புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஏப்., 2014

சிறுபான்மை மக்களை அடக்க உருவாக்கப்பட்டதே பொது பல சேனா : ரில்வின் சில்வா குற்றச்சாட்டு 
ஜனநாயகத்திற்கு எதிராக தீவிரமாக செயற்படும் பொது பல சேனா பௌத்த அமைப்பை கட்டுப்படுத்தாது அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது ஏன் என கேள்வி எழுப்பிய ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சிறுபான்மை
மக்களை அடக்க உருவாக்கப்பட்ட இயக்கமே பொது பல சேனா எனவும் குற்றம் சுமத்தினார்.
 
 
பொது பல சேனா பௌத்த அமைப்பினை தொடர்ந்தும் செயற்பட விட்டால் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
 
அண்மைக் காலமாக பொது பல சேனா அமைப்பின் மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  கூறினார். 
 
 
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
 
 
நாட்டில் ஜனநாயகத்திற்கு எதிராகவே தொடர்ந்தும் பொது பல சேனா அமைப்பு செயற்பட்டு வருகின்றது. தமது நியாயமற்ற கருத்துக்களைக் கொண்டு சிறுபான்மை மக்களை அடக்கி தமது காட்டுமிராண்டித் தனமான செயற்பாடுகளை செய்து வருகின்றது. ஆனால் அரசாங்கம் இதுவரையில் பொது பல சேனாவிற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது.
 
 
அரசாங்கத்தின் பலத்தை பெற்றுக்கொண்டே இவர்கள் கட்டுப்பாடின்றி செயற்படுகின்றனர். சிறுபான்மை முஸ்லிம் கிறிஸ்தவ மக்களை குறி வைத்து அவர்களை அடக்குவதற்கான பௌத்த வேடமிட்டு செயற்படும் தீவிரவாத இயக்கமே இவ் பொதுபல சேனா. 
 
 
இவர்களின் காட்டு மிராண்டித்தனமான செயற்பாடுகளை இப்போதாவது கட்டுப்படுத்தாவிடின் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
 
 
மேலும் சட்டத்தையும் நீதியையும் தனியொரு நபரோ அல்லது அமைப்போ கையில் எடுக்க முடியாது. அவ்வாறு செயற்பட்டால் அவர்களை கடுமையாக தண்டிக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால் எமது நாட்டில் அனைத்துமே தலைகீழாக இடம் பெறுகின்றது. 
 
 
பௌத்த அமைப்பு என்பதற்காக அவர்கள் நாட்டை ஆள்பவர்களல்ல. பௌத்த மதத்திற்கும் இனத்திற்கும் எவ்வாறு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதோ அதே உரிமை ஏனைய மதத்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதை துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரம் எந்தவொரு மதத்தவருக்கும் இல்லை.
 
 
நாட்டில் இன்று மிக மோசமான தீவிரவாதம் பரப்பப்பட்டு வருகின்றது. காவி உடையை அணிந்து கொண்டு அரசாங்கத்தின் அடியாள் வேலையினை பொது பல சேனா அமைப்பு செய்து வருகின்றது. எனவே இதனை உடனடியாக அரசாங்கம் கவனிக்காவிடின் சிறுபான்மை மக்களுக்கெதிரான அடக்கு முறை வலுகப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ad

ad