புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஆக., 2015

மைத்திரி – ரணில் ஆட்சி மூன்றிலிரண்டு பலம்பெற த.தே.கூ உதவும்

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 105 க்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெற்று மைத்திரி அணி ஆதரவாளர்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை 18ம் திகதி அமைக்கும். இது உறுதியாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மாவட்டத்திலுள்ள பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிகளை நேற்று தனது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இரா.சம்பந்தன் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐ.தே.க. 105 ஆசனங்களுக்கு மேல் பெற்று வெற்றி பெறுமென கருத்துக்கணிப்புக்களும் ஆய்வுகளும் கூறுகின்றன. நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன். இதேவேளை ஐ.ம.சு.மு 70க்கும் 85 க்கும் இடைப்பட்ட ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ம.சு. கூட்டணியிலுள்ள மைத்திரியணியினர் ஐ.தே.க. வுடன் இணைந்து 18ம் திகதி ஆட்சி அமைப்பார்கள். அந்த ஆட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெற தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு நல்க காத்திருக்கிறது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கப்படுமாயின் புதிய அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படும். அந்த அரசில் யாப்பின் மூலம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்னெடுக்கப்படும்.
வரையப்படவுள்ள அரசியல் யாப்பில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 65 வருடகால தமிழ் மக்களின் போராட்டத்துக்கு இதன் மூலம் உடனடி தீர்வு காணப்படுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
தமிழ் மக்கள் எச்சந்தர்ப்பத்திலும் விலை போனவர்கள் அல்லர். இனியும் நாம் விலைபோகப் போவதில்லை. எமது நீண்ட கால போராட்டத்துக்கு உடனடியாக தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்பதே எமது அதீதமான நோக்கமாகும்.
தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இதை உள்ளூர் தலைவர்களுக்கு கூறி வந்துள்ளோம். சர்வதேச சமூகம் இதை ஏற்றுக்கொண்டுள்ளது. இனியும் காலத்தைக் கடத்தலாம் என்றும் தமிழ் மக்களை ஏமாற்றலாமெனவும் யாரும் தவறான கணக்கை போட முடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைப்பு. எம்முடன் பேசி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் என சர்வதேச சமூகம் வலியுறுத்திக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.
புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்கி தான் தொடர்ந்து ஆள வேண்டுமென்று நினைத்த மஹிந்த ராஜபக்சவை நாம் தோற்கடித்து நல்லாட்சியொன்றை நிறுவியிருக்கிறோம். இந்த ஆட்சிக்கு ஏற்ற புதிய மாற்றமொன்று எதிர்வரும் தேர்தல் ஊடாகவும் இடம்பெற வேண்டும்.
தென்பகுதி மக்களிடம் மாற்றமொன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழ், முஸ்லிம் மக்கள். இந்த மாற்றத்தை நல்ல முறையில் நாம் பயன்படுத்த வேண்டும். மாற்றமொன்று மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை நாம் உறுதி செய்ய வேண்டும். அதற்கு ஏற்றவகையில் எங்கள் வெற்றி அமைய வேண்டும்.
தமிழ் மக்கள் ஒருமித்த நாட்டுக்குள் ஒற்றுமையாக வாழவிரும்புகின்றார்கள். நாம் நாட்டை பிரிக்க விரும்பவில்லை. பிளவுபடுத்தவும் முயற்சி செய்யவில்லை. எமது மக்கள் சகல உரிமைகளுடனும் சமத்துவமாகவும் ஒற்றுமையாகவும் வாழ விரும்புகின்றனர் என்பதை தென்பகுதி மக்களும் சிங்களத்தலைவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சர்வதேச விசாரணை அடுத்த மாதத்தில் விசாரணை அறிக்கையாக வெளிவரவிருக்கிறது. உண்மைகள் அறியப்பட வேண்டும். அது வெளிப்படுத்தப்பட வேண்டும். மீண்டும் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையே நாம் உறுதி செய்ய வேண்டுமெனக்கேட்டுக் கொள்கிறோம்.
தேசிய இனம் ஒன்று அழிக்கப்படுவதை எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. சர்வதேச சமூகமும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. ஐ.நா. சபையும் இதை அங்கீகரிக்கப் போவதில்லை.
தமிழ் மக்களுடைய ஆதரவு இன்றி முஸ்லிம் மக்கள் எந்தவுரிமையையும் பெற்று விடமுடியாது. அதேபோன்றே முஸ்லிம் மக்களுடைய உதவியின்றி தமிழ் மக்களும் எதையும் சாதித்து விட முடியாது.
எனவே வரவிருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை தமிழ், முஸ்லிம் சமூகம் தவறிவிடக்கூடாது என்றார்.

ad

ad