நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் நான்கு பிரதான விடயங்கள் உள்ளடக்கப்படும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது இலங்கை விஜயத்தின் பின்னர் தயாரிக்க உள்ள அறிக்கையானது, நான்கு பிரதான விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், காணாமல் போனவர்கள் தொடர்பான விடயம், மீள்குடியேற்றம் ஆகிய நான்கு விடயங்களை பிரதானமாக கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
நவநீதம்பிள்ளை, வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களையும், அரசசார்பற்ற நிறுவனங்களையும், மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகளையும் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்படும்.
அத்தோடு ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அரசியல் கட்சிகளின் தவைவர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்புகளின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் நடுநிலையான தன்மையை கடைப்பிடிக்க மனித உரிமை ஆணையாளர் தீர்மானித்துள்ளார் என்றும் அறிய கிடத்துள்ளது.
ஆணையாளரின் இந்த அறிக்கை அடுத்த மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னேற்றகரமான விடயங்களும் அறிக்கையில் உள்ளடக்கப்படலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.