சிறீதரன் எம்.பி கைது செய்யப்பட்டு 6 மணித்தியால விசாரணையின் பின் விடுதலை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோர் கிளிநொச்சி- கிராஞ்சி கிராமத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டு மாலை 5 மணியளவில் விடுதலை செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில், கிராஞ்சி பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழக சுற்றுலா பயணி ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மேற்படி கிராமங்களுக்குச் செல்லும் வீதியின் மோசமான நிலையினை மேற்படி சுற்றுலா பயணி புகைப்படம் எடுத்துள்ளார். இதனை படையினர் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் ஒரு கிராமத்திற்குச் சென்று மக்களோடு உரையாடிக் கொண்டிருக்கையில் அங்குவந்த படையினர், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட முழு குழுவினரையும் கைது செய்து ஜெயபுரம் பொலிஸில் ஒப்படைத்திருந்துள்ளனர்.
மாலை 5 மணிவரையில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினரை விசாரணை செய்து பின்னர் விடுவித்துள்ளனர்.
எனினும் குறித்த சுற்றுலாப் பயணியை விடுதலை செய்யவில்லை. அவரிடம் தொடர்ந்தும் படையினரும், பொலிஸாரும் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.