சர்வதேச விசாரணை நிச்சயம் நடந்தே தீரும்; அதனை இராஜதந்திர ரீதியில்தான் அணுக வேண்டும் என்கிறார் ராஜித

சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நிச்சயமாக நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல் விசாரணை நடக்குமானால் அதன் முடிவு பாரதூரமானதாகவே இருக்கும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டிவரும். இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது போரை வெற்றி கொள்வதற்கு பலமும் புத்திசாலித்தனமும் தேவைப்பட்டது. ஆனால் தற்போது எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களையும் சவால்களையும் வெற்றி கொள்ள புத்திசாலித்தனமே தேவை. சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் கோரி வந்த தமிழ் தரப்பினர் போர் முடிவடைந்ததும் முதல் தடவையாக ஐக்கிய இலங்கைக்குள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வுத் திட்டத்துக்கு இணங்கினார்கள். ஆனால் அரசு அதனைக் கருத்தில் கொள்ளாமல் காலதாமதமாகியதால் அவர்கள் மீண்டும் தமது பயணத்தை மாற்றியுள்ளனர்.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எமது அரசியல் தலைவர்கள் கைநழுவ விட்டனர். சிலர் அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தற்போது நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
போர் முடிந்தவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் உரிய முறையில் பேச்சுக்களை நடத்தி ஐக்கிய இலங்கைக்குள் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வொன்றை முன்வைத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இன்று இவ்வாறான சர்வதேச அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
இன்று சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இலங்கைக்குள் எந்தவொரு விசாரணைக் குழுவையும் அனுமதிக்க மாட்டோம் என்றெல்லாம் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இது மிகவும் முட்டாள் தனமான வாதமாகும்.
இந்த விசாரணையில் பிரதிவாதிகளே நாம் தான். எனவே நாம் இந்த விசாரணையில் கலந்து கொள்ளாமல் விசாரணைகள் நடக்குமானால் முடிவு பயங்கரமானதும் பாரதூரமானதுமாக இருக்கும். எனவே இந்த விடயம் தொடர்பில் நன்றாகச் சிந்தித்து இராஜதந்திர ரீதியில் தான் அணுக வேண்டும்.
எமது நாட்டுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதிக்கப்படுமானால் பொருளாதாரம் பாதிப்படையும். லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழக்க வேண்டிவரும். இவ்வாறான சவால்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரும் போது மக்கள் கிளர்ந்தெழுவார்கள். அப்பொழுது சர்வதேசம் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் ஏற்படும் என்றார்.