புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013

தமிழர் பிரதேசம் கயவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது: அனைத்துலக ஈழத் தமிழர் அவை
சிங்கள யாப்பின் கீழ் இயங்கும் எந்தவொரு கட்டமைப்பும் சனநாயக முறைப்படி தமிழ் மக்களிற்கு தீர்வொன்றையும் தரப்போவதில்லை. இதன் அடிப்படையில் மாகாணசபை தமிழர்களிற்கான தீர்வாக அமையாது.
மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாணசபையின் முதலமைச்சருக்கோ அல்லது அதன் அவைக்கோ சட்டப்படி அதிகாரங்களேதும் இல்லை. மாகாணசபையின் முடிவெடுக்கும் அதிகாரங்கள் யாவும் சிங்கள ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்படும் ஆளுநர் கையிலேயே தங்கியுள்ளன.
ஆளுநர் தனது நடவடிக்கைகள் மூலம் ஜனாதிபதியைத் திருப்திப்படுத்தாத சமயத்தில் அவரைப் பதவி நீக்கும் அதிகாரமும் ஜனாதிபதியிடம் உள்ளது. இதேபோல் கல்வி, காவல் மற்றும் காணி அதிகாரங்களும் பாராளுமன்றத்திடமேயுள்ளது. இல்லையேல் மேற்படி அதிகாரங்கள் மாகாணசபையிடம் வரவேண்டுமென்று போட்டியாளர்கள் கேட்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. நிலைமை இப்படியிருக்கையில் தமிழர்கள் ஏன் இந்தத் தேர்தலில் பங்குபற்றவேண்டுமென்ற கேள்விகள் இயற்கையாகவே எமது மனங்களில் உருவாகும்.
இதற்காக பின்வரும் விடயங்களை முன்வைக்கின்றோம்:
1. தமிழ் மக்கள் மீதான இனவழிப்பை வெளியுலகத்திற்கு எடுத்துக்கூறல்.
2. தமிழர் தாயகத்தில் நடைபெறும் நிலப்பறிப்புகளை தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்துதல்.
3. தமிழர் தாயகத்தில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதுடன் அதற்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
4. கைதிகளாகவுள்ள முன்னை நாள் போராளிகளையும் பொதுமக்களையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
5. தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சியினைத் தடுப்பதற்காக சிங்கள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துதல்.
6. காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு அல்லது சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாத அளவிற்குச் சிங்கள அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை வெளியுலகிற்குக் கொண்டுவருதல்.
7. 13ம் திருத்தச்சட்டம் தமிழர்களிற்கு எந்தவிதமான உரிமையையும் பெற்றுத்தரப் போவதில்லை என்பதையும் தமிழீழம் தவிர்ந்த எந்தவொரு அரசியல் தீர்விற்கும் சிங்கள தேசம் இணங்காது என்பதனையும் தமிழ் மக்களிற்கும் வெளியுலகிற்கும் ஆணித்தரமாக எடுத்துக்கூறுதல் வேண்டும்.
இப்படியான தொலைநோக்குள்ள நடவடிக்கைகள் மூலம் அதிகாரமற்ற மாகாணசபையின் தமிழ் உறுப்பினர்கள் தமிழினத்திற்கு உதவமுடியும்.
இன்று மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் பேசும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தேர்தல் முடிந்த பின் மக்களுக்கு கொடுத்த உறுதிகளையோ தாம் பேசிய பேச்சுக்களையோ மறந்து விடக்கூடாது.
தமிழ் மக்கள் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள், அது மீண்டும் தொடருமானால் மக்கள் தமிழ் அரசியல் பிரதிநிதிகளை நம்பமாட்டார்கள், நம்பிக்கை இழந்து விடுவார்கள். அதை உணர்ந்து தமிழ்ப்; பிரதிநிதிகள் செயற்பட வேண்டும்.
ஏற்கனவே நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலினால் என்ன பயன் கண்டோம் என நம் கண்முன்னே பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆயினும் பேரிழப்பினை சந்தித்து அதில் மீண்டெழ ஒரு துரும்பேனும் கைக்குக் கிடைக்காதா? என தாயக நம் உறவுகள் முயல்கையில் அவர்களுக்குப் பக்கதுணையாக இருக்கவே நாம் விரும்புகின்றோம்.
அதிகாரம் ஏதுமில்லாத வெறும் மாகாண சபையைக் கூட தமிழர்களின் கைக்கு போய்விடக்கூடாது என்பதற்காக அரச வளங்களையும், ஆள் அணிகளையும் சட்டத்துக்கு முரணான வகையில் பயன்படுத்தி ஒரு மோசடியான தேர்தலை நடத்தியேனும் வெற்றிபெற்றுவிடவே ஆளும் கட்சி பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தேர்தல் முறைகேடுகளும், தேர்தல் வன்முறைகளும் தினமும் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. வழமைபோல நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை மிகப்பாரிய உயிர் அச்சுறுத்தலுக்குள்ளேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களும் மக்களும் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
போரின் பின்னான காலப்பகுதியில், சிங்கள தேசம் தமிழர் தாயகப் பகுதியினை சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் கீழ் முற்றுமுழுதாக அடிமைப்படுத்துவதிலேயே தீவிரமாக ஈடுபட்டுவருவதை நாம் அறிவோம். அதனைத் தடுத்து நிறுத்துவதற்கேனும் குரல் கொடுப்பதற்கான சனநாக வெளியினை உருவாக்கிக்கொள்ளும் தேவை நமக்கு இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுதியோடு நிற்கும், தமிழ்மக்களின் நலன் சார்ந்து சிந்தித்துச் செயலாற்றக் கூடியவர்களின் கைகளிலேயே ஆட்சிப் பொறுப்பினை தமிழ் மக்கள் கொடுக்க வெண்டும்.
வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்பதிலும் தமிழர் பிரதேசம் கயவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்பதிலும் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை.
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்னும் தமிழீழ அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து நாம் என்றும் பின்வாங்கப் போவதில்லை. தாயக விடுதலை என்னும் இறுதி இலட்சியத்தினை எட்டும் வரை நாம் தொடர்ந்து உறுதியாகப் போராடுவோம்.
எம்மைக் கொன்றொழிக்க முடியும் ஆனால் எமது இலட்சியங்களையோ அல்லது எமது உணர்வுகளையோ எமது மக்களை கொன்றொழித்த ஆயுதங்களாலும் அழிக்க முடியாது என்பதை சிங்கள தேசத்துக்கு உறுதியாகத் தெரிவிக்க விரும்புகின்றோம்.
தமிழ் மக்களின் உணர்வினை உலகிற்கு வெளிப்படுத்த இந்தத் தேர்தலைப் பயன்படுத்துவோம்!
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
அனைத்துலக ஈழத் தமிழர் அவை

ad

ad