புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

27 ஏப்., 2014
தேர்தலில் வெற்றிபெறுவோம் என்று சுயேச்சைகள் கூட நெஞ்சை நிமிர்த்தி நம்பிக்கை யோடு சொல்வார்கள். அரசியல் கட்சிகள் மட்டும் சும்மா இருந்துவிடுமா? அ.தி.மு.க. நிச்சயம் வெல்லும் என்கிறார் இந்திய குடியரசுக் கட்சித் தலைவரான செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ.

தேர்தல் முடிவுகள் வரும்வரை நக்கீரன் இதழ் தோறும் கட்சித் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். இதோ செ.கு. தமிழரசன்...

அ.தி.மு.க.விற்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என மதிப்பிடுகிறீர்கள்?


தமிழக அரசியல் கட்சிகளில் தொண்டர் வலிமையையும் மக்கள் பலத்தையும்  அடித்தளமாகக் கொண்டு தனிப்பெரும் கட்சியாக இருப்பது அ.தி.மு.க.தான். அந்த துணிச்சல் அ.தி.மு.க.வுக்கு இருப்பதால்தான் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கியிருக்கிறது. பொதுவாக, தேர்தலில் பதிவாகக்கூடிய வாக்குகளில் அதிகபட்சமாக இருப்பது பெண்களின் வாக்குகளும், ஏழைகள் மற்றும் நலிந்த மக்களின் வாக்குகளும்தான். இந்த இரண்டு தரப்பினர்தான் அசைக்க முடியாத முடிவுகளை எடுக்கின்றவர்களாகவும், வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாகவும் இருக்கின்றனர். அந்த வகையில், முதல்வரின் (ஜெயலலிதா) மூன்றாண்டு கால மக்கள் நலத்திட்டங்கள் இந்த இரு தரப்பினரிடமும் சென்று சேர்ந்திருக்கிறது. அவர்களின் முழுமையான ஆதரவும், அ.தி.மு.க.வின்  நிரந்தர வாக்கு வங்கி சிதறாமலும் அதேசமயம் அதிகரித்திருப்பதும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் தி.மு.க. வேட்பாளர்களைப் போல பெரும் புள்ளிகளாகவும் கரும் புள்ளிகளாகவும் இல்லாமல் மிகச் சாதாரணமானவர்களாக -புதியவர்களாக இருப்பதால்  தொகுதி மக்களின் நன் மதிப்பை அவர்கள் பெற்றவர்களாக இருப்பதும் என இந்த 3 காரணங்களால் 39 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கே வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டதாக இருக்கிறது.

அ.தி.மு.க.வுக்கு எதிராக, தமிழக தேர்தல் களத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை, துயரங்களை கடுமையாக தாக்கின. அதனை தேர்தல் பிரச்சாரத்திலேயே பார்க்க முடிந்தது. அத்தகைய பிரச் சார வியூகங்களும் எதிர்க்கட்சிகளின் வலிமையும் அ.தி.மு.க. வின் வெற்றியை பலகீனப்படுத்தியிருக்கிறது என்கிறார்களே?


தமிழகத்தில் இந்தமுறை எல்லா கட்சிகளுமே தனித்துப் போட்டியிடுகிற மாதிரிதான். தி.மு.க. கூட்டணியில் சில சிறிய கட்சிகள் மட்டுமே இருக்கிறது. அந்த சிறிய கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் போட்டி யிடும் தொகுதியை விட்டு வெளியே வரமுடியவில்லை. அதனால் அதனை  கூட்டணியாக எடுத்துக்கொள்ள முடியாது. அந்த வகையில் தி.மு.க. தனித்து போட்டி யிடுவதாகத்தான் கொள்ளவேண்டும். அடுத்து, பா.ஜ.க. கூட்டணி. பஞ்சாயத்து தேர்தலிலே கூட தனித்து போட்டியிட்டால் ஜெயிக்க முடியாத ஒரு கட்சி பா.ஜ.க!  அந்த கட்சியோடு தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. என சில கட்சிகள் சேர்ந்துள்ளன. ஆனால், அந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் அமர வைக்கக்கூட பா.ஜ.க.வால் முடியவில்லை. கொள்கைகளி லும் அணுகுமுறைகளிலும் அவர்களிடம் ஒற்றுமை இல்லாததால் இந்த நிலை. பல்வேறு முரண்களை கொண்ட இக்கட்சிகள் சேர்ந்திருப்பதை கூட்டணி என்று சொல்லக்கூடாது. அது ஒரு பேக்கேஜ், அவ்வளவு தான். காங்கிரஸை எடுத்துக்கொண்டால், மூத்த தலைவர்கள் தொடங்கி முக்கிய தொண்டர்கள்வரை யாருக்கும் போட்டியிட துணிவில்லை. ஆக, எல்லா கட்சிகளுமே தனித்துப் போட்டியிடுவதாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர அவைகளை கூட்டணி என்று சொல்வது அபத்தம். உண்மை இப்படியிருக்கும் நிலையில், அ.தி.மு.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எங்கே கூட்டணியாக வலிமை பெற்றிருக்கிறது? ஆனால், அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கியது மீடியாக்கள் தான்.  இந்த தேர்தலில்தான் ஊடக அரசியல் கொடி கட்டிப் பறந்தது. கட்சி பிரச்சாரத்தை விட ஊடக பிரச்சாரம்தான் அதிகம். ஆக, மீடியாக்கள் உருவாக்கிய இந்த தோற்றம் ஒரு கானல்நீர்! அந்த கானல் நீர்,  எந்த வகையிலும் அ.தி.மு.க.வின் வலிமையையோ வெற்றியை யோ பலகீனப்படுத்திவிட முடியாது என்பதே உண்மை.

பா.ஜ.க. கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்கு வங்கியும் மோடியின் அலையால் பா.ஜ.க. பெற்றுள்ள இமேஜும் மூன்றாவது அணியை வலிமைப்படுத்தியிருக்கிறது. அ.தி. மு.க.வுக்கான வாக்குகள்தான் இந்த அணியை வலிமை யடைய வைப்பதால், அது தி.மு.க.வின் வெற்றிக்கு சாதகமாக இருக்கிறது என்கிறார்களே?

இதுதான் உண்மை என்றால் தி.மு.க. 39 தொகுதிகளிலும் ஜெயிக்க வேண்டும். எந்த பத்திரிகையும் ஊடகமும் 39-லும் தி.மு.க. ஜெயிக்கும் என்று கருத்து கணிப்பு வெளியிட வில்லையே. அதனால் பா.ஜ.க. வுக்கு கிடைக் கும் வாக்குகள் அ.தி.மு.க.வின் வாக்குகள் என் பதும் அதனால் தி.மு.க.வுக்கு சாதகம் என்ப தும் மிகப்பெரிய கற்பனை. அ.தி.மு.க.வின் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்கு வங்கியும், கட்சி சாராத 30 சதவீத வாக்குகளும் அ.தி.மு.க.விடமிருந்து 1 வாக்குகூட எதிர்க்கட்சி களுக்கு இடம் பெயரவில்லை. இடம் பெயரவும்  பெயராது. 

சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஜெயலலிதா இருக்கிறார் என முஸ்லிம் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் பிரச்சாரத்தை முன்னெடுத்த நிலையில் அம்மக்களின் வாக்குகளை இழந்துள்ளதும் இடதுசாரி கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாததும் அ.தி.மு.க.வுக்கு பின்னடைவுதானே?


சிறுபான்மை மக்களுக்கு எதிராக எந்த ஒரு செயல் திட்டத்தையும் அ.தி.மு.க. செயல் படுத்தவில்லை. செயல்பட்டதும் இல்லை. தி.மு.க. கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சி யான ம.ம.க., கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருந்தது என்பதை நினைவில் கொள்க. அதனால், எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தியுள்ள இந்த அச்ச உணர்வு, ஒரு மாயை. ஆளும் கட்சிக்கு எதி ரான ஒரு அச்சத்தை அம்மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்கிற ஒருவித சதி என்பதைத் தவிர வேறில்லை. அதேபோல, அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகிய இடதுசாரி கட்சிகள் சில தொகுதிகளில் போட்டியிடு கிறது. போட்டியிடாத இடங்களில் உள்ள தோழர்களின் வாக்குகள் அ.தி.மு.க.வுக்குத் தான் விழுமே தவிர தி.மு.க.வுக்கோ மாற்று கட்சிக்கோ போக வாய்ப்பில்லை. 

தேர்தலுக்குப் பிறகு மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் அதற்கான ஆதரவை அ.தி.மு.க. தரும் என்கிற கருத்து குறித்து?  


மத்தியில் பா.ஜ.க. அல்லது காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியமைக்கும் சூழல் வந்தால் அவைகளை அ.தி.மு.க. ஆதரிக்காது என முதல்வர் ஜெயலலிதாவே தெளிவுபடுத்தியிருக்கிறார். இதைத் தாண்டி வேறு என்ன உத்தரவாதம் வேண்டும்?