15 ஆக., 2015

கூட்டமைப்பின் வெற்றிச் செய்திக்காக காத்திருக்கின்றது சர்வதேச சமூகம்: மாவை

”வடக்கு, கிழக்கில் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை கடந்த தேர்தல்களில் எமது மக்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திற்கும் நிரூபித்துக்காட்டினர்

. இம்முறையும் அதனை எமது மக்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். எனினும், தீர்வை நாம் விரைவில் பெற மாபெரும் வெற்றி இம்முறை எமக்குத் தேவைப்படுகின்றது. இந்த வெற்றிச் செய்திக்காக சர்வதேச சமூகம் காத்திருக்கின்றது. எனவே, 17ஆம் திகதி காலையிலேயே தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.”இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடைசெய்யவேண்டும் என்று தெற்கில் பொதுபலசேனா கட்சியினரும், அதே கூட்டமைப்பைத் தோற்கடிக்கவேண்டும் என்று வடக்கு, கிழக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வலிந்து கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நோக்கத்தை இனங்கண்டு மக்கள்தான் அவர்களைத் தோற்கடிக்கவேண்டும். அதற்கு அனைவரும் தவறாது வீட்டுச் சின்னத்துக்கே வாக்களிக்கவேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் மாவீரர்கள் பிறந்த மண்ணில் வாழ்பவர்கள். எமக்குத் தன்மானம் உள்ளது. எமது மாவீரர்களின் தியாகங்கள் வீண்போகக்கூடாது.
முள்ளிவாய்க்காலில் எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகத்தை இராணுவத்தை வைத்து சிங்களமயமாக்க முயன்ற மஹிந்த ராஜபக்­ஷவை எமது வாக்குரிமை என்ற ஆயுதத்தால் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடையச் செய்தோம்.
அதேபோன்று எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் எமது வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமோக வெற்றியை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தவேண்டும். அத்துடன், எமது பேரம்பேசும் சக்தியையும் உணர்த்தவேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவேண்டாம் என்று கூறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சியினர், தற்போது அதற்கு அர்த்தம் கற்பித்துக்கொண்டு திரிகிறார்கள். எனவே, வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்துத் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களியுங்கள்! வெற்றியை உறுதிப்படுத்துங்கள் என்றார்.