சிங்களத் தேசிய தலைவர்களால் முன்மொழியப்பட்ட சமஸ்டி ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துமாறு உங்கள் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து எங்களுக்கு ஆதரவளியுங்கள் என பெரும்பான்மை (சிங்கள) இன மக்களுக்கும் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட ஊடகவியலாளர் மாநாடொன்று நடைபெற்றது. இன்றைய சமகால அரசியல் நிகழ்வுகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பாக சுமந்திரன் விளக்கம் அளித்தார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சுமந்திரன் சமஸ்டி முறை தொடர்பாக இப்படிக் கூறுகின்றார்.
நாட்டின் நிர்வாகத்தில் அனைத்து இன மக்களும் அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு சமஸ்டி முறைமை ஆட்சி என்றால் நாடு ஒன்றுபடும் அதேவேளை, ஒற்றை ஆட்சி முறைமை என்றால் நாடு பிளவுபடும். ஓரினத்தை மற்றோர் இனம் அடிமைப்படுத்த முனையும் போதுதான் குரோதமும், பிரிவினைவாதமும் ஏற்படும். இதனை சிங்கள் மக்கள் தமது தலைவர்களுக்கு எடுத்துக்கூறவேண்டும்.
சமஸ்டி முறை அதிகாரப்பரவலாக்கம் தமிழ் மக்களால் உச்சரிக்கப்பட்ட ஒரு புதிய சொல் அல்ல. 1926ஆம் ஆண்டில் சிங்கள மக்களால் தேசியத் தலைவராக இன்னும் மதிக்கப்படும் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவால் தான் முன்மொழியப்பட்டது. தன்னுடைய முன்மொழிவை நியாயப்படுத்தி 'Morning Leader' என்ற பத்திரிகையில் ஆக்கபூர்வமான ஐந்து கட்டுரைகளை எழுதியுள்ளார்.
அதுமட்டுமல்ல, சுவிஸ் நாட்டில் இருப்பதுபோன்று ஒரு சமஷ்டி முறையே இலங்கைக்கும் பொருத்தமானது என்றும் அடித்துக் கூறியுள்ளார். 1931ஆம் ஆண்டில் சோல்பரி ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த கண்டிய சிங்களத் தலைவர்களும் சமஷ்டி முறையே ஏற்றது என சாட்சியமளித்துப் பதிலளித்துப் பதிவுசெய்துள்ளனர்.
எனவே, நாட்டின் நலனில் அக்கறையுடன் செயற்பட்ட தேசிய தலைவர்களும் சிங்கள மக்களும் சமஸ்டி ஆட்சி முறைமையை எதிர்க்கவில்லை. சில சுயநலவாத அரசியல் பினாமிகளே நாடு பிளவுபட்டுவிடும் என்ற பிரேமையை ஏற்படுத்தி இனவாதத்தைத் தூண்டுகின்றனர்.