புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 டிச., 2013

2014 ஆம் ஆண்டு ரசி பலன் பகுதி 2
கடகம் சிம்மம் கன்னி 
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

2014-ஆம் ஆண்டு கடக ராசிக்கு 6-ஆவது ராசியான தனுசு ராசியிலும், 3-ஆவது லக்னமான கன்னியா லக்னத் திலும், மூல நட்சத்திரத்திலும் பிறக்கிறது. 6-ஆவது ராசி என்பதால் மத்திமப் பலன் என்று பயப்படவேண்டாம். வருட ராசிநாதன் குரு கடகத்தில்தான்- தனுசுவுக்கு 8-ஆவது ராசியில்தான் உச்சபலம் அடைவார். அதுமட்டுமல்ல; கடக ராசிநாதன் சந்திரன் தனுசு
ராசியில் நிற்கும்போதுதான் ஆங்கிலப் புதுவருடம் பிறக்கிறது. மேலும் வருடம் பிறக் கும் காலம், தனுசு ராசிநாதன் குருவும், உங்கள் ராசிநாதன் சந்திரனும் சமசப்தமமாக நின்று பார்த்துக்கொள்கிறார்கள். அதுமட்டுமல்ல; ஆங்கிலப் புதுவருடம் கன்னியா லக்னத்தில் பிறக்க, அந்த லக்னாதிபதி புதனும் தனுசுவில் நின்று குருவால் பார்க்கப்படுவதோடு- புதனும் குருவும் பரிவர்த்தனையாகவும் இருக்கிறார்கள். இது ஒரு அற்புதமான கிரக அமைப்பு.

6-ஆம் இடம் என்பது 10-ஆம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு பாக்கியஸ்தானம் ஆகும். எனவே இந்தப் புதுவருடத்தில் உங்களுக்கு தொழில் முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். படித்துமுடித்து வேலை தேடி அலை வோருக்கும் இந்த ஆண்டு நல்ல வேலை, நல்ல சம்பாத்தியம் உண்டாகும். ஏற்கெனவே வேலையில் இருப்போருக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் எதிர்பார்க்கலாம். கடக ராசிக்கு 8-க்குடைய சனி உச்சம் பெற்று 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால், சிலர் அரபு நாடுகளுக்குப்போய் வேலை பார்க்கலாம். கைநிறைய சம்பாதித்து சொந்த ஊரில் வீடு, மனை, பிளாட் வாங்கலாம். கடக ராசிக்கு 6-ஆம் இடத்தை சனி, ராகு, குரு பார்ப்பதால், 4-ஆம் பாவப் பலனுக்காக கடன் வாங்கலாம். 4-ஆம் இடம் வாகன ஸ்தானம். 4-க்குடைய சுக்கிரன் வாகன காரகன். சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனை என்பதால், சிலர் கார் வாங்குவதற்காகவும் கடன் வாங்கலாம். சிலர் டூவீலர் வாங்கலாம். சிலர் "ஃபோர் வீலர்' வாங்கலாம்.

7-க்குடைய சனி, ராகு சம்பந்தம் என்பதால் சிலருக்கு காதல் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் நடக்க இடமுண்டு. 7-க்குடையவரை குரு பார்ப்பதால் பெற்றோர் சம்மதத்துடன் மேற்படி திருமணம் நடக்கும். குரு ஜூன் மாதம் கடக ராசிக்குமாறி உச்சம் அடையும்போது கடகத்துக்கு 7-ஆம் இடத்தைப் பார்க்கும் காலம், காதல் திருமணத்தில் ஒருதலைக் காதலாக இருந்தால்- காமோகர்ஷண ஹோமம் செய்துகொண்டால்  முறையற்ற காதல் நிறைவேறாமல் போய்விடும்.

4-ல் சனி, ராகு நிற்பதால், சிலருக்கு கடந்த வருடத்தில் ஆரோக்கியக் குறைவையும் அறுவை சிகிச்சை போன்ற அவஸ்தைகளையும் தந்திருக்கலாம். செவ்வாய்- சனி பார்வைக்குப் பிறகு அந்நிலைமாறி முன்னேற்றமான திருப்பங்களைக் கொடுத்தாலும்- புது வருடத்திலிருந்து 100-க்கு 100 என்பதைவிட- 100-க்கு 150 மடங்கு முழு சுகத்தையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்தும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லாம்.

நோய் குணமாகியும் ஓய்வில் இருக்கும்படியான சூழ்நிலையில் கட்டிப்போட்ட மாதிரி இருந்தவர்களுக்கு, இந்த ஆங்கிலப் புதுவருடத்தில் இருந்து சுதந்திரமாக உலா வருதலும்- சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் செயல் படுவதுமான சூழ்நிலை உண்டாகிவிடும். வெய்யிலில் அலையக் கூடாது- மழையில் நனையக் கூடாது- அசைவ உணவு சாப்பிடக் கூடாது- உப்பு, புளி, காரம் சேர்க்கக்கூடாது என்றெல் லாம் கட்டுண்டு கிடந்தவர்கள் எல்லாம் கட்டுப்பாடுகளைக் களைந்து தூக்கியெறிந்துவிட்டு விருப்பப்பட்ட உணவுகளைச் சாப்பிடலாம். சைக்கிளிலும், டூவீலரிலும், காரிலும் முன்பு போல் ஊர் சுற்றலாம். இனிமேல் எந்த ஒரு சங்கடமும் இல்லை; சஞ்சலமும் இல்லை. 4-ல் சனி, ராகு நிற்க எப்படி முழு ஆரோக்கியம் ஏற்படும் என்று சந்தேகமாக இருக்கிறதா?

4-ல் உள்ள சனி, ராகுவை வருட ராசிநாதன் குரு பார்ப்ப தோடு, வருட லக்னமான கன்னி லக்னத்துக்கு 4-ஆம் இடமான தனுசுவையும் மிதுன குரு பார்ப்பதே காரணம். 

அடுத்து ஜூன் மாதம் வருட லக்னத்துக்கு- கன்னிக்கு 4-க்குடைய குரு உங்கள் ராசியில் கடகத்தில் உச்சம்பெற்று 9-ஆம் இடத்தைப் பார்க்கப் போவதும் ஒரு காரணம்!

7-க்குடைய சனி 7-க்கு 10-ல் உச்சம் பெற, சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனையாக இருப்பதாலும், மனைவிக்கு வேலைவாய்ப்பும் அல்லது மனைவி பேரில் தொழில் யோகமும் உபரி வருமானமும் ஏற்பட இடமுண்டு. ஏஜென்ஸி அடிப்படையில் அல்லது யந்திர சம்பந்தமான அல்லது நூல் ஆடை, அலங்கார சாதனங்கள் சம்பந்தப்பட்ட தொழில்கள் லாபகரமாக இருக்கும். படித்துப் பட்டம்பெற்ற மனைவிகளுக்கு அரசுப் பணி அல்லது தனியார் வேலை அமைய வாய்ப்புண்டு.

3-க்குடைய புதன் கடகத்துக்கு 6-ல் மறைந்து செவ்வாய், சனி, ராகு பார்வையைப் பெறுவதால், உடன்பிறப்புகள் வகையில் ஒருசிலருக்கு காரணமில்லாத கவலைகளும் பிரச்சினைகளும் ஏற்படலாம். என்றாலும் குருவும் புதனைப் பார்ப்பதோடு, புதனும் குருவும் பரிவர்த்தனை என்பதால், நீரடித்து நீர் விலகாது  என்பதுபோல சங்கடங்களும் சஞ்சலங்களும் நீங்கிவிடும். சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனை- புதனும் குருவும் பரிவர்த்தனை. ஒரு ஜாதகத்தில் ஆட்சி, உச்ச பலனைவிட பரிவர்த்தனை யோகம் பெறும் கிரகங்களுக்குத்தான் முழு யோகம் உண்டாகும். அதேபோல தர்மகர்மாதிபதி யோகத்துக்கும் அதிநன்மை ஏற்படும்.

கடக ராசிநாதன் சந்திரனும், பாக்கியாதிபதி யான குருவும் ஒருவருக்கொருவர் சமசப்தம கேந்திரத்தில் இருப்பதால் கெஜகேசரி  யோகம் உண்டாகிறது. குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம். கேந்திரமாக இருந்தால் கெஜகேசரி யோகம். சந்திரன் 6-லும் குரு 12-லும் மறைவதால் மைனஸ் பாய்ண்ட் என்றாலும், சந்திரன் கடக ராசிநாதன் என்பதோடு, குரு கடக ராசிக்கு உச்சநாதன் என்பதால் இருவருக்கும் விதிவிலக்குண்டு. ஆகவே மேலே சொன்ன யோகங்கள் எல்லாம் பிளஸ் பாயிண்டாக மாறிவிடும்.

நீண்டகாலம் நிலவிய குடும்பப் பிரச்சினைகள் எல்லாம் தீரும். கணவன்- மனைவி, பிள்ளைகள், உடன்பிறப்புகள், உற்றார்- உறவினர்கள் வகையில் ஒற்றுமையும் உடன்பாடும் உதவிகளும் உண்டாகும். வீடு பத்திரப்பதிவு, மனை ஆரம்பம், கிரகப்பிரவேசம் போன்ற திட்டங்கள் வெற்றியடையும். வீட்டுக்குத் தேவையான ஆடம்பர, அலங்காரப் பொருட்கள் எல்லாம் வாங்கலாம். சிலர்  உள்ளூரைவிட்டு வெளியூரில் வாங்கிப்போட்ட காலி மனை- பிளாட்டை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, உள்ளூரில் வேறு இடம் பரிவர்த்தனை செய்யலாம். அல்லது வாகனம் வாங்கலாம். நல்ல காரியங்கள் நிறைவேறும். மொத்தத்தில் இந்த வருடம் இனிய வருடமாக அமையும். 

இந்த வருடம் முக்கியமான இரண்டு கிரகப் பெயர்ச்சிகள் ஏற்படுகின்றன. 13-6-2014-ல் குருப் பெயர்ச்சியும், 21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சியும் ஏற்படுகிறது. 

இதுவரை கடக ராசிக்கு 12-ல் மறைவாக இருந்த குரு 13-6-2014-ல் ஜென்ம ராசிக்கு உச்சமாக மாறுவார். 6, 9-க்குடையவர் ஜென் மத்தில் உச்சம் பெற்று 9-ஆம் இடத்தைப் பார்க்கக்கூடும். அது பூர்வ புண்ணியஸ்தானம். 9-க்குடையவரே 9-ஆம் இடத்தைப் பார்ப்பது உன்னதம்! அதனால் குருவருளும் திருவருளும் பரிபூரணமாக விளங்கும். தெய்வானுகூலம் தேடிவரும். இதுவரை நீங்கள் செய்த பூஜா பலனும் பிரார்த்தனைகளும் ஜெபதபங்களும் இனிமேல்தான் வேலை செய்யப்போகிறது. இதுவரை உங்கள் வழிபாடு முனிவர்கள் தவம் இயற்றியதுக்குச் சமம். உங்கள் தவத்தை மெச்சி தெய்வம் நேரில் தோன்றி நீங்கள் கேட்கும் வரத்தைக் கொடுப்பதுபோல, இனி நீங்கள் விரும்பியதும் வேண்டியதும் கிடைக்கும். நியாயமான ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.

அடுத்து கடக குரு 5-ஆம் இடத்தையும், 7-ஆம் இடத்தையும் பார்க்கப்போவதால், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற நன்மைகளும் நல்லதும் நடக்கும். ஏற்கெனவே திருமணமாகி பிள்ளைகளைப் பெற்றெடுத் தவர்களுக்கு மனைவி- மக்கள் எதிர்காலத்துக்காக இன்சூரன்ஸ் பண்ணுவது- பிக்சட் டெபாசிட் சேமிப்பது போன்ற வைப்புநிதி முதலீடுகள் செய்யும்படி அமையும். 9-ஆம் இடம் என்பது திரிகோணஸ்தானம். அதற்குடைய குரு 5, 9 என்ற திரிகோணத்தைப் பார்ப்பதால் எல்லாம் நலம்- எல்லாம் வளம்- எல்லாம் இன்பமயம்!

குரு திரிகோணத்தில் பலம் என்பதுபோல சனி கேந்திரத்தில் பலம். சனி கடக ராசிக்கு 4-ஆம் இடம் கேந்திரத்தில் பலம்பெற்று லக்ன கேந்திரத்தையும், தசம கேந்திரத்தையும் (10-ஆம் இடத்தையும்) பார்ப்பதால், உங்கள் ஆற்றலும் திறமையும் பளிச்சிடும்; வெளிப்படும். ஊரும் உலகமும் நண்பர்களும் மற்றவர்களும் உங்கள் திறமையைக்கண்டு வியந்து போற்றிப் புகழ்வார்கள். டி.வி. நிகழ்ச்சியில் புதுப்புது இசைக் கலைஞர்கள் தங்கள் சாதனையைப் படைத்து பாராட்டுப் பெறுவதுபோல, உங்கள் தொழில் துறையில் நீங்களும் புகழ்பெறலாம்,

10-ல் கேது இருப்பதால் ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவத் துறையிலும் பிரகாசிக்கலாம். 10-ஆம் இடத்தை செவ்வாய் பார்ப்பதால் கட்டட காண்ட்ராக்ட் தொழில் துறையிலும் மேன்மையடையலாம். அல்லது ஹோட்டல், அக்னி சம்பந்தமான தொழில் ஆரம்பித்து பிரபலம் அடையலாம். சனியும், ராகுவும் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கம்ப்யூட்டர், டிராவல்ஸ், யந்திர சாதன இரும்புத்தொழில் வகையிலும் பேர் எடுக்கலாம். லாபம் தேடலாம்.

21-6-2014-ல் துலா ராகு கன்னியிலும், மேஷ கேது மீனத்திலும் மாறுவார்கள். 3-ஆம் இடம் ராகுவுக்கு யோகமான இடம். 9-ஆம் இடம் மீனம். அந்த பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் வரும் கேது அந்த வீட்டுக்குடைய குரு பார்வையைப் பெறுவது விசேஷம். முன்னரே சொன்ன மாதிரி, ஆன்மிக ஈடுபாடும் ஆன்மிகத்தொண்டும் தொடரும். சிலர் அறநிலையத் துறையில் தர்மகர்த்தா பதவி, ஆன்மிகத் தொண்டர் பணி, ஆலயத் திருப்பணிக் குழுவின் பொறுப்பு ஏற்கலாம். சகோதர சகாயம், முஸ்லிம் நண்பர்களின் நட்பு, உதவி போன்ற நன்மைகளையும் 3-ஆம் இடத்து ராகு தருவார். இஸ்லாமிய  ஜாதகர்கள் வக்ப் போர்டில் முக்கிய பொறுப்புகள் ஏற்கலாம். 

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

புனர்பூச நட்சத்திரத்துக்கு 2014 வருடம் பிறக் கும் மூல நட்சத்திரம் 13-ஆவது நட்சத்திரம்; 4-ஆவது க்ஷேமதாரை. நட்சத்திர நாயகன் கேது வருட முற்பகுதியில் 10-லும் பிறகு 9-லும் சஞ்சரிக்க, கடக குருவின் நட்சத்திர நாதனின் பார்வையைப் பெறும் காலம், உங்களுக்கு யோகமாகவும் க்ஷேமமாகவும் அமையும். தேக ஆரோக்கியம், சௌக்கியம், செயல்வேகம் எல்லாம் திருப்திகரமாக அமையும். குருவின் அருளைப் பெற கும்பகோணம் குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயரை வழிபடவும்.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு:


பூசம் சனியின் நட்சத்திரம். அதிலிருந்து 2014 வருடம் பிறக்கும் நட்சத்திரம் மூலம்- 12-ஆவது நட்சத்திரம்; 3-ஆவது விபத்தாரை. எனவே 2014-ல் எதிர்பாராத விபத்துகளையும் ஏமாற்றங்களையும் வைத்திய செலவுகளையும் சிலர் சந்திக்க நேரலாம். தொழில்துறையில் அரசு அதிகாரிகளினால் நஷ்டங்களையும் சிக்கல்களையும் சந்திக்கலாம். அரசியல்வாதிகளின் எதிர்ப்பும் இடையூறுகளும் ஏற்படலாம். கோவை- காரமடை அருகில் இருகம்பாளையம் ஜெயவீர ஆஞ்சனேயரை வழிபடவும். சுயஜாதக தசாபுக்தி நல்லபடி உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகமிராது.

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு:


ஆயில்யம் புதனின் நட்சத்திரம். புதன்தான் 2014 வருடம் பிறக்கும் கன்னி லக்னாதிபதி. வருடம் பிறக்கும் நட்சத்திரம் மூலம். இது உங்கள் நட்சத்திரத்துக்கு 11-ஆவது நட்சத்திரம். 2-ஆவது சம்பத்தாரை. எனவே 2014-ல் உங்களுக்குப் பணத்தட்டுப்பாடே இருக்காது. கௌரவம், செல்வாக்கு, கீர்த்தி பெருகும். வி.ஐ.பிக்களின் தொடர்பும் அதனால் பயனும் பலனும் உண்டாகும். நீண்ட நாள் கனவுத்திட்டங்கள் எல்லாம் நிறைவேறும். உங்களைவிட்டு விலகிப்போன சொந்த பந்தமும் சுற்றமும் நட்பும் உங்களோடு வந்து ஒட்டிக்கொள்ளும். நாகர்கோவில் ஆதிசேஷன் வழிபட்ட ஸ்தலம். ஆயில்யம் ஆதிசேஷனின் நட்சத்திரம். அங்கு சென்று வழிபடவும்.


சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

2014-ஆம் ஆண்டு சிம்ம ராசிக்கு 5-ஆவது ராசியான தனுசு ராசியிலும், 2-ஆவது லக்னமான கன்னி லக்னத்திலும், மூல நட்சத்திரத்திலும் பிறக்கிறது. அதனால் இந்த வருடம் உங்களுக்கு இனிய வருடமாகத் திகழும். வருடம் பிறப்பது மூல நட்சத்திரத்தில்- அதற்கு ஜென்மம், அனுஜென்மம், திரிஜென்ம நட்சத்திரம் என்பது மூலம், அஸ்வினி, மகம் ஆகும். ஆகவே வருட நட்சத்திரத்தில் இருந்து திரிஜென்ம நட்சத்திரமான மகம் உங்கள் ராசியில் அடங்குவதால், வருடப் பிறப்பு உங்களுக்கு யோகமாகவே அமையும். உங்களு டைய ஆற்றல் பிரகாசிக்கும். தோற்றம் மிளிரும். திறமை வெளிப்படும். பெருமை சேரும். செய்யும் காரியங்களிலும் முயற்சிகளிலும் சீரும் சிறப்பும் உண்டாகும். செல்வாக்கு ஏற்படும். பட்ட பாட்டுக்கு பலனும் பாராட்டும்  கிடைக்கும்.

சிம்ம ராசிக்கு 2-ஆவது தன ஸ்தான லக்னத்தில் ஆங்கிலப் புதுவருடம் பிறப்பதால், இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்குப் பொருளாதாரத்தில் எந்தக் குறையும் இருக்காது. வாக்கு வண்மையும், வாக்கு நாணயமும் சிறப் பாக இருக்கும். சொல்வாக்கு, செல்வாக்கு அடையும். 

2-ஆம் இடம் வாக்கு, தனம், குடும்பம், நேத்திரம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். வாக்கு மேலோங்குவதுபோல, குடும்பத்திலும் அமைதி, ஆனந்தம், மகிழ்ச்சி, மனநிறைவு ஆகிய பலன்கள் உண்டாகும். சிம்ம ராசிக்கு 5, 8-க்குடைய குரு 11-ல் நிற்கிறார். 5-ஆம் இடத்தையே பார்க்கிறார். 

2-ஆம் இடத்துக்கு 10-ல் குரு இருக்கிறார். ஜூன் மாதம் குரு மாறும்போது ராசிக்கு 12-ல் உச்சம் பெறுவார். 2-ஆம் இடத்துக்கும் வருட லக்னத்துக்கும் 11-ல் உச்சம் பெறுவார். எனவே தொடர்ந்து பொருளாதாரத்திலும் வரவுசெலவிலும் தன்னிறைவு எதிர்பார்க்கலாம். பற்றாக்குறைக்கு இடமிருக்காது. தாராளமான வரவுசெலவும் இருக்கும்.

சிம்ம ராசிக்கு ஏழரைச் சனி விலகி விட்டது. கடந்த ஏழரைச் சனியில் கருத்து வேறுபாட்டாலும், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமலும், "ஈகோ' உணர்வாலும் கணவன்- மனைவிக்குள் விவகாரம், இடைக்காலப் பிரிவு, ஒரு வீட்டுக்குள் இருந்தாலும் பேச்சுவார்த்தை இல்லாமல் மௌனப் புரட்சி என்று சங்கடப் பட்டவர்கள், இப்போது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சேர்ந்து வாழலாம். ஈகோ உணர்வு மாறி ஈகை உணர்வோடு சேர்ந்து வாழலாம்.

5-க்குடைய குரு 5-ஆம் இடத்தையே பார்ப்பதால் வாரிசு யோகம் உண்டாகும். ஏற்கெனவே பெண் வாரிசு இருப்பவர்களுக்கு இனி ஆண் வாரிசு யோகம் உண்டாகும். வாரிசு உள்ளவர்களுக்கு (பெண் அல்லது ஆண் குழந்தைகள் இருப்பவர்களுக்கு) அவர்களின் ஆயுள், ஆரோக்கியம், படிப்பு, வேலை, சம்பாத்தியம் போன்ற எதிர்கால முன்னேற்றத் துக்கான ஆக்கப் பூர்வமான வழிமுறைகள் தென்படும். அடுத்து ஜூன் மாதம் குருப்பெயர்ச்சி. மிதுன குரு கடகத்தில் உச்சம் அடையும் காலம், 5-ஆம் இடம் தனுசுக்கு 8-ல் மறைவதால் யோகம் பாதிக்குமோ என்று சந்தேகப்பட வேண்டாம். ஏனென்றால் புத்திரகாரகனும் புத்திர ஸ்தானாதிபதியுமான குரு உச்சம்பெறுவதால் அனுகூலமான பலன்தான் நடக்கும். 5-க்கு 8-ல் சிம்ம ராசிக்கு 12-ல் குரு உச்சம் அடைவதால், பிள்ளைகள் வகையில் சுபவிரயச் செலவுகள் உண்டாகும் என்பது பலன். 

பருவ வயதடைந்த பிள்ளைகளுக்கு திருமணம், புத்திர பாக்கியம் சம்பந்தப்பட்ட பலன்களும், படிக்கும் பிள்ளைகளுக்கு படிப்பு சம்பந்தமான சுபச் செலவுகளும், படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புச் செலவுகளும் ஏற்படலாம். சிலர் படிப்புக்காக அல்லது வேலைக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். 

அதுவும்  சுபச் செலவுதான்.

3-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் சகோதர- சகோதரி வகையில் அனுகூலமும் ஆதரவும் எதிர்பார்க்கலாம். அதேபோல நண்பர்கள் வகையிலும் உதவியும் ஒத்தாசையும் எதிர்பார்க்கலாம். 3 என்பது நட்பு ஸ்தானம். 

அங்கு சனி இருப்பதால் நாடார் அல்லது கிறிஸ்துவ நண்பர்கள் தொடர்பும், ராகு இருப்பதால் முஸ்லிம் நண்பர்கள் தொடர்பும் உண்டாகும். அவர்களால் நன்மையும் உண்டாகும். 

சிம்ம ராசிக்கு 7-க்குடைய சனி 3-ல் உச்சம் அடைவதோடு அந்த வீட்டுக்குடைய சுக்கிரனும் சனியும் பரிவர்த்தனையாக இருப்பதால், மனைவி வகையில் சிலருக்கு கடன் உதவியும்அல்லது தொழில் வாய்ப்பும் உருவாகலாம்.

4, 9-க்குடைய செவ்வாய், சிம்ம ராசிக்கு 2-ல் இருப்பதால் தாய்- தந்தையரால் சிலருக்கு நன்மைகள், உதவிகள் உண்டாகும். தாய்வழிச் சொத்து அல்லது தந்தைவழிச் சொத்துகள் கிடைக்கவும் அமைப்பு உண்டாகும்.

9 என்பது பூர்வ புண்ணிய பாக்கியஸ்தானம். அங்கு கேது நிற்க, அதற்கு சனி- ராகு பார்வையும் செவ்வாயின் பார்வையும் கிடைப்பதால் சிலருக்கு ஆன்மிகம், ஜோதிடம், வைத்தியம், மாந்திரீகம் போன்ற துறையில் ஆர்வம் ஏற்படலாம்.

சிம்ம ராசிக்கு 10-க்குடைய சுக்கிரன் 10-ஆம் இடத்துக்கு பாக்கியஸ்தானத்திலும் ராசிக்கு 6-ஆம் இடத்திலும் இருப்பதால், தொழில் சம்பந்தமாக சிலர் கடன்வாங்க நேரும். கடன்வாங்கி தொழில் விருத்தி செய்யலாம் அல்லது புதிய தொழில் தொடங்கலாம். சிலர் போட்டி, பொறாமைகளையும் சந்தித்து சமாளிக்கவேண்டும். 6-ஆம் இடம் கடன், எதிரி, போட்டியைக் குறிக்கும் இடமல்லவா!

இந்த வருடத்தில் குருப்பெயர்ச்சியும் ராகு- கேது பெயர்ச்சியும் வருகிறது. குருப்பெயர்ச்சி 13-6-2014-ல். மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு மாறுவார். கடகம் சிம்ம ராசிக்கு 12-ஆம் இடம். அங்கு குரு வருவது ஒருவகையில் கெடுதல். 12-ல் குரு வரும்போது "இராவணன் முடியற்று வீழ்ந்தான்' என்பது ஜோதிடப் பாடல். 

அதனால் சிம்ம ராசிக்காரர்களின் பதவி, வேலை, உத்தியோகத்தில் சிக்கலும் பிரச்சினையும் உண்டாகலாம். சிம்ம ராசிக்கு 5, 8-க்குடைய குரு 5-ஆம் இடத்துக்கு 8-ல் மறைவு. ராசிக்கும் 12-ல் மறைவு. 8-ஆம் இடத்துக்கு திரிகோணம் என்பதோடு 8-ஆம் இடம் மீனத்தையும் 9-ஆம் பார்வை பார்க்கிறார். அதனால் கௌரவப் போராட்டம் ஏற்படலாம். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் வழக்கு விவகாரங்களில் தோல்வி, ஏமாற்றம், இழப்பு, நஷ்டம் ஏற்படலாம். கவலையும் கலக்கமும் உண்டாகலாம். நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று என்று எதிர்மறைப் பலனை சந்திக்கலாம். 

கடக குரு உச்சமாக இருந்து சிம்ம ராசிக்கு 4-ஆம் இடத்தையும், 6-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும் பார்க்கக்கூடும். 4-ஐப் பார்ப்பதால் தேக ஆரோக்கியத்தில் தெளிவும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். படிப்பில் தடை இருக்காது. மேற்படிப்பு முயற்சிகளும் கைகூடும்.

6-ஆம் இடம், 8-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கவலை, கடன், போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகளும் அதனால் பிரச்சினைகளும் ஏற்பட்டு விலகும்.

21-6-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. துலா ராசியில் நிற்கும் ராகு கன்னி ராசிக்கும், மேஷ ராசியில் நிற்கும் கேது மீன ராசிக்கும் மாறுவார்கள். சிம்ம ராசிக்கு 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும் மாறுவதால் பேச்சில்- வாக்கில் நிதானம் தேவை. "ஒரு வார்த்தை கொல்லும்- ஒரு வார்த்தை வெல்லும்' என்பார்கள். கன்னி ராகு கடக குருவைப் பார்க்கும். கடக குரு மீன கேதுவைப் பார்க்கும். குரு சம்பந்தம் பெறுவதால் கடுமையும் வேகமும் குறையும்.

சின்னமனூர் வழி- குச்சனூர் (வட குருஸ்தலம்) சென்று வழிபடலாம். உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்டு அருகில் தென் காளஹஸ்தி எனப்படும் சிவன் கோவில் உண்டு. இங்கு ராகுவுக்கும் கேதுவுக்கும் தனித்தனி சந்நிதி உண்டு. ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை ராகு கால வேளையில் ராகுவுக்கும் கேதுவுக்கும் சிறப்பு அபிஷேகம் பூஜை நடக்கும். அங்கு சென்றும் வழிபடலாம். 

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம். 2014 ஆண்டு தொடக்கத்திலேயே குரு வக்ரமாகத்தான் இருப்பார். லாப ஸ்தானத்தில் குரு வக்ரப்படுவதால் லாபம் உண்டு; வெற்றி உண்டு; நன்மையுண்டு; அனுகூலம் உண்டு.

6-7-2014 முதல் 5-8-2014 வரை குரு அஸ்தமனம் அடைவார். அக்காலம் குரு கடகத்தில் இருப்பதால் மைனஸ் ஷ் மைனஸ் = பிளஸ் என்பதுபோல, கெடுபலன் மாறி நற்பலன் பெருகும். 

1-3-2014 முதல் 28-6-2014 வரை துலாச் சனி வக்ரத்தில் இருப்பார். ஜனன காலத்தில் சனி வக்ரமாக இருக்கும் ஜாதகர்களுக்கு இக்காலம் மேன்மையும் யோகமுமாக இருக்கும். சனியின் வக்ரகாலத்தில் சனிக்கிழமை தோறும் அவரவர் வயதுக்குரிய எண்ணிக்கையோடு ஒன்றுசேர்த்து, அத்தனை மிளகை சிவப்புத் துணியில் கட்டி காலபைரவர் சந்நிதியில் நெய்யில் நனைத்து தீபம் ஏற்றவும். மதுரை அருகில் திருவாதவூரில் சிவன்கோவிலில் கால பைரவர் சந்நிதியும், அருகில் சனீஸ்வரர் சந்நிதியும் உண்டு. சனி பகவானின் குருநாதர் பைரவர். அந்த ஊரில்தான் சனீஸ்வரருக்கு வாதநோய் வந்து விலகியதாக ஐதீகம். மாணிக்கவாசகப் பெருமான் பிறந்த ஊர். அங்குசென்று வழிபடலாம். 

மக நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்துக்கு மூல நட்சத்திரம் 10-ஆவது நட்சத்திரம், அனுஜென்ம நட்சத்திரம். பிறந்த நட்சத்திரம்- ஜென்ம நட்சத்திரம் அதற்கு 10-ஆவது நட்சத்திரம்- அனுஜென்ம நட்சத்திரம். அதற்கு 10-ஆவது (ஜென்ம நட்சத்திரத்துக்கு 19-ஆவது) திரிஜென்ம நட்சத்திரம் எனப்படும். இது உத்தமம். 2014-ல் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். பெருமையும் புகழும் ஓங்கும். முயற்சிகள் யாவும் வெற்றிபெறும்.

பரிகாரம் : சிவ கங்கை அருகில் (ஒக்கூருக்கும் நாட்டரசன் கோட்டைக்கும் நடுவில்) காளையார் மங்கலம் என்னும் ஊர். இங்கு மீனாட்சி சுந்தரேசுவர் கோவில் தெப்பக்குளம் அருகில்  வன்னிமரத்துப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். அவருக்கு பொரி அபிஷேகம் செய்து வழிபட்டால் எல்லா காரியங்களும் வெற்றியடையும். விவரங்களுக்கு எஸ்.பி. கண்ணப்ப செட்டியார், செல்: 97102 10070.

பூர நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறப் பதால், உங்கள் நட்சத்திரத்துக்கு அது 9-ஆவது நட்சத்திரம்- பரம மைத்ரம். எனவே இவ்வருடம் தேக ஆரோக்கியம், மனத்தெளிவு, உற்சாகம், குடும்பத்தில் மகிழ்ச்சி, குடும்பத்தாருடனும் மற்றும் உறவினர்கள், நண்பர்களுடன் நல்ல உறவு, நண்பர்கள் உதவிபோன்ற அனு கூலமான பலன் உண்டாகும். 

பரிகாரம் : ஸ்ரீவில்லி புத்தூர் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் கோவில் சென்று வழிபடவும். ரங்கமன்னாருக்கு வலப்புறம் ஆண்டாளும் இடப்புறம் கருடாழ்வாரும் நிற்பது விசேஷம்.

உத்திர நட்சத்திரக் காரர்களுக்கு:


உங்கள் நட்சத்திரத் துக்கு 2014-ஆம் வருடம் பிறக்கும் மூல நட்சத்திரம் 8-ஆவது நட்சத்திரம். மைத்ர தாரை- நட்பு தாரை. எனவே 2014 உங்களுக்கு நன்மையும் மேன்மையும் தரும் வருடமாக அமையும். கடந்த வருடத்தில் அனுபவித்த கவலைகளும் துன்பங்களும் தூர விலகிப்போகும். உத்திரம் சிம்ம ராசிநாதன் சூரியனின் நட்சத்திரம். புகழும் பொருளும் போற்றுதலும் உண்டாகும். 

பரிகாரம் : சென்னை- செங்குன்றம் அருகில் ஞாயிறுகோவில் சென்று புஷ்பரதேஸ்வரரை வழிபடவும். கருப்பு உளுந்தில் வடை மாலை தயார் செய்து அணிவித்து பூஜை செய்தால் ராகு- கேது தோஷம் நிவர்த்தியாகும்.


கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

2014-ஆம் ஆண்டு உங்களுடைய ராசியில் பிறக்கிறது. கன்னி லக்னம், மூல நட்சத்திரம், தனுசு ராசியில் ஆங்கிலப் புதுவருடப் பிறப்பு. உங்கள் ராசியில் லக்னமும், 4-ஆவது ராசியில் வருட ராசியும் அமைவதால், இந்த வருடம் உங்களுக்கு பெருமை, புகழ், கௌரவம், கீர்த்தி, அந்தஸ்து எல்லாம் மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த வருடம் ஏழரைச் சனி காரணமாக உடல் ஆரோக்கியக் குறைவும் வைத்தியச் செலவும், சிலருக்கு அறுவை சிகிச்சை போன்ற சங்கடங்களும் ஏற்பட்டிருக்கலாம். இந்த வருடத் தொடக்கத்தில் இருந்தே பூரண சுகமும் ஆரோக்கியமும் மனதில் உற்சாகமும் உருவாகும். ஆஸ்பத்திரி, சிகிச்சை என்ற நடுக்கம் அறவே தீர்ந்துவிடும்.

4-ஆம் இடம் சுகத்தை மட்டுமல்ல; தாயார், கல்வி, பூமி, வீடு, வாகனம் போன்றவற்றையும் குறிக்கும் இடம். அந்த வீட்டுக்குடைய குரு உங்கள் ராசிக்கும் வருட லக்னத்துக்கும் 10-ல் நின்று 4-ஆம் இடத்தைப் பார்ப்பது சிறப்பு. எனவே கோழிக்கூண்டு மாதிரி குறுகிய வீட்டில்அவதிப்பட்டவர்களுக்கு, இவ்வருடம் கோவில் மாதிரி அற்புத வீடு, பங்களாவே அமையும். சிலர் சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம்.

4-க்குடையவர் 10-ல் நிற்பதால் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறவர்களுக்கு இந்த ஆண்டு முதல் தொழில்விருத்தியும் முன்னேற்றமும் எதிர்பார்க்கலாம். அரசாங்க சட்ட திட்டத்தாலும், பத்திரப்பதிவு கட்டண உயர்வாலும் ரியல் எஸ்டேட் தொழில் கடந்த இரண்டு ஆண்டுகாலமாக சரியில்லை. ஒருசிலர் நகைகளை அடகு வைத்து அல்லது வெளியில் கடன் வாங்கி ஒருசில இடங்களை கிரயம் முடித்து ப்ளாட் போட்டிருக்கலாம். அது வேகமாக விற்பனையாகாமல் முடங்கிக் கிடப்பதால் வட்டி நட்டம், கையிருப்பு நட்டம் என்று பாதிக்கப்பட்டிருக்கலாம். அந்த கஷ்டம் எல்லாம் இந்த ஆண்டுமுதல் தீர்வுக்கு வந்துவிடும். வீடு, மனை புரோக்கர்களுக்கும் தொழில் யோகம், தனயோகம் உண்டாகும்.

படிக்கும் மாணவர்களுக்கு கடந்த காலம் ஏழரைச் சனியின் பிடியால் மறதி, மந்தப்போக்கு, பாடப்பகுதியில் அரியர்ஸ் என்று தேக்கத்தைச் சந்தித்து ஊக்கத்தை இழந்தவர்களுக்கும் 2014 மாறுதலையும் ஆறுதலையும் தேறுதலையும் தரும். படிப்பை பூர்த்தி செய்வதோடு மேற்படிப்பையும் தொடரலாம்.

படித்துப் பட்டம் பெற்றும் அடுத்து நல்ல வேலை, நல்ல சம்பளம் இல்லாமல் மனஉளைச்சலில் தினமும் கலங்கியவர்களுக்கும் 2014-ல் நல்ல வேலை, நல்ல சம்பளம்அமையும். ஒருசிலர் வெளிநாட்டு வேலைக்கும் போய் சம்பாதிக்கலாம். பெற்றவர்கள் பட்ட கடனையும் அடைத்து உதவலாம்.

கடந்த வருடம் கரண்டு கட், நல்ல பணியாள் இல்லாத சூழ்நிலை, பணப்பற்றாக்குறை போன்ற காரணங்களினால் தொழில்துறையில் ஏமாற்றம், இழப்பு, கை நஷ்டம் என்று கலங்கியவர்களுக்கும் 2014 கைகொடுத்து தூக்கிவிடும். கவலையையும் கண்ணீரையும் துடைக்கும். சிலர் அரசு உதவியோடும் தனியார் நிதியுதவியோடும் புதிய தொழில் ஆரம்பித்து திருப்தியாகச் செயல்படலாம்.

7-க்குடையவர் 10-ல் இருப்பதால் வேலை தேடி முயற்சிக்கும் மனைவிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அல்லது மனைவி பெயரில் தொழில் செய்யலாம். பெண்கள் ஜாதகமாக இருந்தால், 7- கணவர் ஸ்தானம் என்பதால் கணவருக்குப் பதவி உயர்வு யோகம் அமையும். அல்லது அடிமை வேலையை உதறித் தள்ளிவிட்டு சொந்தத் தொழில் ஆரம்பிக்கலாம். முதலீடு பற்றாக்குறையைச் சமாளிக்க கூட்டுச்சேரலாம். ஏற்கெனவே பணியில் இருக்கும் மனைவிக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும். விரும்பிய இடப்பெயர்ச்சியும் ஏற்படும்.

2-ஆம் இடத்தில் சனியும் ராகுவும் சேர்க்கை என்பதோடு சனியும் சுக்கிரனும் பரிவர்த்தனையாக இருப்பதால், அவ்வப் போது குடும்பத்தில் சலசலப்புகளும், ஈகோ உணர்வால் வறட்டு கௌரவப் பிரச்சினைகளும் உண்டாகலாம். சிலசமயம் கலகலப்புகள் மறைந்து கவலைகள் நிலவும். அம்மாதிரி சந்தர்ப்பங்களில் குடும்பத்தில் உள்ளவர்களின் கருத்துகள் மாறுபட்ட மனோ நிலையில் இருக்கும் சமயம், நீங்கள் மௌனத்தைக் கடைப்பிடித்தால் "மௌனம் கலக நாஸ்தி' என்று தீர்வாகிவிடும். குரு பார்வை இருப்பதால் ஓரளவு பிரச்சினைகள் கடுமையாக இருக்காது.

2-ஆம் இடத்துக்கு குரு பார்வை இருப்பதால் பொருளாதாரத்தில் சரளமான பணப்புழக்கமும், வாக்கு நாணயம் காப்பாற்றப்படுதலும், சொல்லுவதைச் செய்வதும் செய்வதைச் சொல்லுவதுமான பலன்களும் நடக்கும். குடும்பச் சூழ்நிலையில் சிலசமயம் பனிப்போர் நடந்தாலும் உடனே அது சமரசமாகி விடும்.

24-10-2013 முதல் 20-02-2014 வரை குரு வக்ரம். வக்ரத்தில் உக்ரபலன் என்ற விதிப்படி தொழில், வாழ்க்கை, குடும்பத்தில் முக்கியமான திருப்பங்களைச் சந்திக்கலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் இக்காலம் நற்காலம், பொற்காலம். இல்லாவிட்டால் கற்காலம். திருப்பத்தூர் அருகில் பட்டமங்கலத்தில் அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் இருக்கிறது. பொதுவாக எல்லா இடங்களிலும் தட்சிணாமூர்த்தி தென்திசை நோக்கிதான் இருப்பார். இங்கு மட்டும் கிழக்குநோக்கி இருக்கிறார். 

அமாவாசையன்று பக்தர்கள் ஆணும் பெண்ணும் 108 சுற்று சுற்றி வழிபடுவார்கள். அங்குசென்று வழிபடலாம்.

(27-11-2014 முதல் 26-03-2015 வரையும் குரு வக்ரம் அடைவார். மேலே சொன்ன பரிகாரம் போதும்).

06-07-2014 முதல் 05-08-2014 வரை குரு அஸ்தமனம். இக்காலம் நல்லதும் கெட்டதும் கலந்து நடக்கும்.

01-03-2014 முதல் 28-06-2014 வரை சனி வக்ரமாக இருப்பார். உச்ச சனி வக்ரப்படுவது உங்களுக்கு யோகம்தான். பிறக்கும்போது ஜாதகத்தில் வக்ரம் அடையும் கிரகங்கள் கோட்சாரத்தில் வக்ரப்பட்டால் அதிக நன்மை கள் உண்டாகும் என்பது அனுபவரீதியான உண்மையாகும்.

இந்த வருடம் 13-06-2014-ல் குருப்பெயர்ச்சி. மிதுன ராசியிலிருக்கும் குரு கடகத்தில் உச்சமாவார். கன்னி ராசிக்கு 10-ல் இருந்து 11-ஆம் இடத்துக்கு மாறுவது மிகமிக லாபம். யோகம். வெற்றி! அதிலும் 11-ல் உச்சம் பெறும் குரு 7-க்குடையவர் 7-ஆம் இடத்தையே பார்ப்பதால் திருமணத் தடை விலகும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கூடும். அதேபோல கன்னிக்கு 5-ஆம் இடம் புத்திர ஸ்தானத்தைப் பார்க்கப்போவதால் புத்திரதோஷம் விலகி வாரிசு யோகம் உண்டாகும். பெண் குழந்தை பெற்றவர்களுக்கு ஆண் குழந்தைகளும், ஆண் குழந்தை பெற்றவர்களுக்கு ஆசைக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டாகும்.

21-06-2014-ல் ராகு- கேது பெயர்ச்சி. துலா ராசியிலிருக்கும் ராகு கன்னி ராசிக்கு ஜென்ம ராகுவாக மாறுவார். மேஷ ராசியிலிருக்கும் கேது மீன ராசிக்கு மாறுவார். 8-ல் இருக்கும் கேது 7-ல் மாறுவது நல்லதுதான் என்றாலும், ஜென்ம ராகு சப்தம கேது- குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கும். கணவன்- மனைவிக்குள் வாக்குவாதம், தர்க்கங்களை உருவாக்கும். அப்படியில்லாமல் அன்யோன்யம், பாசம், பற்று, நேசமாக இருந்தால் ஆரோக்கியக் குறைவு, சரீர வருத்தம், மனவருத்தம் ஆகிய பலனைச் செய்யும். அந்தமாதிரி கெடுபலன்கள் நடந்தால் ராகு- கேது பரிகாரமாக திருநெல்வேலி- வள்ளியூர் வழி- விஜயாபதி சென்று வழிபடலாம். விஸ்வாமித்திரர் தவமிருந்த இடம். அருகில் தில்லைக் காளி கோவில் உண்டு. ராதாபுரம் முதல் விஜயாபதி வரை செம்மண் தரை- பாம்புப் புற்றுகளாக இருக்கும்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:


2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரம் முதல் மூலம் 8-ஆவது நட்சத்திரம், மைத்ர தாரை, நட்பு நட்சத்திரம். எனவே இந்த வருடம் நன்மையும் மேன்மையும் தரும் வருடமாக அமையும். கடந்த வருடத்தில் அனுபவித்த கவலைகளும் துன்பங்களும் தூர விலகிப் போகும். உத்திரம் விரயாதிபதியான சூரியன் நட்சத்திரம். சுபமங்களச் செலவுகள் உண்டாகும்.

பரிகாரம்: சென்னை செங்குன்றம் அருகில் ஞாயிறு கோவில் சென்று புஷ்ப ரதேஸ்வரரை வழிபடவும். கருப்பு உளுந்தில் வடைமாலை தயார்செய்து அணிவித்து பூஜை செய்தால் ராகு- கேது தோஷம் நிவர்த்தியாகும்.

அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு:

2014-ஆம் ஆண்டு மூல நட்சத்திரத்தில் பிறக்கிறது. அஸ்த நட்சத்திரம் முதல் மூலம் 7-ஆவது நட்சத்திரம்- வதை தாரை. எனவே இந்த வருடம் ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் தப்பிக்கலாம். இல்லாவிட்டால் விவகாரம், வில்லங்கம், வேதனை, உடல்நலக் குறைவு, மனநலக்குறைவு, குடும்பத்தில் குழப்பம் போன்ற பல சங்கடங்களைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். திங்கள்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடவேண்டும். ஒருமுறை ருத்ரஜப பாராயணம் செய்து, ருத்ர ஹோமம் வளர்த்து சுவாமி (சிவன்), அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் சஞ்சலங்கள் விலகி சந்தோஷம் உண்டாகும்.

பரிகாரம்: திரு அவனிவநல்லூர் சென்று சாட்சிநாதர் திருக்கோவிலில் வழிபடவும். கருவறையின் பின்புறம் ரிஷபாரூடர் காட்சி காணத்தக்கது. திருமால், முருகன், சூரியன், அகத்தியர், காசிபமுனிவர், கன்வ மகரிஷி வழிபட்ட தலம். கும்பகோணத்திலிருந்தும் தஞ்சாவூரில் இருந்தும் பேருந்துகள் உள்ளன. காலை சக்தி வழிபாடு சிறப்பு.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:


சித்திரை நட்சத்திரத்திலிருந்து 2014 பிறக் கும் மூல நட்சத்திரம் 6-ஆவது நட்சத்திரம்- சாதக தாரை. எனவே இந்த வருடம் உங்களுக்கு யோகமாகவும் அதிர்ஷ்டமாகவும் இருக்கும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். தேகநலம் தெளிவாக இருக்கும். பூமி, வீடு, மனை சம்பந்தமான திட்டங்கள் வெற்றியடையும்.

பரிகாரம்: அருப்புக்கோட்டை அருகில் திருச்சுழி சென்று திருமேனிநாதர் (பூமிநாத சுவாமி), துணை மாலையம்மையை வழிபடவும். ரமண மகரிஷி பிறந்த ஊர். சதானந்த முனிவர் வழிபட்ட தலம். பார்வதி தேவியார் தன்னை சிவபெருமான் மணம்புரிய வேண்டி வழிபட்ட தலம்.

ad

ad