புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2015

இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ‘ஜனாதிபதி தேர்தல்’ நாளை (08) நாடு
முழுவதும் நடாத்தப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். வாக்களிப்பு காலை 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் வாக்காளர்கள் இயலுமானவரை காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்கு சமுகமளிக்கு மாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
வாக்காளர்கள் தமது வாக்காளர் அட்டையுடன் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் அடையாள அட்டையையும் அண்மையில் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டை உடன் கொண்டு வந்திருந்தால் மாத்திரமே வாக்களிக்க முடியுமென்பதனை கவனத்திற்கொள்ள வேண்டுமெனவும் அவர் நினைவுறுத்தினார்.
தேர்தலில் வாக்களிப்பது உங்கள் உரிமை என்பதனால் அந்த உரிமையை எக்காரணம் கொண்டும் தவறவிட வேண்டாமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் 07வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இம்முறை 19 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை 22 தேர்தல் மாவட்டங்கள் மற்றும் 160 தேர்தல் தொகுதிகளிலிருந்து இம்முறை ஒரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாளைய தினம் நாடு முழுவதும் 12 ஆயிரத்து 314 வாக்கெடுப்பு நிலையங்களில் தேர்தல் நடத்தப்படவுள்ள அதேநேரம் ஆயிரத்து 419 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
தேர்தலில் வாக்காளர்கள் தாம் விரும்பிய வேட்பாள ருக்கு இடும் இரகசிய சின்னம் பிறர் அறியாத வகையில் பாதுகாக்கப்படுமெனக் கூறிய தேர்தல்கள் ஆணையாளர் வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நிலையங்களிலும் சி.சி.டீ.வி கமராக்களின் உபயோகம் இல்லையெனவும் உறுதியாகத் தெரிவித்தார்.
வாக்களிப்பு நிலையத்தில் சி.சி.டீ.வி கமராக்கள் பொருத்தப்படுவதால் அடையாளமிடப்படும் சின்னத்தை பிறர் அறிந்து கொள்ள முடியுமென பரவிவரும் செய்தி வெறும் வதந்தியெனவும் வாக்காளர்கள் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் வாக்காளர்கள் வாக்களிப்பினை முடித்துக் கொண்டு இயலுமானவரை விரைவில் வாக்களிப்பு நிலையத்தை விட்டு வெளியேறுவது தேர்தல் பணிகளை கிரமமாக பின்பற்றுவதற்கு இலகுவாகவிருக்குமெனவும் அவர் கூறினார்.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கும் வாக்காளர்களின் பாதுகாப்பையும் நாட்டின் அமைதியையும் உறுதிப்படுத்தலை தேர்தல் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் பணிகளில் 71 ஆயிரம் பொலிஸார், கடமையிலீடுபடுத் தப்படவுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கலகமடக்கும் பொலிஸாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் முறைகேடுகள் இடம்பெறாத வகையில் வெற்று வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வது முதல் தேர்தல் பெறுபேறுகளை வெளியிடும் வரையிலான அனைத்துப் பணிகளும் ஒரே தொடர்ச்சியாக கிரமமானதும் நுட்பமானதுமான முறையில் செயற்படுத்தப்படுவதனால் மக்கள் பரவலாக பேசுவதுபோல் வாக்குப் பெட்டிகளை மாற்றுதல், கள்ள வாக்களித்தல் என்பன இடம்பெறுவதற்கு எவ்வித சந்தர்ப்பமும் இல்லையெனவும் அவர் உறுதியளித்தார்.
ஏதேனும் சந்தர்ப்பத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்வதற்கு தடைகள் அல்லது அச்சுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்குமாயின் குறித்த நிலையத்தின் வாக்கெடுப்பு ரத்துச் செய்யப்பட்டு வேறு ஒரு தினத்தில் வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படு மெனவும் அவர் எச்சரித்தார். இதேவேளை எக்காரணம் கொண்டும் தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் அரசாங்க அதிகாரிகள் எந்தவொரு வேட்பாளருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ பயந்தோ பக்கச்சார்பாகவோ நடந்துக் கொள்ள மாட்டார்களென்பதனை பொறுப்புணர்வுடன் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரினதும் ஐந்து பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிற்பகல் சுமார் 4 மணிக்குப் பின்னரே வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துவரப்படவுள்ள போதிலும் சுமார் மூன்று மணி முதல் வேட்பாளருக்கு ஒரு பிரதிநிதி வீதம் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்க உத்தியோகத்தர்கள் எண்ணும் வாக்குகளில் காலதாமதம் அல்லது சந்தேகம் இருப்பின் அவற்றை திரும்ப எண்ணுமாறு வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கோரமுடியும். அத்துடன் கணக்கிடப்பட்ட பெறுபேறுகளின் பிரதிகள் அனைத்தும் பிரதிநிதிகளுக்கும் விநியோகிக்கப்படும். அவர்கள் கைய¦ழுத்திட்ட பிரதிகள் என்னை வந்தடைந்த பின்னரே இறுதிப் பெறுபேறுகளை நான் வெளியிடுவதால் ‘கம்யூட்டர் ஜில்மல்’ ஏற்படுவதற்கு இடமிருக்காதெனவும் அவர் தெரி வித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் முடிவுற்ற நிலையில் இன்றும் (7) நாளையும் (8) எவ்விதமான ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணை யாளர்கள் வேட்பாளர்களிடமும் கட்சி ஆதரவாளர் களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ad

ad