25 டிச., 2013

நாமே கிழக்கை கைப்பற்றினோம் என்கிறார் ரணில் விக்கிரமசிங்க
ராஜபக்ச அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தனியே வன்னியில் இருந்து மட்டுமே அழித்ததே தவிர, அவர்களை கிழக்கில் இருந்து விரட்டி, கடற்புலிகளின் முதுகெலும்பை முறித்தது தாமே என  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐதேகவும் ஒரு போரை நடத்திக் கொண்டே, நீர்மின், சக்தி, ஆடைத்தொழில், வீடமைப்புத் துறைகளில் பாரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. ஆனால், ராஜபக்ச அரசாங்கத்தைப் போன்று கடனுக்குள் நாம் நாட்டை தள்ளிவிடவில்லை.

இந்தக் கடனை, பிறக்கப் போகும் தலைமுறைகளால் கூட ஈடுசெய்ய முடியாது. நாமே கிழக்கை கைப்பற்றினோம். கடற்புலிகளின் முதுகெலும்பையும் முறித்தோம்.

சந்திரிகா தலைமையிலான அரசாங்கமும் கூட விடுதலைப் புலிகளுடன் போரிட்டது. யாழ்ப்பாணத்தில் அவர்களைத் தோற்கடித்தது. அவர் 2005இல் பணியில் இருந்து விலகிய போது, 1.8 ட்ரில்லியன் ரூபா கடன் தான் இருந்தது.

ஆனால், ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வன்னியில் இருந்து புலிகளை அகற்றுவதற்கும், சில வீதிகளை அமைப்பதற்கும் 4.8 ட்ரில்லியன் ரூபா கடன் பெறப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.