11 அக்., 2015

சரத்குமாருக்கு ஆதரவு நிலை: தாணுவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

யாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் சரத்குமாருக்கு ஆதரவு நிலை எடுத்தது தவறான முடிவென்று படத் தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து  ஏ.எல்.அழகப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா
வது,"நடிகர் சங்கத் தேர்தல் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடைபெறவுள்ளது.  இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.தாணு நடிகர் சங்கத்தேர்தலில் சரத்குமாருக்கு ஆதரவான ஒரு நிலையில் சமரச பேச்சு என்கிற பெயரில் தேர்தலைத் தவிர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். தயாரிப்பாளர் சங்கம் என்ற பெயரில் அவர் எடுத்துள்ள இந்த  முடிவு அவரது தன்னிச்சையான முடிவாகும்.

நடிகர் சங்கத்தேர்தலில் போட்டியில் இருந்து  விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் விஷால் கூறியுள்ளார்.  இதனால் தாணுவின் இந்த  முயற்சி முறையற்றது. தேர்தல் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி நடத்தப்படுகிறது. பொதுவாக எந்தச் சங்கத்தின் தேர்தல் நடவடிக்கையிலும் மற்றொரு  சங்கம் தலையிடக் கூடாது என்பதுதான்  மரபு. சினிமாத்துறையில் உள்ள அத்தனை யூனியன்களிலும் எந்த தலையீடும் இல்லாமம் தேர்தல் நடத்தப்படுகின்றன.

விருப்பம் இருந்தால் சரத் குமாருக்கு தாணு தனிப்பட்டமுறையில் ஆதரவு அளிக்கட்டும்.  அது பிரச்னையில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தைக் கூட்டாமல் தன்னிச்சையாக முடிவெடுப்பது முறையானது அல்ல. தேர்தல் சமயத்தில் இப்படி செய்வது ஏதோ தயாரிப்பாளர் சங்கமே துணை நிற்பது போல ஒரு தோற்றத்தை உண்டாக்கி விடும். அது தேர்தல் சமயத்தில் வேறு விதத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. 

அதோடு இதுபோன்ற ஆதரவு  வருங்காலத்தில் தயாரிப்பாளர்கள், நடிகர்களிடையே பிளவு ஏற்படுத்துவதோடு மனக்கசப்புக்கும் வழி வகுக்கும். தயாரிப்பாளர்களுக்கு எல்லா நடிகர்களும்தான் வேண்டும். ஒருதலைபட்சமாக இப்படிப்பட்ட முடிவெடுக்க என்ன அவசியம் வந்தது? 

ஏற்கெனெவே இதற்கு முன் நடந்த நடிகர் சங்கத்தேர்தல்களில்  எவ்வளவோ அரசியல் நடந்திருக்கிறது. அப்போதுகூட இன்னொரு சங்கம் தலையிட்டதில்லை. நானும் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்தான். விநியோகஸ்தர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் பொறுப்பில் இருந்திருக்கிறேன்.தாணுவின் எடுத்தது முழுக்க முழுக்க அவரது தனிப்பட்ட முடிவாகும். இதில் பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு இணக்கம் இல்லை. நடிகர் சங்கத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் மாலை போடுவோம்.'' 

இவ்வாறு அந்த அறிக்கையில் ஏ.எல். அழகப்பன் கூறியுள்ளார்.