புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 டிச., 2012


கர்நாடகா அரசு, காவிரியிலிருந்து உடனடியாக, தமிழகத்துக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரி கண்காணிப்பு குழு, உடனடியாக கூடி, தமிழகத்துக்கான தண்ணீர் தேவை குறித்து ஆலோசித்து, வரும், 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கு:காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகளுக்கு இடையே, நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக, இரு மாநில அரசுகளுமே
, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, இரு மாநில முதல்வர்களும், சமீபத்தில் பெங்களூரில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. "தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட, திறந்து விட முடியாது'என, கர்நாடகா அரசு தெரிவித்தது.இந்த விவரத்தை, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்ததை அடுத்து, "இரு மாநிலங்களும், தங்களின் தண்ணீர் தேவை, இருப்பு ஆகியவை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதன்படி, இரு மாநில அரசுகள் சார்பிலும், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. இந்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த இரண்டு நாட்களாக, கோர்ட்டில், இரு தரப்பு வாதம் நடந்தது. நீதிபதிகள், டி.கெ.ஜெயின், மதன் பி லோகூர் தலைமையிலான பெஞ்ச் முன், இந்த வழக்கு நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது.


வக்கீல்கள் வாதம்:

மூன்றாவது நாளாக, இரு மாநில வக்கீல்களும், தங்களின் வாதத்தை தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இரு மாநில அரசுகளுமே, தங்களின் விவசாயத்துக்கு, தேவையான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என, கவலை தெரிவித்துள்ளன. எனவே, இதுகுறித்து ஆய்வு செய்து, உத்தரவிட வேண்டியுள்ளது. பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இரு மாநிலங்களின் தண்ணீர் தேவை குறித்து முடிவு எடுப்பதற்காக, காவிரி கண்காணிப்பு குழு, இம் மாதம், 6 அல்லது 7ம் தேதிகளில், தன் கூட்டத்தை கூட்ட வேண்டும். இதில், தமிழகத்தில், எவ்வளவு பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது; சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீர் எவ்வளவு என்பது குறித்து, ஆலோசிக்க வேண்டும்.

அதே போல், கர்நாடகாவுக்கு தேவையான தண்ணீர் அளவு குறித்தும், ஆலோசிக்க வேண்டும். இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, வரும், 10ம் தேதிக்குள், கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது பற்றி, உத்தரவிடப்படும்.

10 ஆயிரம் கன அடி:

இதற்கு இடைப்பட்ட நாட்களுக்கு (வரும், 9ம் தேதி வரை), தினமும், வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி நீரை, தமிழகத்துக்கு, காவிரியிலிருந்து, கர்நாடகா அரசு, உடனடியாக திறந்து விட வேண்டும். காவிரி கண்காணிப்பு குழு, அறிக்கை தாக்கல் செய்யும்வரை, இந்த உத்தரவு, அமலில் இருக்கும்.காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பை, மத்திய அரசு, இதுவரை அரசிதழில் வெளியிடாதது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த தீர்ப்பின் விவரம், அரசிதழில் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து, மத்திய அரசு 
தெரிவிக்க வேண்டும்.இந்த வழக்கின் அடுத்த விசாரணை, வரும், 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

கர்நாடக தலைவர்கள் கண்டனம்:

தமிழகத்துக்கு தினமும், 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீதம், டிசம்பர், 9ம் தேதி வரை, 50 ஆயிரம் கன அடி தண்ணீர் விட வேண்டும்' என்று கர்நாடகா மாநிலத்துக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையறிந்தவுடன், பெல்காம் சட்டசபை கூட்டத்தொடரில் இருந்த கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், நீர்ப்பாசன துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, சட்டத்துறை அமைச்சர் சுரேஷ் குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து தலைவர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஷெட்டர்:

உச்சநீதிமன்ற உத்தரவுபடி, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும். எனவே, மாநில அரசுக்கு, பல சட்ட சிக்கல்கள் ஏற்படலாம். காவிரி நதிநீர் பாதுகாப்பு கமிட்டி தலைவர் மாதே கவுடா போன் மூலம், என்னை தொடர்பு கொண்டு, "உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு அளிக்க வேண்டும். தமிழகத்துக்கு தண்ணீர் விட்டால், விவசாயிகளின் போராட்டத்தை சந்திக்க நேரிடும்' என, எச்சரித்துள்ளார். இது குறித்து உடனடியாக, காங்கிரஸ், ம.ஜ.த., தலைவர்களுடன் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா:

உச்சநீதிமன்றம் முன்பும், காவிரி நதி நீர் ஆணையம் முன்பும், 10 ஆயிரம் கன அடி தண்ணீர் விடுவதாக, ஒப்புக்கொண்டதால் ஏற்பட்ட வினை இது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை. இருந்த போதிலும் கொடுத்துள்ளோம். கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளில் இருக்கும் தண்ணீரில், ஐந்து டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு கொடுத்து விட்டால், கர்நாடகாவில் விவசாயிகளின் போராட்டத்தை, அரசு சந்திக்க நேரிடும்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர்:

உச்சநீதிமன்றத்தில், அரசு சரியாக வாதிடவில்லை, எனத் தெரிகிறது. கர்நாடகத்தில் தண்ணீரின்றி வறட்சி நிலவுகிறது. கர்நாடக அணைகளிலுள்ள தண்ணீர், குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் பற்றாக்குறையாக உள்ளது. 75 சதவீத பயிர்கள் விளைந்துள்ள நிலையில், தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலை உருவாகும்.இதேபோல், மைசூரு, மாண்டியா பகுதி எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

ad

ad