புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஜூன், 2014




டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி சந்திப்பில், "முந்தைய காங்கிரஸ் அரசின் பாரா முகத்தால் தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாகியிருக்கிறது. இதனால் பல்வேறு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்த சிரமப்பட வேண்டியதிருக்கிறது. நலத்திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்த தமிழகத்திற்கு கூடுதல் மற்றும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்' என ஜெ. கேட்டிருக்கலாம்.

நரேந்திரமோடி, ஜெயலலிதாவின் அரசியல் நட்பு மிகவும் பிரசித்திப் பெற்றது. குஜராத் முதல்வராக மோடி பதவியேற்ற போது அதில் ஜெயலலிதா கலந்துகொண்டார். அதேபோல, ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற போது அந்த விழாவில் கலந்துகொண்டார் மோடி. அந்தளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பர்கள். அந்த வகையில், பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப் பட்டதும் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி உருவாகும் என எதிர்பார்த்தனர். ஆனால், பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதாவை அ.தி.மு.க.வினர் உயர்த்திப் பிடித்ததால் இந்த கூட்டணி அமையாமல் அ.தி.மு.க. தனித்துப் போட்டி யிட்டது. தனித்து களமிறங்கினாலும் பா.ஜ.க. வையோ மோடியையோ விமர்சிக்காமல் தவிர்த்தார் ஜெயலலிதா. ஜெ.வின் இந்த பாலிஸி, "தேர்தலுக்குப் பிறகு மோடி அரசில் பங்கேற்பதற் கான அஸ்திரம்' என்று எதிர்க்கட்சிகளாலும் சிறுபான்மையின அமைப்புகளாலும் கடுமையாக குற்றம்சாட்டப்பட, அதன் பிறகே பா.ஜ.க.வை தாக்கிப் பேசியவர், "தமிழகத்தில் மோடி அலை எல்லாம் இல்லை. இந்த லேடி அலைதான் வீசுகிறது' என்றார்.


 அதேபோல, மோடியும் "தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. மாறி மாறி ஆட்சி அமைத்தும் எந்த நன்மையும் ஏற்படவில்லை' என விமர்சித்தார். மேலும், "பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நான் பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன்' என்றெல்லாம் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் உள்வட்டாரங்களில் பதிவு செய்தார் மோடி. இப்படிப்பட்ட சூழலால், ஜெயலலிதா -மோடிக்கிடையேயான நட்பில் இடைவெளி அதிகரித்தது.

ஆனால், தேர்தல் முடிவுகள் ஜெ.வே எதிர்பார்க்காதளவுக்கு அ.தி.மு.க.வுக்கு 37 இடங்களை கொடுத்த அதேவேளை, பா.ஜ.க.வுக் கும் தனிப்பெரும்பான்மை கொடுத்து மோடியை அசைக்க முடியாத பிரதமராக்கியது. மோடிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது, தம்முடைய ஆதரவு இல்லாமல் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியாது, நம்முடைய ஆதரவுடன் அமையும் ஆட்சியை நம் விருப்பப்படி ஆட்டி வைக்கலாம் என நினைத்திருந்தவருக்கு,  தமிழகத்தின் 39 இடங்களில் 37 இடங்களை ஜெயித்தும் பா.ஜ.க தனிப்பெரும்பான்மைப் பெற்றதால், சந்தோஷமில்லை.

இந்தநிலையில், ""மத்தியில் அமையும் மோடி அரசு குறித்து தனது அதிகாரிகளுடன் விவாதித் தார் ஜெயலலிதா. அப்போது, "தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கிறது. புதிய அரசிடம் அதிக நிதி கேட்டுப் பெற்றால்தான் நம்முடைய திட்டங்களை கடன் வாங்காமல் நடைமுறைப் படுத்த முடியும்' என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்துதான், மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ஜெ., "தமிழக அரசுடன் நல்லுறவை கடைப்பிடிக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார். மோடியும் "மாநில அரசுடன் நல்லுறவை பேணுவேன்' என்று உறுதி தந்தார். பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் முடிவுகள் வரும் வரை மோடியுடன் ஒரு முறுகல் நிலையை கடைப்பிடித்த ஜெயலலிதா, இந்த வாழ்த்துக்கள் மூலம் நட்பை புதுப்பித்துக்கொண்டார். அதற்கேற்ப மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள டெல்லி செல்ல முடிவு செய்திருந்தார் ஜெயலலிதா. ஆனால், அந்த விழாவுக்கு ராஜபக்சே அழைக்கப்பட்டதால் டெல்லி ப்ரோக்கிராமை ரத்து செய்தார் முதல்வர் என்கிறார்கள்'' கோட்டை அதிகாரிகள். 

மேலும், ""தேர்தல் அறிவிக்கப்பட்டதால் நடப்பு வருடத்திற்கான மானிய கோரிக்கைகள், அது தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் குறித்து தாக்கல் செய்யப்படாமலே பட்ஜெட் முடிந்தது. தேர்தலுக்குப் பிறகு பட்ஜெட் கூட்டம் நடத்த வேண்டியிருப்பதால் அதில் பல்வேறு திட்டங் களுக்கான நிதி ஆதாரங்கள், நிதி ஒதுக்கீடுகள் பற்றிய அறிவிப்புகள் செய்யப்படும். ஆனால், தமிழகத்தின் நிதி ஆதாரம் மோசமாகியிருப்பதால் (தற்போது தமிழக அரசின் கடன் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய். தமிழக அரசுக்கு மேலும் கடன் வழங்க யாரும் முன்வருவதில்லை) மத்திய அரசின் ஆதரவு தமிழக அரசுக்கு அவசியம் தேவை. அதற்காக, மத்திய அரசிடம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்கான உத்தரவாதத்தை பெறும் முயற்சியை எடுக்க வேண்டும் என்பதை நிதித்துறை வட்டாரம் வலியுறுத்தியது. இதனையடுத்தே, சிறப்பு  நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் அலுவலகத்தை தொடர்புகொண்டு உயரதிகாரிகள் விவாதிக்க, "முதலில் தமிழக முதல்வர் டெல்லிக்கு வந்து பிரதமரை சந்தித்து விவாதிக்கச் சொல்லுங்கள். எல்லாம் சரியாகும்' என்று உத்தரவாதம் தரப்பட்டது. அதன்பிறகே, ஜெயலலிதா டெல்லிக்கு செல்வது முடிவானது'' என சுட்டிக்காட்டுகிறார்கள். இதற்கிடையே, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியுடன் 3 முறை பேசியிருக்கிறார் ஜெயலலிதா.

தமிழகத்திற்கான கூடுதல் நிதி பெற முதல்வர் டெல்லி செல்வது குறித்த அறிவிப்பு வெளியான உடனேயே தமிழகத் தொழில் கூட்டமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பிலும் பல்வேறு எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. தமிழ் காமர்ஸ் ஆஃப் சேம்பர்ஸின் தலைவர் சோழநாச்சியாரிடம் நாம் பேசியபோது, ""மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்தினால் மாநிலங்களின் வருவாயில் இழப்பு அதிகரித்து வருகிறது. இந்த வருவாய் இழப்பினை ஈடுசெய்ய மத்திய அரசிடம் முதல்வர் விவாதிக்க வேண்டும். வரிவிதிப்பில் சீரமைப்பு செய்யாதவரை மாநில அரசுகள் திண்டாட வேண்டியதுதான். சென்னை- பெங்களூரு இண்டஸ்ட்ரியல்ஸ் காரிடார் திட்டம் அறிவிப்போடு முடங்கிக் கிடக்கிறது. இந்தத் திட்டம் அறிவித்த சமயத்தில்தான் மும்பை- டெல்லி காரிடார் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆனால், சென்னையோடு தொடர்பு டைய இந்த திட்டம் முடங்கிக் கிடக்கிறது. இந்த திட்டம் நிறைவேறினால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும். இந்த காரிடார் சாலை அமையும் தமிழக பகுதிகளும் தொழில் துறையில் பலனடையும். 

அதேபோல, சென்னை மெட்ரோ ரயில் பாதையின் இரண்டாவது திட்டமும் ஆய்வு பணிகள் முடிந்த கையோடு கிடப்பில் போடப் பட்டுள்ளன. சென்னை-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டமும் முடங்கிக் கிடக்கிறது. இதனை முடிக்க மத்திய அரசு விரும்பிய நிலையில் மாநில அரசும் அதற்கு ஒத்துழைப்பு தந்து திட்டம் விரைந்து முடிக்க முன்வருவதோடு, அதற்காக முடக்கப்பட்டுள்ள நிதியை கேட்டு பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர தமிழகம் முழுவதும் சுமார் 18 ஆயிரம் கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை பணிகள் ஆமை வேகத்தில் இருக்கின்றன. இதனை விரைந்து முடிக்க பிரதமரிடம் வலியுறுத்துவது அவசியம். உள்கட்டமைப்பு வளர்ச்சிகளில் தமிழகம் பின்தங்கியே இருக்கிறது. அதனால் உள்கட்டமைப்பு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது அவசர தேவை. மேலும், காவிரி, முல்லைப்பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அமல்படுத்த கர்நாடக, கேரள அரசுகளை பிரதமர் அழுத்தமாக வலியுறுத்தும் வகையில் முதல்வர் விவாதிப்பது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக, தனிநபர் வருமான வரியின் உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்''’என்று விவரிக்கிறார்.

தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியனின் தலைவர் ராஜாஸ்ரீதர், ""தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது ரயில் சேவைதான். தமிழகத்தில் நடந்துவரும் ஒவ்வொரு ரயில்வே திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்காமல் ஒவ்வொரு வருஷமும் சொற்ப அளவிலேயே நிதி ஒதுக்கப்படுவதால் ரயில்வே திட்டங்கள் விரைந்து முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. அதனால், தமிழகத்தின் ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்கவும் புதிதாக சர்வே எடுக்கப் பட்ட வழித்தடங்களை அமல்படுத்தவும் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும். கொல்கத்தா-மும்பை துறைமுகத்தை இணைத்து சரக்கு போக்குவரத்திற்கு தனி பாதை கண்டது போல, கொல்கத்தா-மும்பை-சென்னை துறை முகத்தை இணைக்கும் வகையில் சரக்கு போக்கு வரத்திற்கு தனி பாதை அவசியம். இதனை சக்சஸ் பண்ணினால் ரயில்வே மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்'' என்கிறார் அழுத்தமாக.

தமிழக மின்வாரிய பொறியாளர் சங்கத்தினரோ, ""மின்வாரியத்தின் கடன்தொகை 50 ஆயிரம் கோடியை தாண்டுகிறது. இதனை சமாளிக்க, மின் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அதை முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும்  கடன்சுமையை குறைப்பதற்கு தோதாக மின் வாரியத்திற்கென சிறப்பு நிதியை கேட்டு பெற வேண்டும். கூடன் குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே கிடைக்க வலியுறுத்து வது அவசர தேவை'' என்கிறார்கள்.

 தமிழக அரசின் நிதித்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ""தமிழக அரசின் மீது கடன்சுமை ஒரு புறம் அழுத்தினாலும், தற்போது தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் முழுமையாக மக்களிடம் கொண்டு செல்ல சுமார் 1 லட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது. கடந்த 2012-2013-ஆம் ஆண்டில் திருத்திய மதிப்பீட்டு திட்ட செலவில் 20 சதவீதம் மத்திய அரசால் குறைக்கப்பட்டுவிட்டது. இதனால் மொத்த திட்டமும் பட்ஜெட் நடைமுறைகளும் குறைக்கப் பட்டு மாநில நிதியும் திட்டங்களை நிறைவேற்று வதும் பாதிக்கப்பட்டது. நிதி ஆதாரங்களைப் பொறுத்த வரையில்  மாநில அரசு கோருவதில் சுமார் 10 சதவீதம்தான் ஒதுக்கீடு செய்கிறது மத்திய அரசு. இந்த போக்கு பா.ஜ.க. ஆட்சியில் இல்லாமல் இருக்க வேண்டும். கூடுதல் நிதி, சிறப்பு நிதி ஒதுக்கீடுகளை தாராளமாக கொடுக்க வைப்பதில் தான் திட்டங்கள் முடங்கிப்போகாமல் பாதுகாக்க முடியும். தமிழக அரசுடன் மத்திய அரசு எந்த அளவுக்கு நல்லுறவைப் பேணுகிறது என்பதை மோடி அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியிலிருந்து தெரிந்து கொள்ளலாம்'' என்கிறார்கள். 

ad

ad