புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஏப்., 2020

கொரோனா வார்டில் சிகிச்சையின் போது பெற்றோர் உதவியுடன் தப்பி ஓடிய பள்ளி மாணவன்! வீட்டுக்கு சென்றதும் நடந்த அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் மூச்சுதிணறலுக்காக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தப்பிய பிளஸ்-2 மாணவர் திடீரென மரணம் அடைந்தார்.

தென்காசி மாவட்டத்தின் ஐந்தாம் கட்டளையை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் கபிலன் (18). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இவர் அடிக்கடி அப்பகுதியில் உள்ள ஆறு, குளம், கிணறு பகுதிகளில் நண்பர்களுடன் சென்று குளித்து வந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு இவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிக்சைக்காக அழைத்து சென்றனர்.

ஆனால் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அவர் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூச்சுதிணறல் இருந்ததால் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்ததால் மனமுடைந்த கபிலன் மற்றும் அவரது பெற்றோர் மாணவனை வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவெடுத்தனர். இதையடுத்து மருத்து வர்களின் அனுமதியின்றி கபிலனை அவரது பெற்றோர் மருத்துவமனையில் இருந்து நைசாக அழைத்து சென்று விட்டனர்.


மருத்துவமனை ஊழியர்கள் கபிலன் மாயமானது குறித்து மருத்துவமனைக்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கபிலன் எங்கு சென்றான் என விசாரித்து வந்தனர்.


அதன்படி சொந்த ஊரான ஐந்தாம் கட்டளைக்கு சென்றால் பொலிசார் பிடித்து விடுவார்கள் என்பதால் ஆய்க்குடி அருகே தேசிய நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு மாணவனும் அவரது பெற்றோரும் சென்றனர். அங்கு வைத்து கபிலன் மருந்து- மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

இந்தநிலையில் மாணவன் கபிலன் திடீரென இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மூச்சுதிணறலுக்காக சேர்க்கப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டதால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததா? அல்லது நெஞ்சுவலி இருந்ததால் அதன் காரணமாக அவர் இறந்தாரா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்