லா லிகா லீக் உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் ரியல் மாட்ரிட்- கிரனாடா அணிகள் மோதின.
இந்த போட்டியில் ரியல் மாட்ரிட் ஆட்டத்திற்கு கிரனாடாவால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. இதனால் ரியல் மாட்ரிட் 9-1 என அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் முன்னணி வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ 5 கோல் அடித்து அசத்தினார்.
ஆட்டம் தொடங்கிய 25வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரேத் பலே முதல் கோலை அடித்து அணியின் எண்ணிக்கையை தொடங்கி வைத்தார்.
30வது நிமிடத்தில் கிறிஸ்டியானா ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். அடுத்த 6வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார்.
அதன் பின் 2 நிமிடம் கழித்து மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் 8 நிமிடத்திற்குள் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனைப் படைத்தார்.
ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் ரியல் மாட்ரிக் முதல் பாதி நேரத்தில் 4-0 என முன்னிலை பெற்றது.
2வது பாதி நேரத்திலும் ரியல் மாட்ரிட் அணியில் கோல் பசி அடங்கவில்லை. அந்த அணியின் பென்சிமா 52வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
அடுத்த 2வது நிமிடத்தில் ரொனால்டோ மேலும் ஒரு கோல் அடித்தார். அடுத்த 2வது நிமிடத்தில் பென்சிமா ஒரு கோல் அடித்தார்.
இதனால் 56வது நிமிட ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் வீரர்கள் 7 கோல்கள் அடித்தனர். இதற்கு கிரனாடா 74வது நிமிடத்தில் பதில் கோல் ஒன்று அடித்தது.
83வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி மேலும் ஒரு கோல் அடித்தது. கடைசி 89வது நிமிடத்தில் ரொனால்டோ மேலும் ஒரு கோல் அடித்தார்.
இதனால் ரியல் மாட்ரிட் 9-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.