புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2013



        நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க பா.ஜ.க.வின் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கையில் கிடைக்கும் ஒவ்வொரு ஆயுதத்தையும் பயன்படுத்திப் பார்க்க அது எத்தனிக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் அது மிகவும் பொறுமையிழந்துவிட்டது. இதுதான் சந்தர்ப்பம். அடுத்த தேர்தலில்n akeeran ஆட்சியைப் பிடிக்காவிட்டால் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்று தெரியாது. மோடியை மட்டும் நம்பி மோசம்போக பா.ஜ.கவும் இந்துத்துவா அமைப்பு களும் தயாராக இல்லை. வளர்ச்சியின் நாயகன் மோடியின் ஊடகப் பிரபல்யத்தை வாக்குகளாக மாற்ற முடியாது என்பதும் அவற்றுக்குத் தெரியும். வேறு வழியின்றி அவை இப்போது தமது துருப்பிடித்த பழைய கத்தியை எடுத்து கூர்தீட்டத் தொடங்கியிருக்கின்றன. அந்த பழைய ஆயுதம் ராமர் கோயில் என்பதாகும். அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியதன் மூலம் அதிகாரத்திற்கு வந்த பா.ஜ.க. இப்போது மீண்டும் அதே வரலாற்றை மறுபடி உருவாக்க விரும்புகிறது. பா.ஜ.க.வை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். தனது துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் மூலம் சன்னி யாசிகளை களத்தில் இறக்கிவிட்டு இன்னொரு மதவாத ரத்தக் களறியை துவங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

விஷ்வ ஹிந்து பரிஷத் அயோத்தியை சுற்றியுள்ள ஆறு மாவட்டங்களின் வழியே பரிக்கிரம என்ற மத யாத்திரையை ஆகஸ்ட் 25ஆம் தேதி நடத்த அழைப்பு விடுத்தது. இதற்காக அது நாடு முழுவதும் சன்னியாசிகளையும் சாதுக்களையும் திரட்டியது. சுமார் 5000 சன்னியாசிகளுடன் இந்த யாத்திரை யை நடத்தப் போவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தது. யாத்திரையின் நோக்கம் ராமர் கோயிலை அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் மீண்டும் கட்ட வேண்டும் என்ப தாகும். அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் நகரின் வழியாக ஊர்வலம் செல்லும் போது மதவாத மோதல்கள் நிகழலாம் என்று கூறி உத்தர பிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி அரசு ஊர்வலத்திற்கு தடை விதித்தது. தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டபோது உயர் நீதிமன்றம் தடையை நீக்க மறுத்துவிட்டது. ஊர்வலத்தில் பங்கேற்க வந்த சில நூறு சாமியார்கள் கைது செய்யப்பட்ட னர். அகிலேஷ் யாதவ்வின் அரசு சங் பரிவார் தலைவர்களை எவ்வளவு மென்மையாக நடத்த முடியுமோ நடத்தியது. முன்னணி தலைவர்கள் நீதிமன்றக் காவலில் வைத்து விடுவிக்கப்பட்டனர். ப்ரவீன் தொகாடியாவும், ராம்விலாஷ் வேதாந்தியும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக சிங்க்கால் லக்னோ விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். பா.ஜ.க., இது இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயல் என்று கூச்சலிட்டு வருகிறது. 


விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்தவிருந்த இந்த பரிக்கிரம யாத்திரை அரசியல் ரீதியானது, போலித்தன மானது, இந்து மத நெறிகளுக்கு எதிரானது என்பதை அயோத்தியில் உள்ள இந்து மதத் தலைவர்களே குற்றம் சாட்டுகின்றனர். இது முழுக்க முழுக்க ஒரு அரசியல் நாடகம் என்பதை அவர்களே சுட்டிக் காட்டுகின்றனர். அயோத்தியின் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ""இந்து மரபுகளின்படி 84-வது கோசி பரிக்ரமா சித்ரா பௌர்ணமியிலிருந்து பைசாக் நவமி வரை நடத்தப்படும். அது ஏற்கனவே அதற்குரிய காலமான ஏப்ரலில் சாதுக் களால் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. புராண நம்பிக்கை களின்படி ஆகஸ்ட் மாதம் கானகத்தில் சீதையைத் தேடி  அலைந்த ராமர் ஓய்வெடுக்கும் காலம். இப்போது பரிக்கிரம நடத்துவது இந்து மரபுகளுக்கு எதிரானது. இதற்கு மதரீதியான அனுமதி இல்லை. ராமனின் பக்தர்களான சாதுக்களும் சன்னியாசிகளும் இதில் பங்கேற்கக் கூடாது. இது மதரீதியான சடங்கு அல்ல. ராமர் கோயில் கட்டுவதற்காக மக்களைத் திரட்டும் ஒரு நிகழ்ச்சி''’என்று கடுமையாகச் சாடினார். 

மதரீதியான எதிர்ப்பினால் அம்பலப்பட்டுப்போன விஷ்வ ஹிந்து பரிஷத் உடனே பல்டியடித்தது. அதன் செய்தித் தொடர்பாளர் சரத் ஷர்மா ""அது மத ரீதியான பரிக்கிரம அல்ல, சாதுக்கள் பங்கேற்கும் சாதாரண பாத யாத்திரைதான். ஊடகங்கள் தவறாக செய்தி வெளி யிட்டுவிட்டன''’என்றார். ஆனால் ஆண்டுதோறும் பரிக்கிரம யாத்திரையை நடத்திவரும் மஹந்த் ஞான் தாஸ் ""விஷ்வ ஹிந்து பரிஷத் விநியோகித்த துண்டுப் பிரசுரங்கள் அனைத்திலுமே அது பரிக்கிரம யாத்திரை என்றே குறிக்கப்பட்டுள்ளது. அரசியலுக்காக வி.ஹெச்.பி மதத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. நான் 10 வயதிலிருந்து இந்த யாத்திரையில் பங்கேற்று வருகிறேன். இப்போது ஏற்பாடு செய்யப்பட்ட யாத்திரை முற்றிலும் மத விரோதமானது''“என்று குறிப்பிடுகிறார். மஹந்த் ஜுகல் கிஷோர் சரண் சாஸ்திரி’""கடந்த இருபதாண்டு களில் அயோத்தியில் விஷ்வ ஹிந்து பரிஷத் முற்றாக செல்வாக்கிழந்துவிட்டது. இந்த யாத்திரைக்கு அவர்கள் எதிர்பார்த்த ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை. அமைதியை விரும்பும் சன்னியாசிகள் இனியும் சமூக நல்லிணக்கத்தை அரசியலுக்காக குலைக்க விரும்பும் விஷ்வ ஹிந்து பரிஷத்தை ஆதரிக்கமாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது''’என்கிறார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் மட்டுமல்ல பா.ஜ.க.வும் உ.பி.யில் தனது செல்வாக்கை பெருமளவு இழந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.வுக்கு 96-ல் உ.பி.யிலிருந்து 58 இடங்கள் இருந்தன. 2009-ல் அது 10-ஆக குறைந்துவிட்டது. இனியும் நஷ்டத்தைத் தாங்க முடியாது என்று நிலையில்  ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைப்படி உ.பி.யில், விஷ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. கலந்துகொள்ள வேண்டாம் என்று கட்சி மேலிடம் அறிவுரை வழங்கியது. இந்த நிலையில் மீண்டும் மதவாத உணர்வுகளைத் தூண்டுவதன் மூலம் பழைய செல்வாக்கை அடையலாம் என்று பா.ஜ.க., வி.ஹெச்.பி. இரண்டுமே கனவு காண்கின்றன.

முலாயம் சிங்கிற்கும் அகிலேஷ் யாதவ்விற்கும் வேறொரு திட்டம் இருக்கிறது. உ.பி.யில் மீண்டும் இந்துத்துவா சக்திகளை வளரவிடுவதன் மூலம் தன்னை இஸ்லாமியர்களின் பாதுகாவலனாக காட்டிக்கொள்ளலாம். ஒட்டுமொத்த இஸ்லாமிய வாக்கு வங்கியையும் தனக்கு சாதகமாக்கிக்கொள்வதன் மூலம் காங்கிரஸை பெருமளவு பலவீனப்படுத்தலாம். இன்னொருபுறம் பா.ஜ.க. வளர்ந்தால் அது தனது அரசியல் எதிரியான மாயாவதி யை பலவீனப்படுத்தும் என்று முலாயம் சிங் நினைக்கிறார். மாயாவதி தலித் தலைவராக இருந்தபோதும் அங்குள்ள  பிரா மணர்களுக்கு சாதகமான ஒரு அரசியலையும் முன்னெடுத்து வருகிறார். ஏற்கனவே தலித்துகள் மத்தியில் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் மதவாத அரசியலைப் பரப்பி வருகின்றன. இந்தச் சூழலில் அங்கு இந்துத்துவ அரசியல் எழுச்சி பெற்றால் மாயாவதியை ஆதரிக்கும் பிராமணர் களும் தலித்துகளில் ஒரு பகுதியினரும் பா.ஜ.கவை நோக்கி செல்லக்கூடும் என்பதுதான் முலாயம்சிங் யாதவ்வின் கணக்கு. ஆக காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி இரண்டையும் பலவீனப்படுத்தி உ.பி.யை சமாஜ்வாதி கட்சியும் பா.ஜ.க.வும் பங்கு போட்டுக்கொள்ளவே இந்த யாத்திரை நாடகத்தை நடத்தியிருக்கின்றனர். 

அகிலேஷ் யாதவ்வின் ஓராண்டு ஆட்சிக் காலத்தில் உ.பி.யில் சுமார் 30 மதவாத மோதல்கள் நடந்துள்ளன. இது தற்செயலானதல்ல. சமீபத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சக்தி நாக்பால் விவகாரத்தை ஒரு மதப்பிரச்சினையாக மாற்ற அகிலேஷ் யாதவ்வின் அரசாங்கம் முயன்றதைப் பார்த்தோம். பா.ஜ.க., சமாஜ்வாதி இரண்டுமே தங்கள் நலன்கள் கருதி உ.பி.யில்; பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சித்து வருகின்றன. 


பரிக்கிரம யாத்திரைக்கு முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ்வையும் முலாயம் சிங் யாதவ்வையும் தனியாக சந்தித்து பேசுகிறார். ஆச்சாரியா சத்யேந் திரதாஸ், ""அந்தக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது'' என்று குற்றம்சாட்டுகிறார். யாத்திரைக்கு அரசு அனுமதி வழங்குகிறது. பின்னர் தடை விதிக் கிறது. வி.ஹெச்.பி தான் அறிவித்தபடி பெரிய அளவுக்கு சாதுக்களை திரட்ட முயற்சிக்கவில்லை. அகிலேஷ்யா தவின் அரசும் யார்மீதும் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை; கைது செய் யப்பட்ட அனைவரும் உடனே விடுவிக்கப் பட்டனர். அடிக்கிற மாதிரி அடிக் கிறேன், அழற மாதிரி அழு என இரண்டு பேரும் ஆடிய நாடகம் பச் சையாகத் தெரி கிறது. வி.எச்.பி. இந்துக்களையும் சமாஜ்வாதி கட்சி இஸ்லாமியர்களையும் ’பல்ஸ்’ பார்க்க நடத்திய ஒரு மீடியா ஷோ என்பது வெட்டவெளிச்சமாகியிருக்கிறது.

மாயாவதி தான் ஆட்சியிலிருந்த காலத்தில் இத்தகைய யாத்திரைகளுக்கு அனுமதி கேட்டு யாரும் வரவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார். அயோத்தியில் யாத்திரை நடத்துவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்ததும் அதை மாநில அரசு தடுத்ததும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையேயான அப்பட்டமான மேட்ச் பிக்சிங் என்று கிண்டல் செய்திருக்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங். ராமர் கோயில் என்ற உணர்வுபூர்வமான ஒரு பிரச்சினையை உருவாக்க பா.ஜ.க.வும் அதன் துணை அமைப்புகளும் மிகப்பெரிய அடையாள அரசியலை இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தூண்டின. ராமர் கோயில் கட்டுவதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நன்கொடையாக வெளிநாடுகளிலிருந்து இந்துத்துவா அமைப்புகளுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்துத்துவா அரசியல் அமைப்புகள் இந்தியாவில் பெரும் வலிமை பெற்றன.

ஆனால் இந்த மதவாத அடையாள அரசியல் இன்று பெருமளவுக்கு செத்துவிட்டது. மக்கள் இன்று பல்வேறு பொருளாதார சமூகப் பிரச்சினைகளில் சிக்குண்டு தவிக்கின்றனர். விலைவாசி, ஊழல், பணவீக்கம் போன்றவை எல்லா தரப்பு மக்களையும் சூறையாடி வருகின்றன. இந்தச் சூழலில் மதவாத அரசியலில் இந்துக்களுக்கோ இஸ்லாமியர்களுக்கோ எந்த அக்கறையும் இல்லை. அந்த அரசியலின் நோக்கத்தை அவர்கள் திட்டவட்டமாக அறிந்து வைத்திருக்கின்றனர். 

காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் காவலனாக நாடகமாடுகிறது. ஆனால் அது பா.ஜ.க.வின் நிர்பந்தம் காரணமாக அப்சல் குருவை நியாய விரோதமாக தூக்கிலிட்டது. அகிலேஷ் யாதவ் சிறுபான்மை ஆதரவு முகமூடியை அணிந்துகொண்டிருக்கிறார். ஆனால் உ.பி.யில் தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுகளில் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றனர். தங்களை ஏமாற்றுவதற்காக ஒவ்வொருவரும் போடும் நாடகங்களை இஸ்லாமியர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்.

பா.ஜ.க.வை பொறுத்தவரை அது மத்தியில் ஆட்சியிலிருந்த காலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக இப்போது மீண்டும் இந்த வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க ராமர் தட்டி எழுப்பப்படுகிறார். இது உண்மையில் அரசியல் அதிகாரத் திற்கான ஒரு நாடகம் என்பதை பெரும்பான்மை இந்துக்கள் புரிந்துகொண்டிருக்கின்றனர். 

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்து தேர்தலை சந்திக்க எந்தக் கட்சியுமே தயாராக இல்லை. இந்தியாவில் இன்னொரு முறை மதவாத வன்முறையின் நெருப்பை மூட்டி குளிர் காயலாம் என்று அவை இறுதிக்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளன. ஆனால் இந்த முறை அது அவ்வளவு எளிதல்ல. 

ad

ad