புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2015

சிலை கடத்தல் கும்பலிடம் பிரபல இயக்குனர் சிக்கியது எப்படி?


மிழகத்தில் ஆயிரக்கணக்கான பாரம்பரிய கோயில்களும், அவற்றில் பழங்கால ஐம்பொன் சிலைகளும், கற்சிலைகளும் அதிகளவில் உள்ளன.
பல்வேறு கோயில்களில் இருந்து இந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகின்றன.
கடவுளாக வணங்கும் அந்த சிலைகளை கடத்தி காசு பார்க்கும் கும்பலுக்கு, சர்வதேச நெட்வொர்க்
உள்ளது. அந்த சிலைகளை அவ்வப்போது காவல்துறையினர் மீட்டாலும், சிலை திருட்டை முற்றிலும் தடுக்க முடியவில்லை. 

சிலைகளை கடத்துவதற்கென தனி நெட்வொர்க் செயல்படுகிறது. இந்தியாவிலிருந்து சிலைகளை கடத்தும் இந்த கும்பல், வெளிநாடுகளில் அவற்றை நல்ல விலைக்கு விற்கிறது. இந்த தொழிலில் கொடிக்கட்டி பறந்தவர்கள் பலர் கோடீஸ்வரன்களாக இருக்கிறார்கள். பிரபல சிலை கடத்தல் மன்னன் என்றழைக்கப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வாமன் கியா என்பவரை,  2002 ஆம் ஆண்டு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவனால் கடத்தப்பட்ட சிலைகளை இந்திய தொல்லியல் துறையோ, இந்திய அரசோ மீட்காததால் வாமன் கியா விடுதலை செய்யப்பட்டுள்ளான்.

இந்த கடத்தல் மன்னனுக்கு அடுத்தபடியாக சிலை கடத்தலில் பேசப்பட்டது பஞ்சாப் மாநிலம், ஜலந்தரைச் சேர்ந்த சுபாஷ்கபூர். இவரது குடும்பம் பாரம்பரியமாக இந்திய கைவினைப் பொருட்களை ஏற்றுமதி செய்து அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் விற்று வந்தது. கைவினைப் பொருட்களைவிட புராதன சிலைகளில் கொள்ளை லாபம் கிடைப்பதை அறிந்ததும், அந்த போர்வையிலேயே இந்தியாவிலிருந்து சிலைகளைக் கடத்த தொடங்கினார் சுபாஷ்கபூர். தொழிலை மாற்றியதால்  லாபம் அதிகரித்ததை தொடர்ந்து,  சுபாஷ்கபூர் கும்பல் நேரடியாக களமிறங்கி சிலை கடத்தலில் கொடிக்கட்டி பறந்தது.

பாரம்பரியமும், புராதனமும் மிக்க கடவுள் சிலைகள் நிறைந்த அரியலூர் மாவட்டத்தில், பாதுகாப்பு குறைவாக இருப்பது கபூர் கும்பலுக்கு தெரியவந்தது. அங்கு முகாமிட்ட இந்த கும்பல், உடையார்பாளையம் வட்டாரத்தில் புரந்தான், சுத்தமல்லி உள்ளிட்ட கோயில்களில் இருந்து ஐம்பொன் கடவுள் சிலைகளை திருடின. கடந்த 2011ஆம் ஆண்டு, இன்டர்போல் காவல்துறையின் உதவியுடன் ஜெர்மனி ஃப்ராங்க்பர்ட்டில் கபூர் கைது செய்யப்பட்டார். பிறகு அவரை சென்னை புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.
சிலை கடத்தலில் லட்சக்கணக்கில் பணம் கொட்டியதால், இந்த தொழிலில் பலர் களமிறங்கினார்கள். அந்த ஆசையில்தான் சிலைக் கடத்தலில் சினிமா இயக்குனர் வீ.சேகரும் ஈடுபட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வீ.சேகரின் வீட்டில் திருடிய சிலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சிலைகளை விற்க, நட்சத்திர ஓட்டல்களில் பேரம் பேசும் கூட்டத்திலும் வீ.சேகர் பங்கேற்றதாக காவல்துறையினர் சொல்கிறார்கள். மேலும் இருடியம் மோசடி கும்பல் மூலம்தான் சிலை கடத்தும் கும்பலுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ஐசிஇ) இதுவரை 2500 சிலைகளை மீட்டுள்ளதாக தெரிவிக்கிறது. அவற்றின் மொத்த மதிப்பு 100 மில்லியன் டாலர். சில சிலைகள் ஏற்கெனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் பல சிலைகள் நியூயார்க் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை திருப்பி அளிப்பதில் சட்டச்சிக்கல், நடை முறை சிக்கல்கள் உள்ளன.
சிலை கடத்தல் தொடர்பாக விசாரித்ததில் கிடைத்த அதிர்ச்சி தகவல் இது. சிலை கடத்தலுக்கு உலகளவில் பெரிய சந்தை உள்ளது. இத்தாலியின் கலை பொருட்களை, சில கடத்தல் கும்பல்கள் திருடி, 'சோத்பைஸ்' என்ற ஏல நிறுவனத்திடம் விற்றனர். அந்த ஏல நிறுவனம், சுவிட்சர்லாந்து வழியாக, அந்த சிலைகளை லண்டனுக்கு கடத்தி விற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டதால் 'சோத்பைஸ்' நிறுவனம், தனது லண்டன் அலுவலகத்தை மூடியது. இந்தியாவிலும் இந்த நிறுவனத்துக்கு தனி அலுவலகம் உள்ளது. இந்த நிறுவனத்தில் இந்திய சிலைகளும் விற்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தானை சேர்ந்த, வாமன் கியா என்ற பிரபல சிலை கடத்தல் மன்னனை கைது செய்த போது அவரிடம், 'சோத்பைசின்' 100க்கும் மேற்பட்ட கையேடுகள் மற்றும் புகைப்படங்கள் இருந்தன. ஆனால், காவல் துறை அதிகாரிகள் வருவதற்கு முன், அவர் அவற்றை நெருப்பில் கொட்டி சாம்பலாக்கி விட்டார். அவற்றில் சில தப்பின. மேலும், டெல்லி மற்றும் பல இடங்களில், கிடங்குகளிலும், பூமிக்கு அடியிலும், கியாவின் தலைமையிலான கடத்தல் கும்பல் புதைத்து வைத்திருந்த, 900க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டன. அவற்றில், 600க்கும் மேற்பட்ட சிலைகள் மிகவும் பழமையானவை என, இந்திய தொல்லியல் துறை உறுதி செய்தது. கடந்த 30 ஆண்டுகளில், வாமன்கியா, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய கலை பொருட்களை, 'சோத்பைஸ்' மூலம் விற்றிருக்கலாம் என்று தெரியவந்தது.

இந்நிலையில், சிலைகளை மீட்டெடுக்க உதவுகிறது புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனம். இந்த நிறுவனத்தின் குழுவினர்,  இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று புகைப்பட ஆய்வு நடத்தி,  ஒரு லட்சத்து 50 ஆயிரம் சிலைகளின் அரிய புகைப்படங்கள், அவற்றுக்கான உரிய ஆதாரங்களை பாதுகாத்து வருகின்றனர். இந்த அரிய புகைப்பட சேகரிப்பு பணியை 1956 ஆம் ஆண்டு முதல் பிரெஞ்சு நிறுவன குழு செய்கிறது. இங்குள்ள புகைப்பட ஆதாரத்தை அடிப்படையாக கொண்டுதான்,  தமிழகத்தில் ஸ்ரீ புரந்தன் கிராமத்தில் இருந்து கடத்தப்பட்ட நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவின் நேஷனல் கேலரியில் இருப்பது தெரிந்தது. மேலும், இந்த கோயிலில் இருந்து கடத்தப்பட்ட உமாமகேஷ்வரி சிலையும் சிங்கப்பூரில் இருப்பது தெரிந்தது.
வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களுக்கு, நன்கொடை என்ற பெயரில், கலை பொருட்களை கொடுத்தால், அந்நாட்டு அரசுகள் வரிவிலக்கு தரும். இது ஒரு பெரிய மோசடி. கடந்த, 1972ஆம் ஆண்டு ஐ.நா. சபையில், சிலை கடத்தல் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. நம் நாட்டில், 1878ஆம் ஆண்டிலேயே அந்த சட்டம் அமலுக்கு வந்து விட்டது. இருந்தாலும், சிலை கடத்தல் நடப்பதற்கு காரணம், அரசு நிர்வாகத்தில் நிலவும் சில பிரச்னைகள்தான். வெளிநாடுகளில், அங்குள்ள காவல் துறை மற்றும் சுங்க துறையினரால், கடத்தல் பொருள் என கைப்பற்றப்பட்ட பொருட்கள், மலை போல குவித்து வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க சுங்கத்துறையிடம் மட்டுமே, நம் நாட்டை சேர்ந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலை பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுப்பது பற்றி, நம் அரசுக்கு அக்கறை இல்லை என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ad

ad