பரபரப்பு, பதற்றம், கோபம் என உக்கிர வடிவாக இருக்கிறார் ஜெ. என்கிறார்கள் அவரைச் சுற்றியிருப்பவர்கள். அதற்கு காரணம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக்குவிப்பு வழக்கின் அரசு வழக்கறிஞர் பவானிசிங் அதிரடியாக நீக்கப்பட்டதுதான். இந்த வழக்கில் இதற்கு முன் அரசு வழக்கறிஞராக இருந்தவர் ஆச்சார்யா.
மிகவும் நேர்மையாகவும் அக்கறையுடனும் வழக்கை நடத்திச் சென்றவர் அவர். அவர் மீது ஜெ. தரப்பில் பல புகார்கள் சொல்லப்பட்டதுடன், சென்னையிலிருந்து அதிகாரமிக்க ஒரு டீம் பெங்களூ ருக்கு சென்று முகாமிட்டு பணியாற்றியதன் விளைவாக, கர்நாடகாவில் பா.ஜ.க அரசு இருந்த நேரத்தில் ஆச்சார்யாவுக்கு நெருக்கடிகள் அதிகரித்தன. அவர் அதைப் பற்றி ஓப்பனாகத் தெரிவித்துவிட்டு வழக்கிலிருந்து விலகிக்கொண்டார். அதன்பின், பா.ஜ.க அரசால் நியமிக்கப்பட்டவர்தான் பவானி சிங். கையில் ஆட்சியதிகாரம் இருந்தும், பவானிசிங்கை நீடிக்கச்செய்ய முடியவில்லையே என தனது வழக்கை கவனிப்பவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஜெ.
அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தி.மு.க எம்.பி. தாமரைச்செல்வன் மனு தாக்கல் செய்திருந்த நேரத்தில்தான், அவரை கர்நாடக காங்கிரஸ் அரசே மாற்றிவிட்டது. நாம் இதுபற்றி தாமரைச் செல்வனிடம் கேட்டோம்.
இந்த வழக்கு இங்கு நடைபெறுவதற்கு காரணமே, சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தாக்கல் செய்த மனுதான். அதனடிப்படையில் பேராசிரியர் சார்பில், கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைக் கேட்டு மனு செய்தேன். இதுநாள்வரை கிடைக்க வில்லை. அதுமட்டுமல்ல, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடுவுக்குப் பிறகு இதனை விசாரித்த டி.எஸ்.பி. சம்பந்தம் என்பவர் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராகி சாட்சியம் அளித்தார் என்ற தகவல் கிடைக்க அதிர்ச்சியானேன்.
அவர் லஞ்ச ஒழிப்புத்துறை சம்பந்தப்பட்ட கையேட்டையும், இந்த வழக்குடன் லண்டன் ஓட்டல் வழக்கு இணைந்திருந்தபோது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்தி ரிகையையும் சமர்ப்பித்து, ஜெ.வை பழிவாங்கும் நோக்கத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறை செயல்பட்டதாக அவர் சாட்சியமளித்திருக்கிறார். ஒரு விசாரணை அதிகாரிகளை அதே வழக்கில் சாட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்றால் கோர்ட்தான் சம்மன் செய்து அழைக்க வேண்டும். அந்த குறைந்தபட்ச நடைமுறைகூட இந்த வழக்கில் பின்பற்றப்படவில்லை. கடைசி சாட்சியாக (99வது சாட்சி) டி.எஸ்.பி சம்பந்தத்தை ரகசியமாக கொண்டு வந்து கோர்ட்டில் சாட்சியமளிக்கச் செய்துள்ளனர். இதையும்கூட அரசு வழக்கறிஞர் ஆட்சேபிக்கவில்லை. நீதிபதியும் அனுமதித்திருக்கிறார். இதை எதிர்த்து அப்பீல் செய்யவேண்டிய பவானிசிங் அதைச் செய்யவில்லை.
சிறப்பு நீதிமன்றத்தில் காலை 11.45 மணிக்கு இந்த ஆர்டர் காட்டப்பட, வாதிட்டுக்கொண்டிருந்த பவானிசிங் கோர்ட்டிலிருந்து வெளியேறி அ.தி.மு.க வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த உத்தரவு ஒரு 15 நிமிடம் தாமதமாகக் கோர்ட்டுக்கு வந்திருந்தால் பவானிசிங் தனது வாதத்தை முடித்திருப்பார். வாதங்கள் முழுமையடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்படவிருந்த நேரத்தில் இந்த ஆர்டர் வந்ததால் அது தடுக்கப்பட்டது. இது ஒரு நீண்ட சட்டப்போராட்டம்'' என்றார் தாமரைச்செல்வன்.
தனது பதவிநீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்லப்போவதாக 28-ந் தேதி பவானிசிங் அறிவித்த நிலையில், 29-ந் தேதியன்று அரசு வழக்கறிஞர் நீக்கப்பட்டது நியாயமற்ற செயல் என ஜெ. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட, இதனை மறுநாளே (ஆக.30) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி சதாசிவம் உத்தரவிட்டார். அரசு வழக்கறிஞர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்படுவதை டெல்லி சீனியர் வக்கீல்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற ஐந்தாவது பெஞ்சுக்கு தலைமை நீதிபதி பரிந்துரைக்க, இந்த வழக்கு விசாரணையை எப்படி கொண்டு போவது என தி.மு.க. தரப்பு திணறியபடி யோசிக்க ஆரம்பித்தது.
சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடித்து வந்த ஜெ. திடீரென அதனை முடிக்க வேகம் காட்டுவதையும் வழக்கில் ஏற்படும் திடீர் திருப்பங்களையும் சட்ட வல்லுநர்கள் புருவம் உயர்த்திப் பார்க்கிறார்கள்.