புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2016

சர்வதேச வர்த்தகக்கண்காட்சி 7ஆவது வருடமாக யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 07ஆவது வருடமாக எதிர்வரும் 29,30,31 திகதிகளில் யாழ்ப்பாணம் மாநகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. என யாழ். தொழிற்றுறை மன்றத் தலைவர் கே.விக்னேஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் பிரதான அனுசரணையை ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனமும், இணை அனுசரணையை எஸ்-லோன் நிறுவனமும் வழங்குகின்றன. தொலைதொடர்பாடல் பங்காளராக மொபிடெல் நிறுவனமும், மின்வலு உற்பத்திப் பங்காளராக sicher நிறுவனமும், அழகுக் கலை பங்காளராக 4ever நிறுவனமும், கல்விப் பங்காளராக ICBT jaffna நிறுவனமும், தகவல் தொழில்நுட்பப் பங்காளராக ewis நிறுவனமும் விளங்குகின்றன. அச்சு ஊடக (தமிழ்) பங்காளராக உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளும், வானொலிப் பங்காளராக தமிழ் பண்பலை வானொலியும் விளங்குகின்றன. 

வட மாகாணத்திலுள்ள அனைத்து தொழில் முயற்சியாளர்களும் தமது உற்பத்தி மற்றும் சேவைகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச வலையமைப்புடன் இணைப்பதன் ஊடாக தமது உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான பரந்தளவிலான சந்தை வாய்ப்பை ஏற்ப்படுத்திக்கொள்ள ஒரு இணைப்பு பாலமாக இந்த கண்காட்சி அமைகிறது.

தற்போது இடம்பெற்று வருகின்ற பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் முன்னர் இல்லாத வகையில் பல்வேறு முதலீட்டு வாய்ப்புக்களுக்கு வழிவகுத்துள்ளது. வாய்ப்புக்கள் மற்றும் முதலீடுகளை ஆராய்வதற்காக 60 அங்கத்தவர்களை உள்ளடக்கிய விசேட தூதுக்குழு ஒன்று இந்தியாவிலிருந்து வருகை தரவுள்ளது. 

இந்நிகழ்வானது ‘வடக்கிற்கான நுழைவாயில்’ என பெயர் பெற்றுள்ளது. தெற்கு மற்றும் வடக்கிற்கு இடையில் கூட்டு தொழில் முயற்சிகள், ஒன்றிணைந்த வர்த்தக நடவடிக்கைகள், பாரியளவிலான கேள்விகளை ஏற்றுக்கொள்ளல் என வர்த்தகரீதியாக பிணைப்பை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. 

நிர்மாணம் உபசரிப்பு உணவு மென்பானவகை பொதியிடல் வாகனங்கள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் நிதியியல் சேவைகள் ஆடைத்துறை விவசாயம் நுகர்வோர் உற்பத்திகள் உள்ளிட்ட பல துறைகளை உள்ளடக்கிய 300 காட்சிக்கூடங்கள் இந்த கண்காட்சியில் அமைக்கப்படவுள்ளன.

முயற்சியாளர்கள் பொருத்தமான உள்ளீடுகள் மற்றும் இயந்திர சாதனங்களையும் அதன் பயன்பாட்டினையும் இனங்கண்டு தத்தமது தொழில்துறையில் பிரயோகிப்பதற்கும் சிறந்த ஒரு களமாக இது அமையும்.

நிலைத்து நிற்கக்கூடிய புதிய தொழிற்துறைகளை இனங்கண்டு சிறந்த முறையில் முன்னெடுத்து வெற்றிகரமான தொழில் முயற்சியாளன் எனும் நிலையை அடைவதற்கு இந்த நிகழ்வு பயனுடையதாக அமையும்.

கடந்தகால தரவுகளுடன் ஒப்பிடுகையில் இந்த முறை 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையாளர் நுழைவுக்கட்டணமாக 30 ரூபாய் அறவிடப்படும். அத்துடன் பாடசாலை மாணவர்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர்.

மேலும் குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பளிஹக்கார, கௌரவ விருந்தினர்களாக இந்திய துணைத்தூதுவர் நடராஜன், யாழ்.அரச அதிபர் வேதநாயகன், மற்றும் யாழ்.மாநகர சபை ஆணையாளர் வாகீசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் இக்கண்காட்சியில் முக்கிய அம்சங்கள்:

•நுகர்வோர் தெரிவுகள் முதல் கைத்தொழில் பொருட்கள் மற்றும் சேவைகள் வரை 300 இற்கும் மேற்பட்ட கண்காட்சிக்கூடங்கள் 
•இக்கண்காட்சிக்கு 60,000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தரவுள்ளமை 
•மாலைப்பொழுதில் நேரடி இசை நிகழ்வுகள் 
•சிறுவர்கள் விளையாடுவதற்கான வசதி உட்பட பொழுதுபோக்கு பூங்கா 
•அனைத்து வகையான உணவு மற்றும் பான வகை, கூவி விற்கும் உணவுக்கூடங்கள் 
•1000 இற்கும் மேற்பட்ட உற்பத்திகளுக்கு விசேட தள்ளுபடிகள் 
•வியப்பூட்டும் பரிசுகளை வெல்வதற்கு மணித்தியாலத்திற்கு ஒரு முறை அதிர்ஸ்ட குலுக்கல் சீட்டிழுப்புக்கள் 
•கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் 
•விசேட உயர் கல்வி காட்சிக்கூடங்கள்
•யாழ்ப்பாணத்தில் இலங்கையின் முதல்தர தேயிலையின் சுவை அனுபவம் மற்றும் சுற்றுலா

ad

ad