புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2015

கால்பந்து நிர்வாகத்தில் முறைகேடு: செப் பிளாட்டர், பிளாட்டனி அதிரடியாக இடைநீக்கம்


முறைகேடு எதிரொலியாக சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் செப் பிளாட்டர், அடுத்த தலைவராக வாய்ப்பில் இருந்த மைக்கேல்
பிளாட்டனி ஆகியோர் 90 நாட்களுக்கு அதிரடியாக இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கால்பந்து அமைப்பில் பெருக்கெடுத்த ஊழல்

உலக கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தும் வாய்ப்பை ஓட்டெடுப்பு மூலம் குறிப்பிட்ட நாடுகளுக்கு உரிமம் வழங்கப்பட்டதிலும், டெலிவிஷன் ஒளிபரப்பு உரிமம் அளிக்கப்பட்டத்திலும் ஏராளமான ஊழல் நடத்திருப்பது சில மாதங்களுக்கு முன்பு அம்பலமானது. கால்பந்து நிர்வாகிகள் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், கொடிகட்டி பறந்த சர்வதேச கால்பந்து சம்மேளனத்திற்கு (பிபா) பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தின. 

இதையடுத்து 5-வது முறையாக ‘பிபா’ தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுவிட்சர்லாந்தின் 79 வயதான செப் பிளாட்டர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இருப்பினும் பிப்ரவரி மாதம் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில் அந்த பதவியில் தொடருவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

பிளாட்டர், பிளாட்டனி மீது நடவடிக்கை

இதற்கிடையே ஆலோசகராவும், பல விஷயங்களில் தனக்கு ஆதரவாக செயல்பட்டமைக்காகவும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவரும், பிபா துணைத்தலைவருமான மைக்கேல் பிளாட்டனிக்கு (பிரான்ஸ்) ‘பிபா’ நிதியில் இருந்து ரூ.13 கோடியை செப் பிளாட்டர் 2011-ம் ஆண்டில் லஞ்சமாக கொடுத்தார் என்ற தகவல் கசிந்தது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இந்த விவகாரம் மறுபடியும் விசுவரூபம் எடுத்தது.

இதையடுத்து செப் பிளாட்டரின் அலுவலகத்தில் தடாலடியாக சோதனை மேற்கொண்ட சுவிட்சர்லாந்து அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். பிளாட்டர் மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ‘பிபா’ நிதியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து சுவிட்சர்லாந்து அரசு விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் முன்னணி கால்பந்து நிர்வாகிகளின் முறைகேடுகள் குறித்து ஹான்ஸ் ஜோசிம் எக்கெர்ட் தலைமையிலான ‘பிபா’ ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி தீவிரமாக விசாரணை நடத்தி பரபரப்பான தண்டனை விவரத்தை நேற்று வெளியிட்டது. இதன்படி செப் பிளாட்டர், ‘பிபா’வின் புதிய தலைவருக்கான வாய்ப்பில் முன்னணியில் இருக்கும் மைக்கேல் பிளாட்டனி, பிபா பொதுச் செயலாளர் ஜெரோம் வால்க்கே (பிரான்ஸ்) ஆகியோர் 90 நாட்கள் இடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜெரோம் வால்க்கே ஏற்கனவே 2014-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து டிக்கெட் விற்பனை செய்ததில் முறைகேடு செய்ததாக விடுப்பில் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தடை நீட்டிக்கப்பட வாய்ப்பு

உலக கால்பந்து அமைப்பில் செல்வாக்குமிக்கவர்களாக திகழ்ந்த இவர்கள் மூன்று பேரும் இன்று முதல் மூன்று மாத காலத்திற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் கால்பந்து தொடர்பான எந்தவித நடவடிக்கைகளிலும் பங்கேற்க முடியாது. தேவைப்பட்டால் தண்டனை காலம் மேலும் 45 நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்றும் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. 

தடை காலம் நீட்டிக்கப்பட்டால் பிப்ரவரி 20-ந்தேதி அன்று தான் அது முடிவுக்கு வரும். அடுத்த 6 நாட்களில் அதாவது பிப்ரவரி 26-ந்தேதி ‘பிபா’ தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே இந்த தடை, சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவியை கைப்பற்ற வரிந்து கட்டி நின்ற 60 வயதான மைக்கேல் பிளாட்டனிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. அதே சமயம் நீக்கத்தை எதிர்த்து இவர்கள் இரு தினங்களுக்குள் அப்பீல் செய்யலாம்.

பிளாட்டரின் வழக்கறிஞர்கள் கூறுகையில், ‘ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை. குறிப்பாக இடை நீக்கத்திற்கு முன்பாக பிளாட்டரிடம் எந்தவித விளக்கமும் கேட்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்திற்குரியது. அவர் எந்த தவறும் செய்யவில்லை’ என்றனர்.

இடைக்கால தலைவர் நியமனம்

இதே போல் ‘பிபா’ தலைவர் பதவிக்கு முயற்சித்து வந்த முன்னாள் துணைத்தலைவரான தென்கொரியாவை சேர்ந்த தொழிலதிபரும், ஹோண்டாய் குழுமத்தை சேர்ந்தவருமான சங் மூங் ஜோனுக்கு 6 ஆண்டுகள் தடையும், ரூ.67 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவரது ‘பிபா’ தலைவர் கனவும் முடிவுக்கு வந்தது. 2022-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியை தங்கள் நாட்டில் நடத்தும் வாய்ப்பை பெறுவதற்காக, இவர் விதிமுறைக்கு புறம்பாக செயல்பட்டு சர்ச்சையில் சிக்கியவர் என்பது நினைவு கூரத்தக்கது.

பிளாட்டர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதால், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் செயல் தலைவராக ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் இசா ஹயடோவ் (கேமரூன்) நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

ad

ad