டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: 17 வயது குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை: சிறார் கோர்ட் தண்டனை
டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி டிசம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவன் சிறையில் தற்கொலை செய்து கொண்டான், மற்றொருவன் 17 வயது சிறுவன் என்பதால் அவன் மீதான வழக்கை சிறார் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. மற்ற 4 பேரின் மீதான வழக்குகள் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சிறார் நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்ததால் இவ்வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது,
டெல்லி மாணவி பாலியல் பலாதகார வழக்கில் 17 வயது குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவி கொலையில் சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளித்த சிறார் நீதிமன்றம், 3 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் தங்கியிருக்கவும் உத்தரவிட்டது. பாலியல் பலாத்காரம், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தண்டனை வழங்கப்படும் என்ற நிலையில், நீதிமன்றத்துக்கு வந்த மாணவியின் தாயார், எனது மகளைக் கொன்ற குற்றவாளி உயிரோடு இருக்கிறான் என்பதை நினைக்கும் போது என்னால் எப்படி உயிர் வாழ முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், குற்றத்தை பொறுத்து கடுமையான தண்டனை அளியுங்கள். அவனது வயதை பார்க்காதீர்கள். இந்த தண்டனை இதுபோன்ற குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.