எதிர்க்கட்சியில் அமரவும் தயங்கமாட்டோம்! – அரசாங்கத்தை எச்சரிக்கிறது ஹெல உறுமய
மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற முடியும் என்றால் எதிர்க்கட்சியில் அமரத் தயார் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களுக்கு நலன்களை வழங்க முடியும் என்றால் ஆளும் கட்சியை விட்டு விலக துளியும் தயங்கப் போவதில்லை. ஆனால் மக்கள் நலன் இல்லாது ஆளும் அரசு செயற்பட்டால் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஆளும் கட்சிக்குள் எதிர்க்கட்சியாக உருவாகும் என அவர் எச்சரித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்ற முடியுமென்றால் ஹெல உறுமய அதனைச் செய்யத் தயங்காது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், கசினோ சூதாட்டம் நடத்தக் கூடிய வகையில் ஹோட்டல் ஒன்றை அரசாங்கம் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் புதிதாக கசினோ சூதாட்டத்தை உருவாக்க எமது கட்சி ஆதரவளிக்காது என அவர் தெரிவித்தார்.