசாரணை நடத்திய நீதிபதி பாலகிருஷ்ணா முன் ஆகஸ்ட் 23 முதல் 26 ஆம் தேதி வரை அரசு வழக்கறிஞர் பவானிசிங் வாதம் செய்தார். அப்போது பாஸ்கரன் உயிருடன் இருந்தார். அப்போது வெள்ளிப் பொருட்களை கொண்டுவர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் ஏன் மனு தாக்கல் செய்யவில்லை. பாஸ்கரன் இறந்துபோன தகவல் அரசு வழக்கறிஞருக்கு எப்படி தெரியாமல் போனது?

நீதிபதி பாலகிருஷ்ணா முன் நான்கு நாட்கள் வாதம் செய்த அரசு வழக்கறிஞர், வழக்கு தொடர்பான ஆவணங்களை படிக்காமலும் முழுமையாக தெரிந்துகொள்ளாமலும் வாதம் செய்தாரா அல்லது வழக்கை தாமதப்படுத்தும் உள்நோக்கத்தில் செயல்படுகிறாரா என்று சந்தேகம் வருகிறது.

ஆகவே, வெள்ளிப் பொருட்களை கொண்டுவர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது நீதிமன்றத்துக்கு உகந்ததாகக் கருதப்படும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

நீதிபதி குன்ஹா அரசு வழக்கறிஞரைப் பார்த்து, ‘‘இதற்கு என்ன சொல்கிறீர்கள்’’ என்றார்.

அரசு வழக்கறிஞர் பவானிசிங், ‘‘எனக்கு முழு விவரம் தெரியாது. தகவல் பெற்று தெரிவிக்கிறேன்’’ என்றார்.

நீதிபதி குன்ஹா: ‘‘இந்த மனு மீதான ஆட்சேபணையை 6 ஆம் தேதிக்கு தாக்கல் செய்யலாம்’’ என்று அரசு மற்றும் ஜெ தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ad

ad