11 அக்., 2015

முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கிறது 'பாண்டவர் அணி'

நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரான முதல்வர் ஜெயலலிதா நாங்கள் நிச்சயம் சந்தித்து வாக்கு கேட்போம் என்று தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாண்டவர் அணியை சேர்ந்த நாசர் தெரிவித்தார்.
 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார்- ராதாரவி தலைமையிலான அணியும், விஷால்– நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிடுகின்றன. இரு அணியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்ளும் நிலை தொடர்ந்து வருகின்றது.

பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர்கள், நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன், சாந்தனு, நடிகைகள் ரோகினி, குட்டி பத்மினி, கோவை சரளா உள்ளிட்டோர்  தமிழகம் முழுவதும் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு நாடக நடிகர்களை சந்தித்து தங்களின்  ஆதரவை திரட்டி வருகிறார்கள்.

நேற்று சேலம் சென்ற விஷால் அணியினர் இன்று திருச்சியில் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்டனர். முன்னதாக இந்த அணியினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது, ரஜினி, கமல், விஜயகாந்த்தை சென்று சந்தித்தீர்கள். முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளித்த நாசர், "இந்த சங்கத்தின் மூத்த உறுப்பினரான முதல்வர் ஜெயலலிதா 8 கோடி மக்களுக்கும் முதல்வர். அவருக்கு ஒட்டுமொத்த மக்களை கவனிக்க வேண்டிய கடமை இருக்கிறது. அவரை நாங்கள் நிச்சயம் சந்தித்து வாக்கு கேட்போம். அவர் வாக்களிக்க வந்தால் எங்களுக்கு பெருமைதான்.

தேர்தலுக்கு பிறகும் கூட நாங்கள் விருப்பு வெறுப்பு இல்லாமல்தான் செயல்படுவோம். நாங்கள் யார் மீது காழ்ப்புணர்ச்சியோடு நடக்கவில்லை. நடக்கவும் மாட்டோம், தேர்தல்தான் ஆரோக்கியமான விசயங்களை உருவாக்கும். அதன்படி, நாங்கள் கேள்வி எழுப்பியபோது உண்மைக்காக குரல்கொடுத்தோம். இப்போ எங்கள் பின்னால் பல்வேறு நபர்கள், நடிகர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். அதே பலத்துடன் நிற்கிறோம்" என்றார்.