புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஏப்., 2014


இலங்கை அரசினால் அறிவிக்கபட்ட புதிய புலிகளின் தலைவர் சந்தோசம் மாஸ்டர் யார்  ?

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அடுத்த புதிய தலைவர் சந்தோஷம் மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தலைவரின்
பெயர் சந்தோஷம் மாஸ்டர் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் ஏற்பட்டுள்ள பெயர் குழப்பம்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஏற்கனவே இருந்த சந்தோஷம் மாஸ்டர், 1980-களின் இறுதிப்பகுதியில் உயிரிழந்திருந்தார். அந்த சந்தோஷம் மாஸ்டருக்கும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள தலைவருக்கும் ஒரே பெயர் உள்ளதால் ஏற்பட்ட குழப்பம் அது.
முன்பு இருந்த சந்தோஷம் மாஸ்டரின் நிஜ பெயர், கணபதிப்பிள்ளை உமைநேசன். அவர், இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோது நடந்த யுத்தத்தில், 1987-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி உயிரிழந்தார். தற்போது புதிய தலைவராகியுள்ள சந்தோஷம் மாஸ்டர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்ததே, 1995-ம் ஆண்டுதான்.

சமீபத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட கோபி எனப்படும் காசியன் மாஸ்டர், இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, இந்த மாஸ்டர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் கோபிக்கும், புதிய தலைவர் சந்தோஷம் மாஸ்டருக்கும் இடையே தொடர்புகள் இருந்ததாகவும் தெரிகிறது. இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சியில் கோபி இறங்கியபோது, வெளிநாட்டில் இருந்து உதவி செய்தவர்களில், சந்தோஷம் மாஸ்டரும் ஒருவர்.
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையிலான இறுதி யுத்தத்தின்போது, முன்னாள் தலைவர் கோபியும், புதிய தலைவர் சந்தோஷம் மாஸ்டரும் ராணுவத்திடம் சரணடைந்தனர். அதையடுத்து, தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தனர்.
தடுப்பு முகாமில் இருந்து கோபி தப்பி, வெளிநாடு சென்றார். அதன்பின் வெளிநாட்டு விடுதலைப் புலி பிரிவான நெடியவன் படையணியால் தலைவராக்கப்பட்டு, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டார்.
2009-ம் ஆண்டு மே மாதம் ராணுவத்திடம் சரணடைந்த சந்தோஷம் மாஸ்டர், தொடர்ந்து தடுப்பு முகாமிலேயே தங்கியிருந்தார்.
இவருக்கான புனர்வாழ்வு பயிற்சிக்காலம் முடிந்து 2010-ம் ஆண்டு விடுதலையானபின், இலங்கையில் இருந்து சுவிட்சலாந்து சென்றார். அதன்பின் அவர் தொடர்பான தகவல் ஏதும் வெளியாகியிருக்கவில்லை.
இப்போதுதான், அவர் விடுதலைப் புலிகளின் தலைவராகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
புலிகளின் புதிய தலைவர் சந்தோஷம் மாஸ்டரின் நிஜ பெயர், பரமானந்தன் யாதவன். 1979-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி பிறந்த இவர், தனது 16 வயதிலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர்.