சிகிரியா சுவரில் கிறுக்கிய மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியிருந்த போதிலும், இன்னமும் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்படவில்லை.
கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி சிகிரியாவிற்கு சுற்றுலா சென்ற சின்னத்தம்பி உதயஸ்ரீ என்ற யுவதி, சிகிரியா கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரணை செய்த நீதவான், குறித்த யுவதிக்கு இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனை விதித்திருந்தார்.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு அமைய அண்மையில் குறித்த யுவதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.
எனினும், ஜனாதிபதியின் உத்தரவு இன்னமும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைக்கபெறாத காரணத்தினால் நேற்று வரையில் குறித்த யுவதி விடுதலை செய்யப்படவில்லை.
தொடர்ந்தும் குறித்த யுவதி அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழி மூலமாகவோ யுவதியை விடுதலை செய்யுமாறு உத்தரவு கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.