புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

12 ஏப்., 2020

ராமேஸ்வரத்தில் ரகசியமாக இருந்த சுவிஸ்குடிமகன் ஈ மெயில் மூலம் சென்னை தூதரகத்தோடு தொடர்பு கொண்டார் விடுதியில் ரகசியமாக தங்கியதால் நாடு திரும்ப முடியாமல் தவித்த சுவிட்சர்லாந்து நாட்டவர்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தமிழகத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் ரகசியமாக தங்கியிருந்ததால், அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

தற்போது உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. இதன் காரணமாக வேறொரு நாட்டில் இருந்து எந்த ஒரு நாட்டிற்கும் வந்திருந்தால், அவர்கள் நிச்சயம் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

அப்படி இருக்கையில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நபர், தமிழகத்தில் விடுதி ஒன்றில் கொரோனா பரிசோதனை செய்யாமல், விடுதியில் தங்கி வந்திருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதியில் தங்கும் வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் குறித்த விபரங்களை ராமேஸ்வரம் பொலிசார், குடிவரவு செயல்பாடு கண்காணிப்புத்துறை மற்றும் கியூ பிரிவு பொலிசாருக்கு நாள்தோறும் தெரிவிக்க வேண்டும்.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல், வெளிநாட்டவர் ஊடுருவலை தடுக்கும் வகையில் ராமேஸ்வரத்தில் பல ஆண்டுகளாக இந்த முறை வழக்கத்தில் உள்ளது.

தற்போது கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், ராமேஸ்வரம் தனியார் தங்கும் விடுதியில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த சுற்றுலாப்பயணி ஒருவர் தங்கியிருந்த தகவல் வெளியானதால் அதிகாரிகள் மற்றும் புலனாய்வுத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.


இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற போது, அவரின் பெயர் ஜென்டன் டேனியல் சார்லஸ் (69) எனவும் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் திகதி விமானம் மூலம் கேரள மாநிலம், கொச்சி வந்துள்ளார்.

அதன் பின் பல்வேறு இடங்களுக்கு சென்ற இவர், கடந்த மார்ச் மாதம் 17-ஆம் திகதி ரமேஸ்வரம் வந்துள்ளார். அப்போது ஊரடங்கு உத்தரவு அமலானதால், சில நாட்கள் இது குறித்து தெரிவிக்காமல் விடுதியில் தங்கி வந்துள்ளார்.

இதுபற்றி விடுதி உரிமையாளர் பொலிசாருக்கு முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் ஜென்டன் டேனியல் சார்லஸ், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சென்னையில் இருக்கும் சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு, நாடு திரும்ப முடியாமல் ராமேஸ்வரத்தில் தங்கியுள்ளதாக இமெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இது குறித்து ராமநாதபுரம் கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கலெக்டர் வீரராகவராவ் உத்தரவை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள், சார்லசுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

பின்னர் நேற்று கார் மூலம், சென்னையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு ஜென்டன் டேனியல் சார்லஸ் அனுப்பி வைக்கப்பட்டார்.

அரசு உத்தரவை மீறி, சட்டத்திற்கு புறம்பாக தங்கும் விடுதி அறையில் வெளிநாட்டு நபர் தங்குவதற்கு அனுமதித்த விடுதி உரிமையாளர் ஆம்ஸ்ட்ராங் மீது ராமேஸ்வரம் நகர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.