புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2015

ஆச்சி 'மனோரமா'வின் அரசாட்சி!



ன்னதான் சொன்னாலும் சாணியும் சந்தனமும் ஒண்ணாயிடமுடியுமா?”
“ஏஞ்சாமி முடியாது… சாணியை புள்ளையாரா புடிச்சி வைக்கும்போது சந்தனத்தை எடுத்துதானே பொட்டுவைக்கிறோம். ரெண்டும் ஒண்ணாயிடலையா?” - ‘இது நம்ம ஆளு’ படத்தில் வரும் வசனம்.  இந்த வசனத்தை எழுதியவரும், அதை இயக்கியவரும் பிரபலங்கள்தான். ஆனால், அந்த வசனத்திற்கு உயிர் கொடுத்து உச்சரித்தவர் ஆச்சி மனோரமா. எத்தனையோ வசனங்களை இப்படி உயிர்ப்பித்தவர் அவர்.



ஆணுக்கு சமமாகப் பெண்களால் சாதிக்க முடியுமா என்று பொதுவாகக் கேட்பது வழக்கம். ஆனால், மனோராமாவை முன்னிறுத்தி அப்படிக் கேட்கமுடியாது. இந்தப் பெண்மணிக்கு இணையாக சாதித்த ஆண்கள் யாராவது இருக்கிறார்களா என்றுதான் நடிகர்களைப் பார்த்து கேட்கவேண்டும். ‘ஆம்பள சிவாஜி’ என்று மனோரமாவை சிலர் குறிப்பிடுகிறார்கள். அது பொருத்தமானதல்ல. யாருடனும் ஒப்பிட முடியாத தனித்துவம் வாய்ந்த திரைக்கலைஞர்தான் ஆச்சி மனோரமா.

1943ஆம் ஆண்டு மே 26ந் தேதி அன்றைய தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தவர் மனோரமா. பிறந்தபோது வைத்த பெயர், கோபிசாந்தா. அவருடைய குடும்பம் காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது. குடும்பச் சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு அவருக்கு சூட்டப்பட்ட பெயர்தான் மனோரமா. நடிப்பு, பாட்டு என அசத்தினார். 

வைரம் நாடக சபா போன்ற நாடக கம்பெனிகளில் அவர் நடித்தாலும், மனோரமாவை மேடை நாடகக் கலைஞராக அடையாளம் காட்டியது திராவிட இயக்கத்தின் பிரச்சார நாடகங்கள்தான். அறிஞர் அண்ணாவின் நாடகத்தில் மனோரமா நடித்தார். “உள்ளம் உடைந்ததா தமிழா.. உண்மை உணராயோ” என்று தி.மு.க நாடக மேடைகளில் கணீர் குரலில் மனோரமா பாடுவார். இயக்கப் பிரச்சார நாடகங்களை கலைஞர் மு.கருணாநிதி எழுதியதுடன் அதில் அவரும் நடிப்பார். ‘உதயசூரியன்’ நாடகத்தில் கலைஞருடன் நடித்தவர் மனோரமா. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தில் மணிமகுடம், தென்பாண்டிவீரன், புதுவெள்ளம் உள்ளிட்ட நாடகங்களில் மனோரமா நடித்தார். நாடக மேடைகளிலிருந்து திரைத்துறை நோக்கி அவருடைய பயணம் அமைந்தது. 


திரையுலகில் மனோரமாவை அறிமுகம் செய்தவர் கவியரசு கண்ணதாசன். அவரது தயாரிப்பில் 1958ல் வெளியான மாலையிட்ட மங்கை படத்தில் அறிமுகமானார் மனோரமா. எனினும், அவரை முதன்முதலில் நாயகியாக்கிய படம், ‘கொஞ்சும் குமரி’. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தின் இப்படைப்பு 1963ல் வெளியானது. மனோரமா என்ற நடிகையின் பேராற்றலை தமிழ் ரசிகர்கள் வியந்து பார்த்தது, தில்லானா மோகனாம்பாள் படத்தில்தான். சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜிக்கும், திருவாரூர் மோகனாம்பாளாக நடித்த பத்மினிக்கும் சற்றும் சளைக்காமல், ‘ஜில் ஜில் ரமாரமணி’ என்ற பாத்திரத்தில் வெளுத்துக் கட்டினார் மனோரமா. ‘அந்த மோகனாங்கி ஆடுறாகளாமே.. அவுகள பாக்க ஆளுக வந்தா.. நான் ஆடுறத பாக்க வரமாட்டாகளா?” என்று வட்டார வழக்கில் மனோரமா பேசியதும், சிவாஜியும் அவரும் கலாய்க்கும் காட்சிகளும் காலங்கடந்தும் நெஞ்சில் நிறைந்திருப்பவை. தமிழுக்கு ஒரு சிறந்த நகைச்சுவை நடிகையைத் தந்தது ‘ஜில் ஜில் ரமாமணி’ கதாபாத்திரம். நடிப்பைப் போலவே பாட்டிலும் அவரது தனித்துவம் வெளிப்பட்டது.

பொம்மலாட்டம் படத்தில் வி.குமாரின் இசையில் ‘வா.. வாத்யாரே வூட்டாண்ட.. நீ வராங்காட்டினா வுடமாட்டேன்” என்று சென்னை வழக்கில் மனோரமா பாடிய பாடல் இப்போதும் ஹிட்தான். கருந்தேள் கண்ணாயிரம் படத்தில், ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே.. நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே.. மந்தவெளியிலே ஒரு மைனர் பின்னாலே நான் மயங்கி நின்னேயா அவன் மூஞ்சி நல்லால்லே’ என்று அவர் பாடிய பாடலும் ஒலிக்காத இடமில்லை. தலைமுறைகள் கடந்த பிறகும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மே மாதம் படத்தில், ‘மெட்ராஸை சுத்திப்பார்க்கப் போறேன்‘ என்ற பாடலில் அசத்தினார் மனோரமா. பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் சந்திரபோஸ் இசையில், ‘டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே‘ என்ற பாடலைப் பாடினார். மனோரமாவைத் திரையில் முதலில் பாட வைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். மகளே உன் சமத்து என்ற படத்தில் ‘தாத்தா.. தாத்தா பிடிகொடு. இந்த தள்ளாத வயசிலே சடுகுடு’ என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா.


காலந்தோறும் இசையில் ஏற்பட்ட மாற்றத்திற்கேற்ப மனோரமா எப்படி பாடினாரோ, அதுபோலவே காலந்தோறும் மாறி வந்த கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் ஆகியோருடன் சளைக்காமல் நடித்தவர் மனோரமா. அவர் அறிமுகமானபோது எம்.ஜி.ஆரும், சிவாஜியும் திரையுலகின் மன்னர்களாக இருந்தார்கள். இருவர் படங்களிலும் மனோரமா நடித்தார். குறிப்பாக, சிவாஜி படங்களில் மனோரமாவின் நடிப்புக்கு நிறைய தீனி கிடைக்கும். அதன்பிறகு கமல், ரஜினி படங்களில் இருவருடனும் போட்டா போட்டி போட்டு நடிப்பதுபோன்ற பாத்திரங்கள் அமைந்தன. பின்னர் சத்யராஜூடன் அதகளம் செய்தார். பாக்யராஜூடனும் கலக்கினார். நாகேஷ், சோ, சுருளிராஜன், கவுண்டமணி எனப் பல நகைச்சுவை நடிகர்களுடன் பங்கேற்று ரசிகர்களை கவலை மறந்து சிரிக்க வைத்ததில் மனோரமாவுக்கு முக்கிய பங்கு உண்டு. 

ஒரு படத்தில் நகைச்சுவை நடிகையாக கலக்கியிருப்பார். அடுத்த படத்தில், குணச்சித்திர நடிகையாக உருக்கிவிடுவார். நடிகன் படத்தில் வயதான கெட்டப்பில் உள்ள சத்யராஜ் மீது காதல் கொண்ட முதிர்கன்னியாக கலகலப்பூட்டினார். சிங்காரவேலன் படத்தில் திருமணமாகாத பேரிளம்பெண்ணாக நடித்து தன்னை நாயகி குஷ்புவுடன் ஒப்பிட்டு சிரிப்பலை ஏற்படுத்துவார். பொதுவாக நகைச்சுவை கலைஞர்கள் சோக காட்சிகளில் நடித்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரும். ஆனால் ஆச்சி மனோரமா இந்தியன் படத்தில், தன் கணவனின் மரணத்திற்கு நிவாரணம் கேட்டு லஞ்ச அதிகாரிகளிடம் படும்பாடும், அப்போது அவர் வெளிப்படுத்தும் கோபமும் சாபமும் எல்லோரையும் கலங்கவைத்தன. கிழக்குவாசல், சின்னதம்பி உள்பட பல படங்களில் அவர் தன் குணச்சித்திர நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்தார். 

காரைக்குடியில் வளர்ந்தவர் என்பதால் திரையுலகில் அவரை ஆச்சி என்று அழைப்பது வழக்கம். திரையுலகில் அவர் தனி ஆட்சி நடத்தியவர் என்பதுதான் உண்மை. தமிழ் சினிமாவில் கலைவாணரில் தொடங்கி சந்தானம் வரை நகைச்சுவை நடிகர்களுக்கு ஒரு தொடர்ச்சியான வரிசை உண்டு. ஆனால், நகைச்சுவை நடிகைகள் எப்போதாவது வருவார்கள். குறிப்பிட்ட காலம் கிடைக்கும் வாய்ப்புகளுக்குப் பிறகு ஒதுங்கிவிடுவார்கள். ஆனால், மனோரமா அதிலும் மாறுபட்டவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நிலைத்திருக்கிறார்.


தமிழ்ப்படங்கள்தான் அவருக்கு முதன்மையானவை. தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் மனோரமா. பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகளுடன் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருதையும் மனோரமா பெற்றிருக்கிறார். அவருடைய ஆற்றலுக்கு இந்த விருதுகளெல்லாம் குறைவுதான். காரணம், மனோரமாவுடன் ஒப்பிட்டுச் சொல்ல தமிழ்த் திரையில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் வேறெந்த நடிகையும் இல்லை. திரைவானில் அவர் துருவ நட்சத்திரம்!

ad

ad