புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013

உங்கள் ஈழத்து உறவுகளை வடமாகாண தேர்தலில் வாக்களிக்க ஊக்குவியுங்கள்-கவிஞர் பகீரதன் கனடா 

”அரசியல் ஒரு சூது”, ”அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்” என்கின்ற கருத்து காலம் காலமாக ஒப்புவிக்கப்பட்டு வந்தாலும், பல்வேறு சந்தர்ப்பங்களில், மேலைத்தேச-கீழைத்தேச அரசியலில் இது நிரூபணமாகியிருப்பினும், அரசியலில் இருந்து நாம் பிரிக்கமுடியாதவர்களாக உள்ளோம்
.
ஆடையைப் போலவே அழுக்கானாலும் நம்மோடு கூடவே வருகிறது அரசியல் வாழ்வும். பலருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கும் வட மாகணத்திற்கான தேர்தலும் அதற்கான தமிழ் தலைமைத்துவமும் உலக நாடுகளாலும், உலகத் தமிழர்களாலும் ஊன்றிக் கவனிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்களின் அரசியல், சுதந்திர நலனில் உலகத் தமிழர்களால் பலமான தாக்கம் எதனையும் உருவாக்க முடியாது என்கின்ற உண்மைக்கு அப்பால் அவர்களின் தலையீடும் அனுதாபமும் தவிர்க்க முடியாதவை.


ஓய்வு பெற்ற நீதியரசரும், கொழும்பு வாழ் தமிழருமாகிய விக்னேஸ்வரனின் திடீர் அரசியல் பிரவேசமும், அவரை வடமாகாண முதலமைச்சருக்கான வேட்பாளராக கொண்டு வருவதற்கு திரு.சம்பந்தன் நகர்த்திய காய்களும், எடுத்த முடிவுகளும் சுவாரசியமானவை; காலத்திற்கு ஏற்ற முடிவுகளும் கூட. தமிழர் விடுதலைக் கூட்டணியின் கோமகனாக தன்னை காட்டிவந்த ஆனந்த சங்கரியைக் கூட தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் குதிக்க வைத்த மிடுக்கு திரு.சம்பந்தனுடையது. விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று பேட்டி கொடுத்தது முதலாக, மே தினத்தில் சிங்களக் கொடியை பிடித்தது வரை திரு.சம்பந்தன் செய்த அரசியல் சேட்டைகள் விசனத்திற்குரியவையாயினும் வேறு கோணத்தில் சரிப்படுத்தக்கூடியவை கூட. எதிர்கால அரசியல் முடிவுகளைப் பொறுத்தே இந்த முடிவுகள் வரலாற்றில் ஆராயப்படும். நல்லவை கோலோச்சும், மற்றவை மழுங்கடிக்கப்படும். 

திரு.சிறீதரன் மற்றும் அனந்தி எழிலன் போன்ற மிகவும் இறுக்கமான தனிநாட்டுக் கொள்கையுடையவர்கள் அடங்கிய குழுவோடு தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தில் களமிறங்கியுள்ளது. பிரதான போட்டியாக ஜனாதிபதி மகிந்தவின் கட்சியான ஜனநாயக ஐக்கிய முண்ணனி இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறது. வேறுவழியில்லாமல், தேசிய ஆன்மா பிரபாகரனும் அவருடைய போராளிகளும் செய்த தியாகங்களை வைத்துத்தான் தமிழரசுக்கட்சி பிரசாரத்தை முடக்கியுள்ளது. அதுதான் பிரதான பிரசாரக் கருத்தாகவும் இருக்கிறது. செய்யப்பட்ட பிரதான அபிவிருத்திகளுக்கு பெரிதாக விளம்பரம் கொடுத்து, அதையே பிரச்சார யுக்தியாக வைத்து திரு.மகிந்த அரசின் ஜக்கிய முண்ணனி முன் செல்கிறது. தேசத்திற்காக விதைத்தவர்கள், விளையாட்டாக விதைத்தார்கள் என்று குறை கூறியபடி அதை அறுவடை செய்கிறது சம்பந்தர் அணி. நாயைக் கட்டி வைத்து துன்புறுத்திவிட்டு இறைச்சித் துண்டுகளை போட்டால் நாய் வாலையாட்டும் என எண்ணுகிறது மகிந்த அணி. 

தமிழீழக் கொள்கையை பிரசாரமாக்கி 1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணி அதிக ஓட்டுகளை பெற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வந்தது. 2001 விடுதலைப்புலிகள் கொடுத்த ஆதரவை வைத்து தமிழரசுக் கட்சி பெரும்பலம் பெற்று பாராளுமன்றத்தில் சிம்மாசனம் கண்டது. இன்று விடுதலைப் போரின் வலிகளையும் இழப்புகளையும் வைத்து மாகாணசபையை கைப்பற்ற தமிழரசுக் கட்சி திட்டம் தீட்டுகிறது. அதன் பரிணாம வெற்றியாக வடக்குகிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி ஒன்றை தமிழர்களிற்கு பெற்றுக் கொடுத்து மீண்டும் தமிழ் மக்கள் மனங்களில் எல்லாம் தன்னையும் தமிழரசுக் கட்சியையும் தடம் பதிக்க சம்பந்த மூளை துடிக்கிறது. செய்த அபிவிருத்திகளை பிரச்சாரப்படுத்தி, பலவீனமான தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு, முடிந்தவரை தமிழ்ப் பஞ்சோந்திகளையும் குள்ள நரிகளையும் காசால் விலைக்கு வாங்கி, முடிந்தால் கள்ள ஓட்டுகளையும் போட்டு வெற்றியை அடைய மகிந்த அரசு எத்தணிக்கின்றது. இந்த வெற்றியினூடாக உலக அரங்கில் தனக்கிருக்கும் அவப்பெயரை துடைத்து, தமிழர் நலனில் கொஞ்ச அக்கறையாவது கொண்டுள்ள தமிழரசுக் கட்சியை சிதைத்து, வடக்கு கிழக்கு இணையாத சாதாரண தீர்வு ஒன்றை திணிக்க மகிந்த சிந்தனை தவம் கிடக்கிறது. 

இந்த சிக்கல்களிற்கு மத்தியில், முதலில் வட மாகாணத் தமிழர்கள் எல்லோரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் யாம் தேர்தலைப் புறக்கணிக்கவோ, அரசியல் சூதாட்டம் எனக்கொண்டு விலகி நின்று வேடிக்கை பார்ப்பதோ அறவே கூடாது. காந்தியும், செல்வாவும், காமராஜரும் இல்லை என்று அகம் நோகாமல், அவர்களை நாம் உருவாக்க முயற்சிக்க வேண்டும். பிரபாகனைப் போல எல்லோரும் இலட்சியத்தில் விடாப்பிடியாக இருக்க வேண்டும் என சாதாரண அரசியல்வாதிகளிடம் எதிர்பார்த்தல் நலம் பயக்காது. உள்ளதை வைத்து, நல்லதை எண்ணி நிமிர்ந்து நடைபோடுவதே நமக்கு நலம் சேர்க்கும். எதுவும் தீயது, கூடாது என்றோ யாரையும் அயோக்கியர்கள், கெட்டவர்கள் என்றோ ஒதுக்காமல், எல்லாவற்றையும் நமக்கு சாதமாக்கும் வல்லமையை நாம் உருவாக்க வேண்டும். சமயோசிதம், சாணக்கியம், புத்தி சாதுரியம், புதிய பாதை இவைதான் நமக்கு இன்றைய தேவை. தமிழர் நலனில் அக்கறையுள்ள ஒரு கட்சியை வலுவாக்கி, அவர்களை அரியாசனம் ஏற்ற வேண்டும். அந்தக் கட்சிக்குள் நல்ல தலைவர்களையும் தொண்டர்களையும் உருவாக்கி, அந்தக்கட்சியைப் பலப்படுத்த வேண்டிய காலம் இலங்கை வாழ் தமிழர்களிற்கு அமைந்துள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் விமர்சிக்கலாமே தவிர இறங்கி வேலை செய்ய முடியாது என்பதை உணர்ந்து இலங்கையில் பலமாக வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. காலத்தின் பலமறிந்து, நமது இன்றைய பலவீனம் தெரிந்து நாம் நகர வேண்டும்.

விழுந்தவன் எழுந்திருக்க வேண்டும், வீழ்ந்தவனும் வலுப்பெற வேண்டும். தோல்விகளை வெற்றியாக்கும் பக்குவம் கைவர வேண்டும். எனவே நாம் ஆரோக்கியமான வகையில் நம் கரத்தை பலமாக்கி தேர்தலில் வெல்வோம். சிங்கள பௌத்த பேரினவாத அரசின் அரசியல் சூழ்ச்சிக்குள் அகப்படாமல், நமது மக்களிற்கு இப்போது எது தேவையோ அதைப் பெறுவோம். முதலில் எல்லோரும் வாக்களியுங்கள். முடிந்தால் எதிரியை தோற்கடியுங்கள். கடமைகளை ஒருபோதும் உதாசீனம் செய்யாதீர்கள். 
”செய்வன திருந்தச் செய்”

ad

ad