புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 நவ., 2012


சரவணபவன் எம்.பி, உதயன் பத்திரிகை ஆசிரியர் மீது யாழ். பல்கலையில் வைத்து படையினர் தாக்குதல
யாழ் பல்கலைக்கழக பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் ரீ.பிரேமானந்த் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலை இராணுவத்தினரே மேற்கொண்டதாகவும் முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளதாக சரவணபவன் எம்.பி தெரிவித்தார்.
சம்பவத்தின் போது தாக்குதலுக்கு உள்ளான உதயன் ஆசிரியர் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் சரவணபவன் எம்.பி மேலும் கூறியதாவது,
யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் இராணுவம் உட்புகுந்துள்ளதாகவும் அதனால் அங்கு பதற்றம் நிலவுவதாகவும் கேள்வியுற்றதை அடுத்து அங்கு விரைந்தேன்.
விடுதிக்குள்ளும் விடுதிக்கு வெளியிலும் இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிந்திருந்ததைக் கண்டு, பொலிஸாரிடம் இது தொடர்பில் வினவினேன்.
இந்நிலையில், அவ்விடத்துக்கு வந்த உதயன் பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் பிரேமானந்த், விடுதிக்குள் இராணுவத்தினர் குவிந்திருப்பதை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
இதன்போது விடுதிக்குள்ளிருந்து வேகமாக வெளியேறிய இராணுவத்தினரில் சிலர், உதயன் ஆசிரியரை சுவரில் சாய்த்து முகத்தில் குத்தினர். அத்துடன், அவரிடமிருந்த புகைப்படக் கமராவையும் பறிக்க முற்பட்டனர். அதனைத் தடுக்க நான் முற்பட்ட போது என் மீதும் தாக்குதல் நடத்த அவர்கள் முற்பட்டனர்.
இதன்போது, அவர்களை தடுத்து நிறுத்திய எனது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், இவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று விளக்கிக்கூறினர். இதனையடுத்து அவர்கள் அவ்விடத்திலிருந்து நகர்ந்தனர்.
நானும், உதயன் ஆசிரியரும் வாகனத்துக்கு அருகில் வந்தபோது, சிவில் உடையில் இருந்த இராணுவத்தினர் எம்மை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். உடனடியாக நாம் வாகனத்தில் ஏறிக்கொண்டு பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடொன்றைப் பதிவு செய்தோம்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி கூறுகையில்,
'யாழ். பல்கலைக்கழக பகுதியில் வைத்து சிவில் ஆடையணிந்த சில குழுவினர், சரவணபவன் எம்.பி.க்கு அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்' என்று கூறினார்.

ad

ad