11 அக்., 2015

‘‘வைரமுத்துவின் படைப்புகள் காலம் தாண்டி நிலைத்து இருக்கும்’’ ‘வைரமுத்து சிறுகதைகள்’ புத்தகத்தை வெளியிட்டு கருணாநிதி புகழாரம்


‘‘வைரமுத்துவின் படைப்புகள் காலம் தாண்டி நிலைத்து இருக்கும்’’ என்று ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதி கூறினார்.

வைரமுத்து சிறுகதைகள்

கவிஞர் வைரமுத்து எழுதிய 40 சிறுகதைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டு ‘வைரமுத்து சிறுகதைகள்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இது அவரின் முதல் சிறுகதை தொகுப்பாகும். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று மாலை நடந்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, புத்தகத்தை வெளியிட்டார். முதல் பிரதியை நடிகர் கமல்ஹாசன் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியதாவது:-

ஆங்கில சிறுகதை போல...

சிறுகதை என்பது மனித இனம் பேச தொடங்கியது முதல் மொழி வடிவம் பெற்று வந்துகொண்டிருக்கிறது. எழுதுபவருக்கும், கேட்பவருக்கும் இடையே பாலமாக இருக்கிறது. சிந்தையில் தோன்றியதை, கண்ட காட்சியை எடுத்து சொல்வது தான் சிறுகதை. இலக்கிய வடிவிலும் சிறுகதைகள் அங்கம் வகிக்கின்றன.

கவிஞர் வைரமுத்துவின் எழுத்து பற்றி 15 ஆண்டுகளுக்கு முன்பே ‘வைரமுத்து கவிதைகள்’ என்ற புத்தகத்தின் அணிந்துரையில் நான் எழுதும் போது, கருப்பு மனிதனுக்குள் நெருப்பு பிளம்பா?, இதய பைக்குள்ளே எத்தனை கர்ப்பப்பைகள், மூளைக்குள்ளே எத்தனை விதைகள்? என்று எழுதி இருந்தேன்,

திராவிட இயக்கத்தை இலக்கிய வடிவில் கவிஞர் வைரமுத்து எழுதி வருகிறார். அந்த வகையில் தற்போது வைரமுத்து சிறுகதைகள் என்ற தொகுப்பை எழுதியுள்ளார். அவரது எழுத்துகள் மனுதர்மம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாதாடும் வகையில் அமைந்திருக்கிறது. கிராமத்து உணவை மணக்க மணக்க பரிமாறி இருக்கிறார். மீன் பற்றி அவர் எழுதிய கதை ஆங்கில சிறுகதை போல் அமைந்துள்ளது.

தலைமுறை தாண்டி நிலைத்திருக்கும்

1991-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட போது, கவிஞர் வைரமுத்து ஒரு கவிதை எழுதியிருந்தார். அதாவது, ‘அடியே அனார்கலி, உனக்கு பிறகு உயிரோடு புதைக்கப்பட்டது ஜனநாயகம் தான்’, என்று குறிப்பிட்டிருந்தார். உடனே நான் அவருக்கு போன் செய்து, ஆட்சி கடந்ததால் உங்களுக்கு லாபம் தானே... அதனால் தானே நல்ல கவிதை கிடைத்திருக்கிறது என்றேன். அவர் பதில் எதுவும் சொல்லவில்லை.

நான் 1945-ம் ஆண்டுகளிலேயே சிறுகதைகள் எழுதி இருக்கிறேன். என் அருமை தம்பி வைரமுத்துவுக்கு நான் அப்போதே போட்டியாக வந்திருக்கிறேன். கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் தலைமுறை தாண்டி, காலம் தாண்டி நிலைத்திருக்கும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

போர்க்களம் உள்ளவரை...

விழாவில் வைரமுத்து ஏற்புரையாற்றி பேசியதாவது:-

பெரியாருடனும், அண்ணாவுடனும் பல்வேறு தலைவர்களுடனும் அமர்ந்திருந்த கருணாநிதி அருகில் நானும், கமலும் அமர்ந்திருப்பது பெருமை அளிக்கிறது. களைப்பு என்பது உடலுக்கு இருக்கலாம். ரத்தமும், சதையும் ஆனதுதானே உடல். ஆனால், மூளை களைத்து போகாது. கருணாநிதிக்கு களைப்பும் வராது.

நான் 12 வயதில் தமிழ் உச்சரித்தது கலைஞரின் விரல் தொட்டும், சிவாஜியின் குரல் கேட்டும் தான். கருணாநிதி மீது அரசியல் விமர்சனங்கள் வரலாம். அது வேறு. ஆனால் அவர் தமிழ் மீது விமர்சனம் வராது. கலைஞருக்கு ஓய்வு என்பதே இல்லை. போர்க்களம் உள்ளவரை அவர் ஓயப்போவது இல்லை.

கருணாநிதியை உயிர்ப்போடு வைத்திருப்பது எது தெரியுமா? நம் போன்ற நட்புகள் அல்ல. அவரின் 60 ஆண்டு கால அரசியல் எதிரிகள் தான். எதிரிகள் இல்லை என்றால், வாழ்வில் வெற்றி பெற முடியாது. எதிரிகள் தான் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள்.

மனதில் விதைக்கப்படும் விதைகள்

எழுதுவது என்பது சுகமானது அல்ல. அது பிரசவம் போன்றது. மனதில் விதைக்கப்படும் விதைகள் சில வளரும் போதே அழிந்துவிடுகிறது. அதில் தப்பி தவறி அழிக்கமுடியாத சக்திகளாக மாறி உருவெடுத்து வருவது இலக்கியங்கள். நாம் படிக்கும் போதே நம்முடைய வாழ்க்கையை நியாபகப்படுத்துவதும் அதை உணர வைப்பதும் தான் இலக்கியம்.

கமலிடம் இங்கே ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். நான் சொல்லும் கதையில் நீங்கள் நடித்தால், ஆஸ்காரை வெல்லமுடியும். தீயசக்தி வாய்ந்த ‘மேஜர்’ ஒருவரை கொல்ல நாவிதன் வெறிகொண்டிருந்தான். அதற்கான நேரத்தையும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். ஒருநாள் அவனை தேடி மேஜர் வந்தார். சவரம் செய்வதற்கு முகத்தை அவரிடம் காட்டினார். அவனும் சவரம் செய்ய தொடங்கினான். கத்தி கன்னத்தை தாண்டி கழுத்துக்கு வந்தபோது, அழுத்து என்றது வன்மம். நிறுத்து என்றது தர்மம். 2 முறை கழுத்தருகே கத்தி வந்தபோதும் அவனது மனம் அதையே கூறியது.

மனிதர்களை ஏற்றுமதி செய்யவேண்டாம்

ஆனால் தர்மத்திற்கு கட்டுப்பட்டு விட்டுவிட்டான். சவரம் முடிந்து எழுந்த மேஜர் அவனிடம், ‘என்னமோ என்னை கொலை செய்துவிடுவதாக ஊரெல்லாம் கூறினாயே? உன்னால் அது முடிந்ததா? இப்போது தெரிந்துகொள் கொலை செய்வது சாதாரணமான விஷயம் இல்லை’, என்றான்.

இந்த கதையில் மேஜராகவும், நாவிதனாகவும் நீங்கள் நடிக்க வேண்டும். ஊடகங்களில் தமிழ்க்குழுவை அமைக்கவேண்டும். இன்றைய தொழில்நுட்ப காலத்தில் மொழி இல்லாமல் போய்விடக்கூடாது. பள்ளிக்கூடங்களில் இலக்கிய வாசிப்பு வகுப்புகளை நடத்தவேண்டும். தமிழ் எங்கும் ஓதப்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்திய அரசு 2 விஷயத்தில் அக்கறை காட்டவேண்டும். ஒன்று சேவை. மற்றொன்று உற்பத்தி. நம் நாட்டில் உற்பத்தி குறைவாக இருக்கிறது. வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்துவிட்டது.

உறவுகளை இழந்து அயல்நாட்டுக்கு வேலை தேடி செல்லும் சூழல் உள்ளது. வெளிநாடுகளுக்கு நாம் மனிதர்களை ஏற்றுமதி செய்யவேண்டாம். நமது உற்பத்தியை ஏற்றுமதி செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கமல்ஹாசன்

விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

இந்த பையனுக்கு நடிக்க தெரியுமா? என்று கேட்டபோது கலைஞரின் வசனம் பேசி சினிமாவுக்குள் நுழைந்தவன் நான். ஆனால் அவருடன் பல மேடைகளில் பங்குபெறும் வாய்ப்பை கண்டு வியப்படைகிறேன். நல்ல நட்பும், நல்ல ஆசானும் என்னை இங்கே இணைத்திருக்கிறது.

பொதுவாக சிறுகதை தொகுப்புகளுக்கு விமர்சனங்கள் வருவது உண்டு. சிலர் போற்றுவார்கள். சிலர் சீறுவார்கள். கருத்து வேறுபாடுகளும் வரதான் செய்யும். உரசாமல் நெருப்பு பற்றாது. அவர் (வைரமுத்து) எழுத்தில் நெருப்பு இருக்கிறது.

எங்கள் நட்பு நீளமானது

இது உங்கள் சமையல். உங்களுக்கு பிடித்த சுவைதான் இருக்கும். மற்ற சுவைகளை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளில் தமிழ் அழகு இருக்கும். திருக்குறள், நாலடியார் ஆகியவற்றையும் நான் சிறுகதைகளாகத்தான் பார்க்கிறேன். வைரமுத்து எழுதிய இந்த கதைகளில் நிஜமும் இருக்கிறது. மனிதநேயமும் இருக்கிறது. ஆனாலும் சொல்ல வேண்டிய விஷயத்தை கருத்து மாறாமல் கூறியிருக்கிறார்.

எனக்கும் புத்தகம் வெளியிட ஆசை உண்டு. எழுதியும் வருகிறேன். நான் ரகசியமாக முதல் பிரதியை வைரமுத்துவிடம் காட்டுவேன். இதற்கு முன்பு நான் கவிதை ஒன்றை எழுதி அவரிடம் காட்டியிருக்கிறேன். அவர் நன்றாக ரசித்தார். அவர் நல்ல கவிஞரா? நல்ல நடிகரா? என்று எனக்கு தெரியாது. எங்கள் நட்பு நீளமானது. அது என்றும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அவர் வாசகர்களை மட்டும் உருவாக்கவில்லை. எழுத்தாளர்களையும் உருவாக்கி வருகிறார். அவர் நாட்டுக்கும் தேவை. எனக்கும் தேவை.

இவ்வாறு அவர் பேசினார்.