இலங்கையின் பாதுகாப்பு மீது இந்தியா நிலையான ஆர்வத்தைக் கொண்டிருப்பதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையின் ஒற்றுமை, இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்க உறுதிபூண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று காலை நடந்த 67ஆவது இந்திய குடியரசு நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முதல் அயல்நாடு என்ற கொள்கையில் இலங்கையில் தொடர்ந்தும் முக்கிய இடத்தில் இருப்பதாகவும் இந்தியத் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
மேலும்இ இலங்கையில் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் புதிய அத்தியாயம் தோன்றியிருப்பதாகவும் இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜின் பயணம் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய குடியரசு நிகழ்வில் இந்தியாவின் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன், எல்லைப்பாதுகாப்புப் படைப்பிரிவினரின் அணிவகுப்பும் இடம்பெற்றது.