கனடாவில் ஏற்பட்டுள்ள பாரிய பனிப்புயல் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கனடாவின் பெரிய நகரமான டொரொன்டோ மற்றும் கிழக்கு பிராந்தியங்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பனிப்புயல் காரணமாக 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின் விநியோகமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, பொதுப் போக்குவரத்து சேவைகள் சில பகுதிகளில் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், டொரொன்டோ, ஒட்டாவா மற்றும் மொன்றியல் விமான நிலையங்களில் ஏராளமான பயணிகள் தமது பயணத்தை தொடரமுடியாத நிலையில் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
டொரொன்டோ நகரத்தின் வரலாற்றில் இப்படியான பனிப்புயல் ஒன்றை முன்னர் சந்திக்கவில்லை என்று டொரொன்டோவின் முதல்வர் ரொப் போஃட் தெரிவித்துள்ளார்.
நகரத்தின் மின்சார விநியோகத்தை மீண்டும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தாம் முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும், மின்விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிறுவனம், குறைந்தது தமக்கு 72 மணிநேரம் செல்லும் என்று தெரிவித்துள்ளது.
பிந்திக்கிடைத்த செய்திகளின் படி இந்த பனிப்புயல் காரணமான கனடா மற்றும் அமெரிக்காவின் எல்லைப்பகுதிகளில் குறைந்தது 11 பேர் மரணித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.