புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஏப்., 2015

விளம்பரத்துக்காக வாங்கினாரா 1 ரூபாய் சம்பளம்? (ஜெ. வழக்கு விசாரணை -15)


னல் பறக்க நடைபெற்ற ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து... 

313 விதியின்படி குற்றவாளிகள் தரப்பு வாக்குமூலத்தை ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார் வாசித்தார். 
 
குமார்: போயஸ் கார்டன் மற்றும் போயஸ் கார்டன் கூடுதல் கட்டடம், ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் உள்ள வீடுகள் மராமத்துப் பணிகள் செய்ததற்கான செலவை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் ரூ.13,65,31,900 எனத் தவறாக மதிப்பீடு
செய்திருக்கிறார்கள். இது அரசியல் ரீதியாகப் போடப்பட்ட பொய்யான வழக்கு. 

நீதிபதி குமாரசாமி: தொடர்ந்து பொய் வழக்கு என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்பதற்கு இதுவரை எந்த ஒரு ஆதாரத்தையும் கொடுக்காமல், வாய்மொழியாகவே பொய் வழக்கு என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பில் 259 சாட்சியங்களின் வாக்குமூலத்தைக் கொடுத்திருக்கிறார்கள். உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமாக 2,341 ஆவணங்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் 99 சாட்சிகள் மற்றும் 385 ஆவணங்கள் மட்டுமே தாக்கல் செய்திருக்கிறீர்கள். அதிலும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கான ஆதாரங்கள் திருப்திகரமாக இல்லை.

குமார்: நாங்கள் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் வகையில் ஆதாரங்களை சமர்பித்து இருக்கிறோம். 

நீதிபதி: தமிழ்நாட்டில் முதல்வருக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது?
குமார்: (சற்று நேர மௌனத்துக்குப் பிறகு) அதுபற்றி எனக்குத் தெரியாது. 

நீதிபதி: (மேலவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணனைப் பார்த்து) உங்களுக்கெல்லாம் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது?
நவநீதகிருஷ்ணன்: ஒரு லட்சத்து எட்டாயிரம். அதுதவிர பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போது  ஒரு நாளுக்கு 2 ஆயிரம் கொடுக்கிறார்கள். 
 
நீதிபதி: அதுதான் பாராளுமன்றத்தில் வாதிடாமல் நீங்கள் கையெழுத்தைப் போட்டுவிட்டு வந்துவிடுகிறீர்களே?
நவநீதகிருஷ்ணன்: இல்லை யுவர் ஆனர். எங்கள் அம்மா கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு கூட்டத்தொடரின்போதும் ஆரம்பம் முதல் இறுதி வரை இருந்து கவனிப்பதோடு, நிறை, குறைகளை சுட்டி காட்டி பேச வேண்டும்.   

நீதிபதி: (அதிமுக வழக்கறிஞர் குமாரைப் பார்த்து) உங்கள் மனுதாரர் முதல்வராக இருந்தபோது எவ்வளவு சம்பளம் வாங்கினார்?
குமார்: ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினார். 

நீதிபதி: அதுதான் சம்பளம் கொடுக்கிறார்களே... வாங்கிக்கொள்ள வேண்டியதுதானே! விளம்பரத்துக்காக வாங்கினாரா, 1 ரூபாய் சம்பளம். சம்பளம் வாங்காமல் வேலைப் பார்த்தால், பொது ஊழியராக கருதப்பட மாட்டார்கள். ஆனால், மாதம் ஒரு ரூபாய் வீதம் சம்பளம் வாங்கி இருப்பதால் பொது ஊழியராகவே கருதப்படுவதால், இந்த நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். 1 ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு எப்படி 66 கோடி சொத்துகள் வந்தது? அதை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அதை மறுப்பதற்கு உங்கள் தரப்பில் எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை.
 
குன்ஹா வழங்கிய தீர்பையே நானும் வழங்குவேன்!

குமார்: சுதாகரன் திருமணத்துக்கு ரூ.6,45,00,000 செலவு செய்துள்ளதாக தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் குற்றம்சாட்டியுள்ளார்கள். அதை கீழமை நீதிமன்ற நீதிபதி தன் தீர்ப்பில் ரூ.3,00,00,000 என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த இரண்டு மதிப்பீடுகளும் தவறானது. ஜெயலலிதா 29 லட்சம்தான் செலவு செய்தார். அவர் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் முதல்வர் என்ற முறையில் கலந்துகொள்ளும் திருமணம் என்பதால், அலங்கார வரவேற்பு வளைவுகள், பேனர்கள், மின்விளக்கு அலங்காரம், வாழைத்தோரணம், உணவு பரிமாறுதல் உட்பட பல செலவுகளை கட்சித் தொண்டர்களும், மணப்பெண்ணின் தாய் மாமாவான ராம்குமாரும், மணப்பெண்ணின் தந்தையான நாராயணனும் செய்தார்கள். அதற்கு வருமானவரித் துறையில் அவர்கள் கணக்கும் காட்டி இருக்கிறார்கள். அதன் மொத்த செலவு ரூ.2.36 கோடி அதற்கும் ஜெயலலிதாவுக்கும் சம்பந்தமில்லை. 
 
நீதிபதி: இத்தனை கோடி செலவு செய்து இவ்வளவு பிரமாண்டமாக திருமணம் செய்ய சுதாகரன் என்ன அதிமுக தொண்டரா? இல்லை, ஜெயலலிதாவின் மகனா?
குமார்: (மௌனம்)

நீதிபதி: இந்த வழக்கு கடந்த மாதம் 1ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. 
மணிசங்கர் (ஜெ. தரப்பு வழக்கறிஞர்): இல்லை. ஜனவரி 5ம் தேதியில் இருந்து நடைபெறுகிறது. 

நீதிபதி: சரி... ஜனவரி 5ம் தேதியில் இருந்தே வைத்துக்கொண்டாலும், இன்று வரை 28 நாட்கள் வாதிட்டு வருகிறீர்கள். கீழமை நீதிமன்ற நீதிபதி தவறாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டுகிறீர்கள். ஆனால், அவர் வழங்கியுள்ள தீர்ப்பில் உங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறு என்று இந்த 28 நாட்களில் உங்களால் ஆதாரத்தோடு உறுதிப்படுத்த முடியவில்லை. இப்படி இருந்தால் நான் மட்டும் என்ன செய்ய முடியும்? கீழமை நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை நானும் உறுதிசெய்ய வேண்டிய சூழ்நிலையாகத்தான் இருக்கிறது. ஜெயலலிதா 66 கோடிகளுக்கு சொத்துகள் சேர்க்கவில்லை என்று சொல்வதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லையே? இப்படியே வாய்மொழியாக பேசி நீதிமன்ற நேரத்தை வீணாக்காமல், வாதத்துக்குத் தேவையான ஆதாரங்களைக் கொடுங்கள். இல்லையென்றால் நானே ஆடிட்டரை நியமனம் செய்து கணக்குகளை சரிபார்க்கிறேன். இதில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதமும் அவசியம் இல்லை. நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்பு வழங்கிவிடுவேன். இது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.

குமார்: அடுத்த விசாரணையின்போது எங்கள் தரப்பு நியாயத்தை அட்டவணையைக் கொடுக்கிறேன்.
நீதிபதி: கீழமை நீதிமன்ற நீதிபதி எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்கிறீர்கள். ஆனால், கட்டட கட்டுமான செலவு 13 கோடியில் 20% குறைத்துதான் எடுத்துக்கொண்டிருக்கிறார். சாதரணமாக கட்டட கட்டுமான செலவுகளை பில்டிங் கான்ட்ராக்டர்களின் கேட்டால்கூட 1994 ன் ஆண்டு கட்டுமான செலவுகளின் விவரங்களைக் கொடுத்துவிடுவார்.

சுற்றி வளைத்து ஜெயலலிதாவிற்காகவே வாதிடுகிறீர்கள்... 

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசி சார்பாக அவர்களது வழக்கறிஞர் சுதந்திரம் வாதிட்டார்.

சுதந்திரம்: அட்டவணை 2ல் உள்ள 306 சொத்துப் பட்டியலில் ஏ3 சுதாகரனுக்கும், ஏ4 இளவரசிக்கும் தனிப்பட்ட சொத்துகள் 63 ஐட்டங்கள் இருக்கிறது. சுதாகரனின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 1,38,31,961 ரூபாய், இளவரசியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 6,91,81,200 ரூபாய், சுதாகரனும் இளவரசியும் பங்குதாரராக இருந்த மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், லெக்ஸ் பிராபர்டீஸ், ரிவர்வே அக்ரோ உட்பட்ட 6 கம்பெனிகளின் சொத்து மதிப்பு 4,60,24,439 ரூபாய் எனவும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மொத்தம் 12,90,00,000 ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பணம் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது என்றும் ஜெயலலிதாவின் பினாமிகளான சுதாகரன், இளவரசி ஆகியோரின் பெயரில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் ஜெயலலிதாவுக்கும் என் மனுதாரர்களாகிய சுதாகரன், இளவரசிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 

நீதிபதி: சுற்றி வளைத்து மறைமுகமாக ஏ1 ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே வாதிட்டுக்கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் மனுதாரருக்காக வாதிடுங்கள். 
சுதந்திரம்: ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி, கம்பெனிகள் என அனைவரின் சொத்துகளையும் பொதுவாகக் காட்டி இருப்பதால் ஏ1 ஜெயலலிதாவை மையமாக வைத்துதான் இந்த வழக்கை வாதிட முடியும்.

நீதிபதி: உங்க மீதுள்ள கேஸ் என்ன? ஊழல் தடுப்புச் சட்டம் 13(1)இ, கூட்டுச்சதி 120(பி), குற்றம் செய்ய உடந்தையாக இருத்தல் 109... இதன் அடிப்படையில்தான் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி தெளிவாகப் பேசாமல் பினாமி சட்டம், கம்பெனி சட்டம், வருமானவரிச் சட்டம் இதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
சுதந்திரம்: என் மனுதாரர்கள் அரசு ஊழியர்கள் கிடையாது. அதனால், அவர்களுக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 13(1)இ வராது. அதேபோல கூட்டுச்சதியும், குற்றம் செய்ய உடந்தையாகவும் இருந்ததில்லை. அதனால், என் மனுதாரர்களுக்கு 13(1)இ-யும், 120(பி), 109ம் பொருந்தாது. 

நீதிபதி: ஊழல் தடுப்புச் சட்டம் 13(1) இ பற்றி விளக்குங்கள்?
சுதந்திரம்: ஊழல் தடுப்பு சட்டம் 13(1) இ அரசு பொது ஊழியர்களுக்குத்தான் பொருந்தும். இந்த வழக்கில் ஏ1 ஜெயலலிதாதான் அரசு பொது ஊழியர். அதனால், இதைப்பற்றி வாதிட்டால் நீங்கள் ஜெயலலிதாவுக்காக வாதிடுவதாகச் சொல்வீர்கள்.  

நீதிபதி: (குமாரைப் பார்த்து)  ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசியின் தனிப்பட்ட வருமானம் என்ன? செலவுகள் என்ன? அதற்கு ஆதாரங்களைக் கொடுங்கள்.
குமார்: ஒவ்வொரு பாயின்ட்டுக்கும் தனித்தனியே ஆதாரங்களோடு விளக்கி இருக்கிறோம்.

நான் அமைதியாக இருந்துவிட்டு தீர்ப்பை வழங்க முடியாது!  

நீதிபதி: நான் அமைதியாக இருந்துவிட்டு தீர்ப்பை வழங்க முடியாது. ஏன் உங்களிடம் இவ்வளவு கேள்விகளைக் கேட்க வேண்டும்?
சுதந்திரம்: நீங்கள் இதுபோன்ற கேள்விகளைக் கேட்பதால்தான் உங்களுடைய மனநிலையை புரிந்துகொண்டு நாங்கள் நன்றாக வாதிட முடிகிறது. ஆனால், வெளியில் உள்ள சில மீடியாக்கள் இந்த வாத, விவாதங்களை தவறான செய்திகளாக வெளியிட்டு வருகிறார்கள். 

நீதிபதி: அவர்கள் பணி... அவர்கள் செய்கிறார்கள். உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள். நீதிமன்றத்துக்கு வெளியில் நடப்பதைப் பற்றியெல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. நாளை செவ்வாய்கிழமை சிவராத்திரி விடுமுறை. 
சுதந்திரம்: மூச்சுவிட ஒரு நாள் விடுமுறை கிடைத்தது. நன்றாக படித்துவிட்டு வந்து வாதிடுவோம். 

புதிய கணக்குகளைக் காட்டக் கூடாது!

ஏ3 சுதாகரன், ஏ4 இளவரசியின் தனிப்பட்ட சொத்துகள், வருமானம், செலவீனங்கள் பற்றிய விவர அட்டவணை தயாரித்து வழக்கறிஞர் சுதந்திரம் நீதிபதிடம் கொடுத்து விரிவாக வாதிடத் தொடங்கினார். 

நீதிபதி: திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இதுபற்றியெல்லாம் இங்கு சொல்ல வேண்டாம். கடைசி பக்கத்தில் உள்ள மொத்த மதிப்பீடுகளைச் சொல்லுங்கள். (கால்குலேட்டரை அழுத்தியவாறே) உங்கள் சொத்து மதிப்பு என்ன? 

சுதந்திரம்: ரூ.1,10,04,961
நீதிபதி: செலவுகள் என்ன?

சுதந்திரம்: ரூ.74,68,058
நீதிபதி: 4 வருட வருமானம் என்ன?

சுதந்திரம்: ரூ.2,12,47,978. மொத்த சொத்து மதிப்பு = 1,10,04,961 +74,68,058 = 1,84,73,019.  கையிருப்பு = 2,12,47,978&1,84,73,019= 27,74,959.
நீதிபதி: ஓகே. வருமானவரித் துறையின் ஆவணத்தைக் கொடுங்கள். இந்தக் கணக்கீடு வருமானவரித் துறை கணக்கீட்டுக்கு ஒத்துப்போகிறதா?

சுதந்திரம்: (சற்று மௌனத்துக்குப் பிறகு) இல்லை. 
நீதிபதி: பிறகு ஏன் இந்தக் கணக்கையெல்லாம் என்னிடம் சொல்கிறீர்கள். கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கணக்குகளைதான் இங்கேயும் தாக்கல் செய்ய வேண்டும். புதியதாக ஒரு கணக்கு தயாரித்து காட்டக் கூடாது. இந்த கணக்கை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். 

அம்மா முதல்வர்... மகனுக்கு அரசு டெண்டர்!

சுதந்திரம்: 1994ல் தஞ்சையில் 8வது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு சுற்றுலா துறை வளர்ச்சி கழகத்தின் மூலம் முறையாக டெண்டர் விடப்பட்டது. அந்த டெண்டரை சூப்பர் டூப்பர் டிவி நிறுவனம் 42 லட்சத்துக்கு எடுத்தது. அதற்கு தமிழ்நாடு சுற்றுலா துறை வளர்ச்சிக் கழகம் அட்வான்ஸாக 39,60,000 ரூபாய் சூப்பர் டூப்பர் டிவி நிறுவனத்துக்குக் கொடுத்தது.
நீதிபதி: அதற்கான ரசீதைக் கொடுங்கள்?

சுதந்திரம்: அதை தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் சீஸ் செய்து எடுத்துப் போய்விட்டார்கள். 
நீதிபதி: சீஸ் செய்ததற்கான கடிதத்தைக்காட்டுங்கள். 

சுதந்திரம்: (துலாவிக்கொண்டிருந்தார்கள்)
நீதிபதி: சுதாகரனின் அம்மா முதல்வர். தமிழ்நாடு சுற்றுலா துறை வளர்ச்சி கழகம் முதல்வரின் கீழ்தான் வருகிறது. மகனுக்கு அரசு டெண்டர் விட்டிருக்கிறார்கள் என்றால், அட்வான்ஸ் கொடுத்ததற்கான ரசீது கொடுக்காமலா இருந்திருப்பார்கள்? அந்த ஆதாரங்களைக் காட்டினால் மட்டுமே இந்தத் தொகையை நான் கணக்கில் எடுத்துக்கொள்வேன்.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் செந்தில் தமிழ்நாடு சுற்றுலா துறை வளர்ச்சிக் கழகம் வழங்கிய 39,60,000க்கான ரசீதை எடுத்து நீதிபதியிடம் கொடுத்தார்.
நீதிபதி: இவ்வளவு பெரிய தொகைக்கு நீங்கள் ரசீது வைத்திருக்க வேண்டாமா?

சுதந்திரம்: தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் இந்த ரசீதை முத்திரையிடாத ஆவணங்களாக வைத்திருந்ததால் அதை எடுக்க முடியவில்லை.
நீதிபதி: இந்தத் தொகையை நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்படித்தான் ஆதாரங்களைக் கொடுத்து வாதிட வேண்டும். 

சுதந்திரம்: 100% சரியாக யாராலும் வாதிட முடியாது. நீங்கள் அனுமதித்தால் இதற்கு ஒரு ஜோக் சொல்கிறேன்?
நீதிபதி: நீதிமன்றத்துக்குத் தேவையில்லாதவற்றை பேசக் கூடாது. 

சூப்பர் டூப்பர் டிவியின் பணப்பரிமாற்றம்...

சுதந்திரம்: என் மனுதாரர் சூப்பர் டூப்பர் டிவி நிறுவனம், ராம்ராஜ் அக்ரோ ஃபார்ம்ஸ், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், சைனோரா, இந்தோ தோஹா கெமிக்கல் உள்ளிட்ட பல நிறுவனங்களில் இயக்குநராக இருந்தார். அதில் சூப்பர் டூப்பர் டிவி நிறுனத்துக்கு பல சந்தாதாரர்கள் இருந்தார்கள். அவர்கள் மூலம் வந்த டெபாசிட் தொகை 5 லட்சத்தை தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ஏற்றுக்கொள்ளவில்லை. தஞ்சை வண்டாம்பாளையத்தில் உள்ள ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் நிறுவனத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி தலா 1,20,000 ரூபாய் கட்டி ஷேர்கள் வாங்கினார்கள். 3 பேரும் வாங்கிய மொத்த ஷேர்கள் 3,60,000. ஆனால், தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் 18,42,000 என்று பதிவு செய்திருக்கிறார்கள். அதனால், எங்கள் தொகையில் இருந்து கழிக்க வேண்டும்.

அதேபோல பரணி ஃபீஸ் ரிசார்ட் நிறுவனத்துக்கு நிகழ்ச்சி செய்து கொடுத்ததற்காக, சூப்பர் டூப்பர் டிவி நிறுவனத்துக்கு காசோலை மூலமாக 22 லட்சம் கொடுத்தார்கள். அதை வருமானவரித் துறை ஆய்வு செய்து வருமானவரித் துறை தீர்ப்பாயம் 22 லட்சம் கொடுப்பதற்கான தகுதி பரணி ஃபீஸ் ரிசார்ட்டுக்கு இருக்கிறதா என்று ஆய்வுசெய்து ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அந்த தொகையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 
 
-வீ.கே.ரமேஷ்