புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2015

வாழு, வாழவிடு!

ஒரு நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமானால் அந்நாட்டில் "வாழு,   வாழவிடு'
என்ற உயரிய  கோட்பாடு நடைமுறையிலிருத்தல் வேண்டும். அதாவது தானும் நல்லபடியாக நிம்மதியாக வாழ்வதைப்போன்று ஏனையவர்களும் பிரச்சினைகளின்றி தம்மைப்போல வாழ வழிவிட்டு, தடையேற்படுத்தாது வாழும் நாகரிக சிந்தனையே அதுவாகும். இக்கோட்பாடு தனிமனிதனுக்கு பொருந்துமாப்போன்று நாடுகள், நாடுகளிலுள்ள இனக்குழுக்கள், மொழிப்பிரிவினர், சமயப் பிரிவினர் அனைவருக்குமே பொருந்தும். மிருகங்களிலிருந்து வேறுபட்டு பகுத்தறியும் ஆற்றல்மிக்க மனிதகுலம்"வாழு, வாழவிடு' என்ற கோட்பாட்டை உதாசீனம் செய்வதாலேயே இன்று உலகில்  பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு மனித உரிமைகள் மீறப்படுகின்றன. நிம்மதி அற்றுவிடுகின்றது. இதற்கு நம் நாடும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. கசக்கும் இந்த உண்மையை மறைக்க முடியாது, மறைக்கவும் கூடாது. இன முறுகல் என்ற  நோயைக் கண்டறிந்து ஏற்ற சிகிச்சை செய்ய விடின் நாம் பாவிகளாவோம். தர்ம துவீபம் என்று வாயளவில் வர்ணிக்கப்படும் நம் நாட்டில் கடந்த முப்பதாண்டுகளாக இடம்பெற்ற பயங்கரவாதப் போர் முடிவுற்று விட்டதாகக் கூறுகின்றார்கள். வரலாற்று ரீதியாகக் கணிப்பீடு செய்யும்போது இனங்களுக்கிடையேயான யுத்தம் ஆயுதம் இன்றி ஆரம்பிக்கப்பட்டு அறுபது ஆண்டுகளோடிவிட்டன. மனச்சாட்சியுடன் சிந்தித்தால் உண்மை விளங்கும். முதலிலே இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமைகள் பறிக்கப்பட்டு இனவேறுபாடு  ஏற்படுத்தப்பட்டது. அடுத்து தமிழ்மொழியுரிமை பறிக்கப்பட்டு இரண்டாவது இன உறவு சிதைக்கப்பட்டது. தொடர்ந்து காலத்திற்குக் காலம் தமிழ் மக்களுக்கெதிராக இனவெறிப் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட அடாவடித்தனங்களைப் பட்டியலிடலாம். நாட்டின் பல பாகங்களிலும் நிம்மதியாக வாழ்ந்த, சிங்கள மக்களுடன் உறவுடனும், உரிமையுடனும் வாழ்ந்த, தமிழ் மக்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டனர். சொத்து, சுகங்கள் பறிக்கப்பட்டன. சிலவேளைகளில் உயிர், உடலுறுப்பு, உறவுகள்  எனப்பல சூறையாடப்பட்டன. இவையெல்லாம் வரலாற்றுப் பதிவுகளாகவுள்ளன. முப்பதாண்டுகளுக்கு முன்னரான முப்பதாண்டு முரண்பாடுகளே பின்னைய முப்பதாண்டு நிகழ்வுகளுக்கு அடித்தளமமைத்தன என்ற உண்மை  மறைக்கப்பட்டு விட்டது. இதுவே தப்புகளும், தவறுகளும் தொடர்வதற்கான ஏதுவாகும்.  "புதியதோர் உலகம் செய்வோம். கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் என்ற கூற்றிற்கமைய சிந்தித்து, எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமெனில் அதற்கு "வாழு, வாழவிடு' என்ற கோட்பாடு கடைப்பிடிக்கப்பட வேண்டும். நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அதுவே இந்த நாட்டின் எதிர்காலத்தை வளப்படுத்தும். உலகின் ஆச்சரிய நாடாக உயர்த்தும். இந்த உண்மையைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அற்ற, சிந்திக்கும் திறனற்ற அரசியல் அரங்காடிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு விடிவுகாலம் என்றோ? அடக்கியாள்வதே ஜனநாயகம். பெரும்பான்மையினரின் ஆட்சி ஜனநாயகத்தில் பொய், புரட்டு, உருட்டு, வஞ்சம், குரோதம் உட்பட பஞ்சமாபாதகங்களைச் செய்தாலும் அது தவறல்ல. அதுவே ஜனநாயக அரசியல் வழிமுறை.  உண்மையை மறைத்தால் தனிமனிதனுக்குத் தண்டனையுண்டு. அரசியரலங்காடிகள் உண்மையை மறைத்து பொய்யை, புனைகதைகளை, இனவாதத்தைக் கட்டவிழ்த்துவிடலாம். அது தவறில்லை என்பதான நிலை நிலவுகின்றது. இந்த கேடுகெட்ட நிலையால் பாதிக்கப்படுவது நாட்டு மக்களே என்ற உணர்வு அற்றுவிட்டது. இனப்பகையால் பாதிக்கப்பட்ட சமூகம் மட்டுமல்ல மற்றைய  சமூகமும் பாதிக்கப்படுகின்றது. நிம்மதி இழக்கின்றது. அச்சத்தில் ஆழ்கின்றது., அதைப் பயன்படுத்தி அரசியலரங்காடிகள் ஆதாயமும் பெறுகின்றனர்.  இன்றைய நாட்களில் அதைக் கண்கூடாகக் காணமுடிகின்றது. எது எவ்வாறிருப்பினும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையேயான உறவை வலுப்படுத்த தேவைக்கு முன்னுரிமை கொடுபட வேண்டும். அதுவே நல்லாட்சி அமைய வழிவகுக்கும். இல்லையேல் இதுவரை நாடு நடந்த, தொடர்ந்த தவறான பாதையில் தொடரும் நிலையே நிலவும். முதலிலே, நாட்டின் சகல மக்களும் இன, சமய, மொழி வேறுபாடுகளின்றி சமத்துவமாகக் கணிக்கப்பட்டு, உரிமைகளுடன் வாழும் நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கான முன்மொழிவுகளாகப் பாதிக்கப்பட்ட தமிழ்  மக்கள் பின்வருவனவற்றை முன்வைக்கின்றனர் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்யாது ஏற்று, நடைமுறையில் உறுதிப்படுத்தும் பண்பட்ட ஆட்சி மலர்வது மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை வளப்படுத்தும் . நாட்டிலே தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களில் எவரது அச்சுறுத்தலுமின்றி நிம்மதியாக வாழும் வகை செய்யப்படவேண்டும். இதுகாலவரை சொந்த இடங்களிலிருந்து  வெளியேறி அநாதைகளாக, அகதிகளாக வாழ்வோரின் மனக்குறை தீர்க்கப்பட வேண்டும். இந்த மண் எமது சொந்த மண் என்ற மனநிலை ஏற்படாதவரை நாட்டுப்பற்று எவ்வாறு ஏற்படும். மனித  நாகரிகத்தின் முக்கிய அளவுகோல் மொழி, மொழியின்றேல் மூச்சில்லை. பேச்சில்லை என்பர். நம் நாட்டின் அரசியலமைப்பில் தமிழ் மொழிக்கும் நிர்வாக உரிமை வழங்கப்பட்டுள்ளபோதும் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தடையேற்படுத்தலும், தட்டிப்ப றித்தலும்,  புறக்கணித்தலும் தாராளமாகவே இடம்பெறுகின்றன. இந்நாட்டின் அரசியலமைப்பின் மூலம்  தமிழ்மொழிக்கு   வழங்கப்பட்டுள்ள உரிமை நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை அளவீடு செய்து உறுதிப்படுத்தவுள்ள ஒரே வழி தமிழரொருவர் தனது அன்றாடக் கடமைகளையும், அரசாங்கத் தொடர்புகளையும் எதுவித தயக்கமோ, தாமதமோ இன்றி உரியபடி தனது தாய்மொழியான தமிழ்மொழியில் ஆற்றிக்கொண்டு திருப்தியடையும் நிலை இருத்தல் வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பது உலகம் ஏற்றுக்கொண்ட கோட்பாடு. இந்நாட்டில் தமிழ்மொழி உரிமை மறுக்கப்பட்ட நிலைபொதுவாக நிலவும்போது எவ்வாறு இந்நாடு நம் நாடு என்ற நம்பிக்கை கொள்ள வழி பிறக்கும்? நாட்டுப்பற்று ஏற்படும்? நாட்டின் அரசுத்துறையில் தொழில் வாய்ப்பு தமிழருக்கு அருகிவிட்டது. மக்கள் தொகை வீதாசார அளவில்கூட வழங்கப்படுவதில்லை. அதற்குத் தக்க எடுத்துக்காட்டாக தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சால் தெரிவு செய்யப்பட்ட சமூக அபிவிருத்தி அலுவலர் என்ற பதவிக்குரிய இருநூற்றி ஐந்து பேரில் இருவர் மட்டுமே தமிழர்கள் என்பதுள்ளது. சமூகங்களிடையே நல்லுறவை உருவாக்கும் பொறுப்பு கொண்ட ஒரு அமைச்சிலேயே இவ்வாறு தொழில் வழங்குவதில் தமிழர் புறக்கணிக்கப்படுகின்றார்களென்றால் ஏனையவற்றின் நிலை எவ்வாறிருக்கும்? தமிழர்களுக்கு அரச தொழில் வாய்ப்பு பெறும் வழி தடுக்கப்படும்போது, மறுக்கப்படும்போது, தகைமையிருந்தும்  புறக்கணிக்கப்படும்போது இந்நாடு நம்நாடு,  நாம் தொழில் செய்து வாழ வழியுள்ள நாடு என்ற மனப்பக்குவம் எப்படி ஏற்படும்? யார் உருவாக்குவார்கள்? நாட்டிலே பல்வேறு துறையினருக்கும் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்  என்கின்றனர். ஆனால், குறைந்த சம்பளத்துடன் பல÷“வறு இடர்பாடுகளுக்கு மத்தியிலேயே வாழும் மலையகப் பெருந்தோட்டத் தமிழ் மக்களின்  வாழ்வாதாரம், பொருளாதார நிலை, அவர்களுக்கும் பசியுண்டு, வாழ வழிதேவை என்பவற்றைப் பற்றிச் சிந்திக்காத, கவனிக்காத நிலையுள்ளபோதும், அதேபோல் பெருந்தோட்டங்களிலுள்ள மாதச் சம்பளம் பெறும் பதவிகள் மறுக்கப்பட்டு வெளியார் நியமனம் செய்யப்படும்போதும் எவ்வாறு இந்நாடு நம் நாடு என்ற உணர்வு ஏற்படும்? கல்வியிலே குளறுபடி, வரலாற்றுப் பாடத்தில்  இலங்கைத் தீவிலிருந்த யாழ்ப்பாணம், வன்னி மற்றும் மண்முனை அரசுகள் அவை தமிழ் அரசுகளாக இருந்தமையால் மறைக்கப்படும் கீழ்த்தர சிந்தனை.  நாட்டின் வரலாற்றில்  தமிழர்கள் அகற்றப்பட்டு அந்நியப்படுத்தப்படும் போது எவ்வாறு இன உறவுக்கு வழி செய்யும். அரசியலமைப்பின் மூலம் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடும் உரிமையை மறுக்கும். வக்கிரமான, கீழ்த்தரமான  சிந்தனையுடன் செயற்படும்போது நாடு எப்படி உருப்படும்?  தமிழ் மொழிக்கு முதன்மை நிர்வாக மொழியுரிமையுள்ள கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் அதுவும் தமிழ் மொழித்தின ஆரம்ப  நிகழ்வின்போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதைத் தடை செய்த இனவெறி  அரச அலுவலரின் செயல் போன்றவற்றால் நாட்டில் சுமுக உறவு ஏற்படுமா? சிங்கள , தமிழ், உறவு சிதைக்கப்படும்  இவ்வாறான செயல்களுக்கு நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படாமை தொடரும் குளறுபடிகளை ஊக்குவிப்பதாயுள்ளது. ஒருவரின் வாழ்வுரிமையை மதித்து, அனுபவிப்பதைத் தடை செய்யாது, இணக்கப்பாட்டுடன் அமைதியாக, நிம்மதியாகத்தானும் வாழ்ந்து ஏனையவரையும் வாழவிடும் பண்பு நாட்டில் உருவாகாதவரை, அதற்கான சிந்தனைக்கு சகல தரப்பினரும் வித்திடாதவரை நாட்டின் வளமான எதிர்காலம் கேள்விக்குறியானது. இணக்கப்பாடு என்பது வெறும் கூப்பாடாகவே இருக்கும். சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பார்களா? - thinakural 

ad

ad